கல்வி – சமூக நீதி – கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் வரும் ஏப்ரல் 30 மற்றும் மே 1 தேதியில் தேசிய அளவிலான மாநாடு சென்னை கலைவாணர் அரங்கத்தில் திமுக மாணவரணி சார்பாக நடைபெற உள்ளது என்று திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் அறிவித்துள்ளார்.
திமுக மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் சென்னையிலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் கூறியதாவது:
“இந்த மாநாட்டில் ‘நீட், கியூட் போன்ற நுழைவு தேர்வுகளும் அதன் பின்னணியில் உள்ள மர்மங்களும், தேசியக் கல்விக் கொள்கையிலுள்ள பாசிச நோக்கம், கல்விக் கொள்கைகளின் மாநில சுயாட்சி, இந்தி திணிப்பின் எதிர்ப்பும், காவியமாகும் கல்வி நிறுவனங்கள், கூட்டாட்சிக்கு எதிராக அச்சுறுத்தல்களும், சிதையும் ஜனநாயக நிறுவனங்கள், திராவிட இயக்கம் மற்றும் பெண்களின் முன்னேற்றம், திராவிட மாடலின் வளர்ச்சி, இந்திய ஒன்றியமும் கூட்டாட்சித் தத்துவமும்’ என பத்து தலைப்பின் கீழ் நீதியரசர்கள், கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என பல்வேறு முக்கிய பிரமுகர்கள் மாணவர்களுடன் கலந்துரையாட உள்ளனர்.
இந்த மாநாட்டில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், கழக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.
மேலும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி துவக்கி வைக்கவிருக்கிறார். தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்துசமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அம்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
முக்கிய அரசியல்வாதிகளான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹீவா மொய்த்தா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ்குமார், ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் சட்ட அமைச்சர் சோம்நாத் பாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஜீ.எம். அக்பர் அலி, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன், பத்திரிக்கையாளர் ஏ.எஸ்.பன்னேர்செல்வன் மற்றும் பல்வேறு அரசியல்வாதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியின் மாணவர் அணிகளும் கலந்து கொள்ளவுள்ளது. மேலும் சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்டத்தில் இருக்கும் மாணவர்களும் தெலுங்கானா கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 1000 முதல் 1500 மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்” என தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil