ஆட்சியை தக்க வைக்க எந்த அதிரடிக்கும் தயார் : எடப்பாடியின் இரட்டை ‘செக்’

திமுக - டிடிவி.தினகரன் மறைமுக கூட்டணி, அதிமுக ஆட்சியை கவிழ்க்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் ‘செக்’ வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுக – டிடிவி.தினகரன் மறைமுக கூட்டணி அமைத்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில், இரு தரப்புக்கும் ‘செக்’ வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

திமுகவுக்கும், டிடிவி.தினகரனுக்கும் இப்போதைய பொதுவான வில்லன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசுதான். இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினால்தான் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் ஆட்சிக் கனவுக்கு வழி திறக்கும். அதேபோல எடப்பாடியின் வசம் இருந்து ஆட்சி நழுவினால் மட்டுமே, அதிமுக.வையும் அதன் தலைமை அலுவலகத்தையும் டிடிவி.தினகரனால் கைப்பற்ற முடியும்.

இந்தப் பொது நோக்கத்திற்காக திமுக.வும், டிடிவி.தினகரனும் மறைமுகமாக கை கோர்த்திருப்பதாக தகவல்கள் வருகின்றன. டிடி வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என தமிழக ஆளுனர் வித்யாசாகர்ராவிடம் கடிதம் கொடுத்தனர். தொடர்ந்து, பாண்டிச்சேரியில் அவர்கள் முகாமிட்டிருக்கிறார்கள்.

cm edappadi palaniswamy, aiadmk, aiadmk merger, ttv.dhinakaran and m.k.stalin

மு.க.ஸ்டாலின்

இவர்கள் கடிதம் கொடுத்த சில மணி நேரங்களில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின், ‘உடனே சட்டமன்றத்தை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும்’ என ஆளுனர் வித்யாசாகர்ராவுக்கு கடிதம் கொடுத்தார். அடுத்த நாளே அதே கடித நகலில் ஸ்டாலின் பெயருக்கு பதிலாக தனது பெயரை சேர்த்து, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமியும் ஒரு கடிதம் கொடுத்தார்.

இதெல்லாம் ஆட்சியை கவிழ்க்க, திமுக.வும் டிடிவி.தினகரன் அணியும் நேர்கோட்டில் பயணிப்பதன் அறிகுறிதான். தவிர, டிடிவி.தினகரன் அணிக்கு கணிசமான எம்.எல்.ஏ.க்களை அனுப்பி வைத்ததிலும், இன்னமும் ஆங்காங்கே சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுப்பதிலும் திமுக பங்கு இருப்பதாக ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால் இந்த இரு தரப்புக்கும் எடப்பாடி வைத்திருக்கும் ‘செக்’தான் ஹாட் டாக்!

எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும், தங்களின் எம்.எல்.ஏ. பதவி பறிபோகாது என்பதுதான் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 19 பேருக்கும் இருந்த பெரிய நம்பிக்கை! காரணம், கர்நாடகாவில் எடியூரப்பா முதல்வராக இருந்தபோது அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பாஜக எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். ஆனால் உச்சநீதிமன்றம், அந்த நடவடிக்கையை ரத்து செய்தது.

cm edappadi palaniswamy, aiadmk, aiadmk merger, ttv.dhinakaran and m.k.stalin

டிடிவி.தினகரன்

இந்த உத்தரவை சுட்டிக்காட்டியே கவர்னரிடம் டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் கடிதம் கொடுத்தனர். தவிர, இக்கட்டான இந்தத் தருணத்தில் சபாநாயகர் எடுக்கும் முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் பெறும். அதனாலேயே சபாநாயகர் தனபாலை முதல்வர் ஆக்கவேண்டும் என ‘ஐஸ்’ வைத்தும் பார்த்தது டிடிவி.தினகரன் அணி. ஆனால் இந்த வியூகம் எடுபடவில்லை.

ஆகஸ்ட் 24-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டையில் சபாநாயகர் தனபாலை சந்தித்து சிறிது நேரம் பேசினார். அடுத்த சில நிமிடங்களில் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன், சபாநாயகரை சந்தித்து, ‘19 எம்.எல்.ஏ.க்களின் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என மனு கொடுத்தார். அவரது மனுவை ஏற்று சபாநாயகர் தனபாலும், மேற்படி 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியதுதான் டிடிவி.தினகரன் அணியினருக்கு பெரிய ஷாக்!

‘சட்டமன்றத்தில் தனது உத்தரவுக்கு எதிராக கட்சி எம்.எல்.ஏ.க்கள் செயல்பட்டால் மட்டுமே கொறடா நடவடிக்கை எடுக்க முடியும். கவர்னரிடம் மனு கொடுத்ததற்காக நடவடிக்கை எடுப்பது, அரசியல் சாசனம் வழங்கிய அடிப்படை உரிமைக்கு எதிரானது. எனவே இது செல்லாது’ என டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூறுகிறார்கள்.

‘விதிமுறை இருக்கிறதா, இல்லையா? என்பது முக்கியமல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பு உறுதியானால், 19 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்படும். அதன்பிறகு அவர்கள் நீதிமன்றம் சென்று போராடி, பதவியை தக்கவைக்க குறைந்தபட்சம் 6 மாதங்கள் ஆகும். அதற்குள் அந்த 19 பேரில் 10 பேர் எடப்பாடி அணிக்கு வந்து விடுவார்கள். எனவே எங்களுக்கு தேவை, கால அவகாசம்தான். அதற்காகவே இந்த ஆட்டம்!” என்கிறார்கள், எடப்பாடி தரப்பு பிரமுகர்கள்.

டிடிவி. தரப்புக்கு இப்படி நெருக்கடி கொடுத்த அதே வேளையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி நெருக்கடி கொடுக்கும் திமுக.வை நோக்கியும் அஸ்திரத்தை வீச ஆரம்பித்துவிட்டார் எடப்பாடி! அதுதான் வருகிற 28-ம் தேதி கூட இருக்கும் சட்டமன்ற உரிமைக்குழு! ஜூலை 19-ம் தேதி ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளுடன் சட்டமன்றத்திற்கு வந்ததை உரிமைக்குழு விசாரித்து, உத்தரவு பிறப்பிக்க இருக்கிறது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி 18-ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தின்போது சபாநாயகர் தனபாலிடம் அத்துமீறிய திமுக எம்.எல்.ஏ.க்கள் 7 பேரை 6 மாதங்கள் ‘சஸ்பெண்ட்’ செய்ய உரிமைக்குழு பரிந்துரை செய்தது. ஆனால் அவர்கள் 7 பேரும் மன்னிப்பு கடிதம் கொடுத்ததால், மன்னிப்பு வழங்கி ‘பெருந்தன்மை’ காட்டினார் சபாநாயகர் தனபால்.

அப்போதே மீண்டும் சபைக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களை செய்யமாட்டோம் என திமுக எம்.எல்.ஏ.க்கள் எழுதி கொடுத்திருக்கிறார்கள். எனவே மீண்டும் ஒரு ‘பெருந்தன்மை’யை அவர்கள் எதிர்பார்க்க முடியாது. குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது.

ஆக. டிடிவி.தினகரன், திமுக என இரு தரப்பிலும் சுமார் 40 எம்.எல்.ஏ.க்கள் சபைக்கு வர முடியாத சூழல் இருந்தால், சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிப்பது எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஒரு பிரச்னையாக இருக்கப் போவதில்லை. ஆட்சியை தக்கவைக்க எந்த ஆட்டத்திற்கும் எடப்பாடி தயாராகிவிட்டார் என்பதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close