திமுக தலைவர் கருணாநிதி ( DMK Chief M.Karunanidhi Biography ) இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார். 95 வயதான அவரின் வாழ்க்கை பல்வேறு போராட்டங்களும், சாதனைகளையும் படைத்ததாக இருக்கிறது. அதன் விபரம் வருமாறு:
1924 - ஜூன் 3ம் தேதி திருவாரூரை அடுத்த திருக்குவளையில் முத்துவேலர் - அஞ்சுகம் தம்பதியினருக்குப் பிறந்தார்.
1930 - திருக்குவளை ஆரம்பப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்தார். அதே பள்ளியில் 5ம் வகுப்பு வரை மாணவர் தலைவராக விளங்கினார்.
1936 - திருவாரூர் உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பில் கூட சேர்த்துக் கொள்ள இயலாது என தலைமை ஆசிரியர் கஸ்தூர் ஐயங்கார் மறுத்தார்.
பள்ளியில் இடம் தரவில்லையெனில் எதிரேயுள்ள தெப்பக் குளத்தில் குதித்து உயிரை விட்டுவிடுவேன் என்று கூறியது மட்டுமன்றி குதிக்கவும் முயன்றார்.
படிப்பில் அவருக்குள்ள ஆர்வம் கண்டு, 5ம் வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இதுதான் முதல் போராட்டம்.
கருணாநிதியின் வாழ்க்கை - அரசியல்
1938 - இந்தி எதிப்புப் போர் தமிழகத்தில் தொடங்கிய நேரம். நாள்தோறும் மாணவர்களை கூட்டி, கையில் கொடியுடன் இந்தி எதிர்ப்பு முழக்கங்களை முழங்கி கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர் பேரணி நடத்தினார்.
1939 - பள்ளியில் நடைபெற்ற சொற்போட்டியில் ‘‘நடபு’’ என்ற தலைப்பில் பேசினார். அப்போது எட்டாம் வகுப்பு மாணவர். அதுவே அவர் ஆற்றிய முதல் சொற்பொழிவு.
அதே சமயம்தான் சிறுவர் சீர்திருத்தச் சங்கம் அமைத்து வாரம்தோறும் பேச்சுப் பயிற்சி, சீர்திருத்த முழக்கம் செய்தார். அப்போதே மாணவர்களிடையே வார சந்தா வசூலித்து அமைப்பு ரீதியா செயல்பட்டார்.
1940 - மாணவர் ஒற்றுமைக்கென தனி அமைப்பு ஏற்படுத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தினார்.
1941 - தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம் ஆரம்பித்து, இதன் கிளைகளை தஞ்சை மாவட்டத்திலும், தமி மாநிலத்திலும் ஏற்படுத்த அயராது பாடுபட்டார்.
இந்த ஆண்டின் மாணவர்களிடையே எழுத்தாற்றலை வளர்க்க, ‘‘மாணவர் நேசன்’’ என்ற மாத இதழை கையெழுத்துப் பிரதியாக துவக்கி, அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
1942 - தமிழ் மாணவர் மன்றத்தின் ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடி, பேராசிரியர் அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகிய அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களை அழைத்துப் பேச செய்தார்.
அந்த ஆண்டு விழாவின் போது புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அனுப்பிய வாழ்த்துப்பா உணர்ச்சிக் கவியாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியின் போது நிதிப்பற்றாக்குறையாக கைச்சாங்கிலியை அடகு வைத்து சமாளித்தார்.
1942 - பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த ‘‘திராவிட நாடு’’ மூன்றாவது இதழில் ‘‘இளமைப் பலி’’ என்ற இவரது எழுத்தோவியம் வெளி வந்தது.
1942 - திருவாரூர் நடைபெற்ற நபிகள் நாயகம் விழாவுக்கு வருகை தந்த அறிஞர் அண்ணா அவர்கள் ‘‘இளமைப் பலி’’ கட்டுரை எழுதிய கலைஞரை வரச் செய்து நேரில் சந்தித்தார். கருணாநிதியின் எழுத்தாற்றலை அன்றே அண்ணா புகழ்ந்தார்.
1942 - முரசொலி வெளியீட்டு கழகம் என்ற பெயரில் நிறுவனம் ஒன்று ஆரம்பித்து மாத இதழாக ‘‘முரசொலி’’ இதழை வெளியிட்டார். அதில் ‘‘சேரன்’’ என்ற புனைப் பெயரில் கனல் தெறிக்கும் கட்டுரைகளை எழுதினார்.
28.5.44 - திருவாரூர் கருணாநிதி திரையரங்கில் (பேபி டாக்கீஸ்) முதன் முதலாக பழனியப்பன் என்ற சீர்திருத்த நாடகத்தை அரங்கேற்றினார்.
ஆரூர் சுயமரியாதைச் சங்க ஆண்டு விழாவில் கலந்து கொள்ள வந்த பெரியார் அவர்கள் முரசொலி ஏடு கண்டு மகிழ்ந்து மிகச்சிறந்த பணி என்று பாராட்டினார். அன்று முதல் பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கோண்டு ஆவேசமாக பேசத் தலைப்பட்டார்.
1944 - திராவிட நடிகர் கழகத்தை ஆரம்பித்து விழுப்புரத்தில் ‘பழனியப்பன்’ நாடகத்தை நடத்தி அதில் முக்கிய பாத்திரமேற்று நடித்தார்.
1945 - புதுவையில் ‘கெப்ளே’ தியேட்டரில் ‘சாந்தா அல்லது பழனியப்பன் நாடகம்’ பல நாட்கள் தொடர்ந்து நடைபெற்றது. வெற்றிகரமான வசூல் நாடகத்தில் சிவகுரு பாத்திரம் தாங்கி நடித்து மக்களின் பாராட்டுதலைப் பெற்றார்.
புதுவையிலிருந்து வெளிவந்த ‘தொழிலாளர் மித்ரன்’ என்ற பத்திரிகையில் காங்கிரஸைத் தாக்கி ‘அந்தப் பேனா’, ‘காந்தி வைசிராய் ஆனால்...?’ என்ற கட்டுரைகள் எழுதி புதுவைக் காங்கிரஸ்காரர்களின் பகைக்கு ஆளானார்.
1945 - புதுவையில் நடைபெற்ற தி.க. மாநாட்டில் காங்கிரசார் கலவரம் செய்தனர். தலைவர்களை பத்திரமாக அனுப்பிவிட்டு, பாரதிதாசன், காஞ்சி கல்யாணச்சுந்தரம் ஆகியோருடன் சென்று கொண்டு இருந்த போது, ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. இதில் கருணாநிதி காயமடைந்து மயங்கி விழுந்தார்.
அவர் இறந்துவிட்டதாக நினைத்து சாக்கடையில் வீசி சென்றனர். ஒரு தாய் அவரை காப்பாற்ற, அடுத்த நாள் இஸ்லாமியர் போல வேடமணிந்து தப்பி, பெரியாரிடம் சென்றுள்ளார். ‘குடியரசு’ வார இதழில் துணை ஆசிரியரானார்.
1945 - மதுரை சட்ட எரிப்புப் போராட்ட வழக்கு.
1946 - திராவிட கழக கொடிக்கு ஏற்ற மாதிரி அமைத்து நடுவில் உள்ள சிவப்பு நிறத்திற்குத் தன் ரத்ததைப் பயன்படுத்தினார். ராஜகுமாரி படத்துக்கு கதை வசனம் எழுதிக் கொடுத்தார்.
1947 - முரசொலி வார இதழை அச்சில் வெளியிட்டார்.
1948 - திருவையாற்றில் கறுப்புக் கொடிப் போராட்டம்.
1949 - சேலம் மார்டன் தியேட்டரில் கலைப் பணி ஆரம்பம். அங்கே கலைவாணரின் சந்திப்பும், அவருடன் நெருங்கிய நட்பும் வளர்ந்தது.
9.7.49 - பெரியார், மணியம்மை திருமணம் காரணமாக திராவிட கழகத்தில் பிளவு ஏற்பட்டது.
திமுக
17.9.49 - திமுக உதயமானது.
18.9.49 - சென்னை பவளக்காரத் தெருவில் நடந்த திமுக அமைப்புக் கூட்டத்தில் பொதுக் குழு, பிரச்சாரக்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1950 - திருச்சியில் இந்தி எழுத்து அழிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டார்.
1951 - தஞ்சை மாவட்டத்தில் பிரச்சார சுற்றுப் பயணம். ராஜாஜிக்கு கறுப்புக் கொடி காட்டிப் போராட்டம்.
17.11.51 - மதுரையில் பொதுக்குழு கூட்டம். மாநில மாநாட்டு வரவேற்புக் குழுவில் விளம்பரம், கலை நிகழ்ச்சி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1951 டிச. - 13,14,15,16 சென்னை எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில் திமுக முதல் மாநில மாநாடு. 2ம் நாள் சொற்பொழிவாற்றினார். 3ம் நாள் வாழ முடியாதவர்கள் நாடகத்தை நடத்தினார்.
1952 - தஞ்சை மாவட்டப் புயல் நிவாரண நிதிக்காகப் புதுக்கோட்டை பொதுக்குழு தீர்மானப்படி, மாநிலமெங்கும் சுற்றிச் சுழன்று ரூ. 25 ஆயிரம் நிதி திரட்டினார்.
1952 - திருச்சியில் குலக் கல்வித் திட்டம் கண்டன அறிக்கையினை சட்டமன்ற உறுப்பினர் ராஜா சிதம்பரம் அவர்களிடம் ஊர்வலமாக சென்று கொடுத்து மக்கள் சார்பில் போராடும்படிக் கேட்டுக் கொண்டார்.
1953 - திருப்பத்தூரில் கார் விபத்தில் சிக்கினார். கண்ணில் பலந்த அடி.
13.7.53 - சென்னை அறிவகத்தில் அறிஞர் அண்ணா தலைமையில் செயற்குழு கூட்டம். டால்மியாபுரத்தை கல்லக் குடியாக்கக் கோரும் அறப்போருக்கு கருணாநிதி தலைமை வகிப்பதை வரவேற்று வாழ்த்தப்பட்டார்.
15.7.53 - கல்லக்குடி போராட்டம். கருணாநிதி கைது செய்யப்பட்டார்.
16.7.53 - அரியலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
17.7.53 - கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக 6 மாதம் சிறை தண்டனை கொடுக்கப்பட்டது.
1954 - தஞ்சை சமூக சீர்திருத்த அரசியல் மாநாட்டில் சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்படி செல்லுபடியாக்க தீர்மானம் நிறைவேற்றினார்.
1955 - திமுக சார்பாக புயல் நிவாரண நிதி சேகரித்துக் கொடுத்தார்.
1956 - மே 17,18,19,20 திருச்சி இரண்டாவது திமுக மாநில மாநாடு.
1957 - திருச்சி மாவட்டம் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நங்கவரம் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி தேடித்தந்தார்.
1958 - நேருவுக்கு கறுப்புக் கொடி சென்னை விளக்கக் கூட்டத்திற்கு அண்ணாவுஎடன் வரும் போது கைதானார். ராமநாதபுரம் திமுக மாநாட்டில் திமுக மாநாட்டில் உதய சூரியன் நாடகத்தை உருவாக்கி நடித்தார்.
1959 - தஞ்சை எஸ்.எம்.டி. பஸ் தொழிலாளர் போராட்டத்தில் தலையிட்டு வெற்றி. சென்னை மாநகராட்சி தேர்தல் பணிக் குழுவின் முதல்வராக பொறுப்பேற்றார்.
1959 - மாநகராட்சி தேர்தல் வெற்றி விழா கூட்டத்தில் அண்ணா கருணாநிதியை பாராட்டி மோதிரம் பரிசளித்தார்.
1960 - திமுக பொருளாளரானார்.
25.9.1960 - மூன்றாவது தலைமைக் கழக தேர்தலில் கழக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
1961 - மதுரையில் மூன்றாவது திமுக மாநில மாநாடு.
1962 - தஞ்சை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு. சட்டமன்ற எதிர்கட்சி துணைத் தலைவரானார்.
1963 - இந்தி எதிர்ப்புப் போராட்டக் குழு தலைவராக நியமனம்.
1964 - இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார். சென்னை தேனாம்பேட்டையில் கழகத்திற்காக அன்பகம் என்ற கட்டிடத்தை வாங்கிச் சொந்தமாக்கினார்.
1965 - இந்திய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
1966 - டிசம்பரில் சென்னையில் திமுக 4வது மாநில மாநாடு.
முதல்வர்
1967 - சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பொதுப்பணித்துறை அமைச்சரானார்.
1968 - போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்று பேருந்துகளை தேசிய மயமாக்கினார்.
1969 - மார்ச் மாதம் தமிழக முதல்வராக பொறுப்பேற்றார்.
27.7.69 - பொதுக்குழுவில் கழக தலைவராக தேர்வு பெற்றார்.
1969 - ஆகஸ்ட் 15ம் தேதி மாநில முதல்வர்கள் கோட்டையில் தேசிய கொடி ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தார்.
1969 - புதுவையில் திமுக ஆட்சியை உருவாக்கினார்.
1970 - பிரிட்டன், பிரான்சு, மேற்கு ஜெர்மனி, ரோம், அமெரிக்க ஐக்கிய நாடுகள் பயணம்.
1971 - சைதை சட்டமன்ற தொகுதியில் மீண்டும் தேர்வு. இரண்டாவது முறையாக முதல்வரானார்.
1971 - அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது.
1973 - பாகிஸ்தான் எல்லையில் போர் நிதிக்காக 6 கோடி ரூ திரட்டி பிரதமரிடம் வழங்கினார்.
1973 - கை ரிக்ஷாவை ஒழித்தார். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவு கோட்டை அமைத்தார்.
12.5.73 - பூம்புகாரை நிர்மாணித்தார்.
1973 - ராஜாஜிக்கு நினைவிடம் அமைத்தார். தந்தை பெரியார் மறைவின் போது அரசு மரியாதை கொடுத்து அடக்கம் செய்தார்.
7.7.74 - திமுகவின் 5 வது தேர்தலில் இரண்டாவது முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
1974 - மாநில சுயாட்சி தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றினார்.
1975 - எமெர்ஜென்சிக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றினார்.
1975 - டிசம்பரில் கோவையில் திமுகவின் 5 வது மாநாடு.
1976 - காமராஜருக்கு நினைவில்லம் எழுப்பினார்.
1976 - திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
1977 - அண்ணாநகர் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.
1977 - பிரதமர் இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி போராட்டம். மத்தியில் ஜனதா ஆட்சி அமைய உறுதுணையாக இருந்தார்.
18.6.1978 - மீண்டு கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
1980 - அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வானார். சட்டமன்ற எதிர்கட்சி தலைவரானார்.
1982 -திருச்செந்தூர் கோயில் சுப்பிரமணிய பிள்ளை கொலைக்கு நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார்.
1983 - ஈழ தமிழர்கள் குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை கொலையை கண்டித்து போராடினார். எம்.எல்.ஏ. பதவியை ஈழ தமிழர்களுக்காக ராஜினாமா செய்தார்.
1984 - சட்டமேலவை உறுப்பினரானார்.
1986 - இந்தியை எதிர்த்து இந்திய அரசியல் சட்டம் 17வது பிரிவை எரித்து சிறை சென்றார்.
அண்ணா அறிவாலயம்
1986 - தமிழக சட்டமேலவை கலைக்கப்பட்டது.
1987 - மலேசியாவில் ஆறாம் உலக தமிழ் மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
1987 - அண்ணா அறிவாலயம் திறக்கப்பட்டது.
1988 - காங்கிரசுக்கு எதிராக தேசிய முன்னணியை அமைத்தார்.
27.1.89 - துறைமுகம் தொகுதியில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதல்வரானார். ராமாமிர்தம் அம்மையார் பெயரில் இலவச திருமண நிதி உதவி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காவிரி நடுவர் மன்றம் அமைத்தார்.
1990 - திருச்சியில் 5வது திமுக மாநில மாநாடு.
1991 - திமுக ஆட்சி கலைக்கப்பட்டது.
2.6.1992 - கழக அமைப்புத் தேர்தலில் மீண்டும் கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
1993 - கோவையில் 7வது திமுக மாநில மாநாடு.
1996 - திருச்சியில் 8வது திமுக மாநில மாநாடு. சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 4வது முறையாக முதல் அமைச்சரானார்.
1997 - சேலத்தில் திமுக சிறப்பு மாநாடு.
27.7.1997 - திமுகவின் 10வது தலைமை கழக தேர்தலில் 7ம் முறையாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
கருணாநிதி கைது
1999 - தமிழ் இணையம் 99 மாநாட்டை தமிழகத்தில் நடத்தி கணிப்பொறி உலகில் தமிழ் மொழிக்கு உரிய பெருமையும் பீடும் ஏற்படுத்தினார்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்று, முரசொலி மாறனை மத்திய அமைச்சராக்கினார்.
2001 - மேம்பாலம் கட்டியதில் ஊழல் நடந்ததாக கூறி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.
2004 - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்று மத்திய அரசில் திமுக அங்கம் வகிக்க பாடுபட்டார்.
2006 - தமிழகத்தின் 5வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
2009 - ஈழத்தில் நடந்த இறுதிப்போரை கண்டித்து மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தார்.
2011 - சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
2016 - சொந்த தொகுதியான திருவாரூல் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.
2017 - உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார்.
7.8.1918 - 11 நாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் காலமானார்.
தொகுப்பு : ச.கோசல்ராம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.