திமுக தொண்டரின் கைதுக்கு முன்னாள் அமைச்சர் காரணமா? மனைவி புகார்

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திமுக தொண்டர் ஒருவர் திமுகவின் மூத்த நிர்வாகிகளைப் பற்றி ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்ததற்காக திமுகவைச் சேர்ந்தவரே புகார் அளித்து சிறையிலடைத்திருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

By: Updated: April 28, 2020, 08:22:11 AM

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், திமுக தொண்டர் ஒருவர் திமுகவின் மூத்த நிர்வாகிகளைப் பற்றி ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்ததற்காக திமுகவைச் சேர்ந்தவர் ஒருவர் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்திருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் கட்சிகளில் கோஷ்டி பூசல், உள்கட்சி பூசல் என்பது எப்போதும் நடக்கக் கூடியதுதான். அப்படி ஏதாவது பிரச்னை முற்றும்போது, கட்சித் தலைமை நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால், இதற்கு மாறாக செய்யாறு திமுகவில் நடந்த உட்கட்சி பூசலில் திமுககாரர் அளித்த புகாரால் அதே திமுககாரர் கைதாகி உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு, கலைஞர் நகரைச் சேர்ந்த திமுகவின் 18வது வட்டப் பிரதிநிதி பாஸ்கரன். அதே செய்யாறு வட்டம், வெங்கோடு கிராமத்தைச் சேர்ந்த திமுக தொண்டர் மு.செல்வகுமார் திமுக கட்சி முன்னோடிகள் பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறு பதிவிட்டதாகக் கூறி அவர் மீது பாஸ்கரன் போலீஸில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, செல்வகுமார் மீது ஏப்ரல் 24-ம் தேதி 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரைக் கைது செய்து திருவண்ணாமலை சிறையில் அடைத்துள்ளனர்.

கொரோனாவால் பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், செய்யாறு திமுகவில் தொண்டர் ஒருவர் திமுகவின் மூத்த நிர்வாகிகளைப் பற்றி விமர்சித்து ஃபேஸ்புக்கில் விமர்சனம் செய்ததற்காக திமுகவைச் நிர்வாகி புகார் அளித்ததன் பேரில் போலீசார் அவரைக் கைது செய்து சிறையிலடைத்திருப்பது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மு.செல்வகுமாரின் மனைவி பத்மா, தனது கணவரின் உயிருக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும், தனது கணவரை விடுவிக்க வேண்டும் என்று முதல்வருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் மேலும் பரபரப்பானது.
இது குறித்து மு.செல்வகுமாரின் மனைவி வெளியிட்டுள்ள வீடியோவில், “தமிழக முதலமைச்சருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் வணக்கம். எனது பெயர் பத்மா, திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், வெங்கோடு கிராமத்தில் வசிக்கிறேன். எனது கணவர் செல்வகுமார் திமுகவில் களப்பணி ஆற்றுபவர். எனது கணவர் சமீபத்தில், முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினருமான எ.வ.வேலு திருவண்ணாமலையில் மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வாங்குவது பற்றி அவருடைய ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதே போல, எ.வ.வேலுவின் மகன் கம்பனை திமுகவில் மாவட்ட செயலாளராக்க ஒன்றிய செயலாளர்களிடம் கையெழுத்து வாங்கியதையும் ஒரு கட்சிக்காரராக நாகரீகமாகத்தான் பதிவிட்டிருந்தார்.

இதற்கு முன்பு அவருடைய நலத்திட்டங்களைப் பற்றி பதிவிடும்போது அவரை அழைத்து உயர்வாக பாராட்டி அனுப்பியிருக்கிறார். இப்போது அவருடைய தவறை சுட்டிக்காட்டும்போது அதை எதிர்கொள்ளாமல், அவர் மீது செய்யாறில் உள்ள அவரது ஆட்களைக் கொண்டு போலீஸில் புகார் கொடுத்து எனது கணவரை நேற்று மாலை வீட்டிலிருந்து விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். பின்னர், அவரை செய்யாறிலிருந்து வந்தவாசிக்கும், வந்தவாசியில் இருந்து செய்யாறுக்கு அலைக்கழித்து விடியற்காலை திருவண்ணாமலை கொண்டு சென்று ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். அவரை பக்கத்தில் உள்ள வந்தவாசியில் சரண்டர் செய்திருக்கலாம். ஆனால், எ.வ.வேலுவின் இடம் திருவண்ணாமலை என்பதால், அவர் இருக்கிற இடத்தில் சரண்டர் பண்ணியிருக்கிறார்கள். இந்த கொரோனா அச்சுறுத்தல் நேரத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இங்கேயும் அங்கேயும் என்று மாறி மாறி அவரை அலைக்கழித்திருக்கிறார்கள். இரவு முழுவதும் அவர் யார்யாருடன் இருந்தார்? என்ன நடந்தது என்று எங்களுக்கு தெரியாது. எங்களுக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இப்போது அவர் திருவண்ணாமலை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். திருவண்ணாமலையில் எனது கணவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படவோ அல்லது அவருக்கு கொரோனா தொற்று ஏற்படவோ அவர் மூலமாக ஆபத்து வர வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் இந்த புகாரை பொறுமையாக விசாரித்திருக்கலாம். இதில் அவசரப்பட வேண்டிய அவசியமில்லை. இது ஒரு வலைதளப் பிரச்னை என்று சொல்கிறார்கள்.

எங்களுக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. எனது கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலோ அல்லது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ அதற்கு முழுக்க முழுக்க எ.வ.வேலுதான் பொறுப்பு. எங்களுடைய குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனது கணவரை மீட்டுத் தாருங்கள். அவர் மீது வீன் பழி சுமத்தியிருக்கிறார்கள். இந்த ஊரடங்கு காலத்தில் அவரை கொண்டுபோனதற்கு புன்புலம் எ.வ.வேலுதான் காரணம். அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படமால் அவரை மீட்டுத்தாருங்கள் அய்யா. அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல் வெளியே கொண்டுவருவதற்கு உதவி செய்யுங்கள்.

வந்தவாசி டிஎஸ்பி, செய்யாறு டிஎஸ்பி, கூடுதல் எஸ்பி ஆகிய 3 பேரும் அவரது(எ.வ.வேலுவின்) பணத்தைப் பயன்படுத்தி எனது கணவரை பலவந்தமாக திருவண்ணாமலைக்கு கொண்டு சென்றுள்ளார்கள். இது மர்மமாக இருக்கிறது. எங்கள் வீட்டுக்கும் எந்த தகவலும் சொல்லவில்லை. அவருடைய போனையும் வாங்கி வைத்துக்கொண்டுள்ளார்கள். இது மனிதநேயத்திற்கே ஒரு கேவலமான செயல். இந்த கொரோனா காலத்தில் ஒரு வலைதள பிரச்னை என்று சொல்லி புகார் செய்து, சமுதாயத்தில் ஒரு பெரிய மணிதர் இப்படி ஒரு கேவலமான விஷயத்தை பண்ணியிருக்கிறார். தயவு செய்து இதற்கு ஒரு விடை தாருங்கள். அய்யா” என்று கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார்.

பத்மாவின் குற்றச்சாட்டு குறித்து, மு.செல்வகுமார் மீது புகார் அளித்த பாஸ்கரனிடம் ஐ.இ தமிழ் பேசிய போது அவர் கூறியதாவது, “மு.செல்வகுமார் எனது நெறுங்கிய நண்பர்தான். அவர் கழகத்தின் முன்னோடிகளை அவதூறாகவும் மரியாதைக் குறைவாகவும் தொடர்ந்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதே போல, கலைஞர் டிவி நிர்வாகத்தைப் பற்றியும் விமர்சித்து பதிவிட்டுள்ளார். அதோடு, முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதி வாங்கியுள்ளதாக தவறான தகவலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். எ.வ.வேலு உண்மையில் மருத்துவக் கல்லூரி தொடங்க அப்படி எதுவும் அனுமதி பெறவில்லை.

செல்வக்குமார், இதற்கு முன்பு திமுகவின் மூத்த நிர்வாகிகள், சாவல்பூண்டியார், முன்னாள் மாவட்ட செயலாளர் சிவானந்தம் போன்றவர்களையும் பற்றி அவதூறாகப் பதிவிட்டுள்ளார்.

கட்சியிலும் யாரும் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பலர் ஆதங்கத்தில் இருந்தாலும் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று அமைதியாக இருந்தனர். இது தொடர்பாக ஏற்கெனவே நான் அவரிடம் பேசியிருக்கிறேன். அவருடைய அவதூறு பதிவுகளால் கடந்த 3 மாதங்களாக நான் அவரிடம் பேசாமல் இருந்தேன். இந்த நிலையில்தான், அவர் மீண்டும் அதே போல அவதூறாக பதிவிட்டதால், நான் அவரிடம் இது பற்றி மீண்டும் பேசினேன். அப்போது அவர் என்னுடன் சண்டைபோட்டதோடு கொலை மிரட்டலும் விடுத்தார். இதையடுத்து, நான் போலீஸில் புகார் செய்தேன். திமுகவைச் சேர்ந்த 5 பேர் சாட்சி கையெழுத்து போட்டிருக்கிறார்கள். போலீசாரும் கூட இதை சமாதானம் செய்யவே முயற்சித்தனர். ஆனால், செல்வகுமார் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். இதையடுத்துதான் அவர் மீது 294(பி), 341, 501, 506(1) இபிகோ 67- மற்றும் தகவல் தொடர்பு குற்றத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

செல்வக்குமார் மனைவி கூறுவது போல, இதில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எந்த தொடர்பும் இல்லை. நானாகத்தான் போலீஸில் புகார் அளித்தேன். செல்வகுமார் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க கட்சிக்காரர்களை ஆலோசித்து புகார் அளிப்பேன்.” என்று கூறினார்.

திமுக மாநில பொருளாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு பெயர் அடிபட்டு வரும் நிலையில், அவரைப் பற்றி விமர்சித்து பதிவிட்ட திமுக தொண்டர் ஒருவர் மீது திமுக நிர்வாகி புகார் அளித்ததன் பேரில் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய மனைவி தனது கணவரின் உயிருக்கு எ.வ.வேலு மூலம் ஆபத்து இருப்பதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருப்பது திமுகவிற்குள் மட்டுமல்ல வெளியேயும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Dmk cadre arrested for derogatory facebook status on ex minister velu by complaint dmk cadre

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X