திராவிட இயக்கத்தின் ஐந்தாம் தலைமுறை தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துள்ளார் என கருணாநிதி நினைவிடத்தில் கூடியுள்ள தி.மு.க தொண்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தி.மு.க இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இலாகா வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: ’திராவிட மாடல் அரசில் பங்கேற்கிறேன்… இது பதவி அல்ல; பொறுப்பு!’ உதயநிதி முதல் ட்வீட்
2021ல் தி.மு.க ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைத்ததிலிருந்தே உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என கட்சியின் பல்வேறு மட்டங்களில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இன்று உதயநிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில், காலை முதலே மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் தி.மு.க தொண்டர்கள் குவிந்து வந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் கலைஞர் நினைவிடத்தில், கலைஞர், முதல்வர் மற்றும் உதயநிதி பெயர்களைச் சொல்லி கோஷங்களை எழுப்பி வந்தனர்.
தென்காசி மாவட்டம், செங்கோட்டை நகரச் செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் கூறுகையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார். திராவிட இயக்கத்தின் நீட்சியாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் வரிசையில், ஐந்தாம் தலைமுறை தலைவராக உதயநிதி ஸ்டாலின் உருவெடுத்துள்ளார். நல்லாட்சியின் தொடர்ச்சியாக மக்களுக்கு பல நன்மைகளை அவர் செய்வார் என நாங்கள் எதிர்ப்பார்க்கிறோம் என்று கூறினார்.
கடலூரில் இருந்த வந்த தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கருப்புசாமி கூறுகையில், உதயநிதி அமைச்சராவது மக்களின் விருப்பம். இதுவே தாமதமாக வழங்கப்பட்டதாக மக்கள் நினைக்கின்றனர். அவருக்கு முன்பே அமைச்சர் பதவி வழங்கியிருக்க வேண்டும். அவருடைய சிந்தனை அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்த கலைஞர் சிந்தனையைப் போல் உள்ளது. இளைஞர்கள் தி.மு.க.,வில் ஆர்வமுடன் சேர உதயநிதி ஸ்டாலின் தான் காரணம். அவருடைய செயல்பாடுகளே இளைஞர்களை கட்சியின் பக்கம் ஈர்த்துள்ளது, என்று கூறினார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து மரியாதை செலுத்தினார். முன்னதாக, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கலைஞர் நினைவிடம் வந்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil