டிஜிபி வந்தால் தான் பேசுவேன்; துரைமுருகன் வற்புறுத்தலால் கோட்டைக்கு வந்த டி.ஜி.பி!

அவைக்கு என்று ஒரு மரபு உண்டு. இந்த விவாதத்தில் நான் பேச வேண்டுமானால், டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வர வேண்டும்

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் ஜூன் 14–ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 14 நாட்கள் பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த விவாதத்தில், எதிர்க்கட்சியினர் பங்கேற்றுக் கேள்விகள் எழுப்பி வருகின்றனர். அவர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அவ்வப்போது வெளிநடப்புகளும் இருந்து வருகிறது. இந்த நிலையில், காவல் மற்றும் தீயணைப்பு துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, காவல்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் ஒரு நாள் மட்டுமே நடைபெற்றது. ஆனால், இம்முறை இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. அதாவது, இன்றும், நாளையும் காவல் மற்றும் தீயணைப்புத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேச எழுந்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், ” தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும் போது, காவல்துறை டிஜிபி, ஆணையர் ஆகியோர் இருக்க வேண்டும். அவர்கள் எங்கே? அவைக்கு என்று ஒரு மரபு உண்டு. இந்த விவாதத்தில் நான் பேச வேண்டுமானால், டிஜிபி ராஜேந்திரன் சட்டப்பேரவைக்கு வர வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “இங்கே தலைமை மற்றும் உள்துறை செயலாளர்கள் இருக்கிறார்கள். அதனால் நீங்கள் பேசுங்கள். என்னுடைய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் துரைமுருகன் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், மானியக் கோரிக்கை விவாதத்தை பிரச்சனையுடன் தொடங்குவது வருத்தம் அளிக்கிறது” என்றார்.

இதன்பின், துரைமுருகன் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட முதல்வர் பழனிசாமி, சட்டப்பேரவைக்கு வருமாறு டிஜிபி-க்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, சட்டப்பேரவைக்கு டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உடனடியாக வந்தார்.

முன்னதாக, குட்கா நிறுவனங்களிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு விற்பனையை அனுமதித்ததாக வருவாமன வரித்துறையினரின் தகவலின் பேரில், டி.ஜி.பி. ராஜேந்திரன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழ்நிலையில், டி.ஜி.பி. ராஜேந்திரனுக்கு மேலும் 2 ஆண்டுகள் பதவி நீட்டித்து கடந்த ஜூன் 30-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close