DMK Election Expenditure 2019: நன்கொடை பெற்று கட்சிகள் தேர்தலை எதிர்கொள்வது புதிதல்ல; பெரிய பாவமும் அல்ல. ஆனால் ஒரு மாநிலக் கட்சியிடம் இருந்து இரு தேசியக் கட்சிகள் பெரும் தொகை தேர்தல் நிதியாக பெற்றிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. அதுவும் இடதுசாரிகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், வீரியமான விமர்சனங்கள் வந்து விழுகின்றன.
2019 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வலிமையான கூட்டணியை திமுக கட்டமைத்தது. புதுவை உள்பட 40 தொகுதிகளில் தேனியை தவிர்த்த 39 தொகுதிகளை இந்த அணி வெற்றியை வாரிச் சுருட்டியது. ஒவ்வொரு கட்சியும் தங்களது தேர்தல் செலவுக் கணக்கை அஃபிடவிட்டாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை. அந்த அடிப்படையில் கடந்த (செப்டம்பர்) 20-ம் தேதி திமுக தனது அஃபிடவிட்டை சமர்ப்பித்தது.
DMK Election Expenditure 2019
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சமர்ப்பித்த அந்த அஃபிடவிட் தற்போது இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் உள்ள விவரங்கள்தான் சர்ச்சைக்கு தீனி போடுகின்றன. சுமார் 79 கோடி ரூபாயை செலவுக் கணக்காக காட்டியிருக்கும் திமுக, அதில் ரூ40 கோடி ரூபாயை கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் செலவுக்கு வழங்கியதாக கணக்கு காட்டியிருக்கிறது.
நிதி பெற்றதாக அதில் பட்டியல் இடப்பட்டிருக்கும் கூட்டணிக் கட்சிகள் மூன்றுதான். 1. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- ரூ15 கோடி, 2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி- ரூ10 கோடி, 3. கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி- ரூ15 கோடி. திமுக அணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மதிமுக, ஐ.ஜே.கே என மேலும் 4 கட்சிகள் போட்டியிட்ட போதும், அவற்றுக்கு திமுக நிதி கொடுத்ததாக இந்த செலவுக் கணக்கில் இல்லை.
தவிர, திமுக சின்னத்தில் போட்டியிட்டவர்களில் பாரிவேந்தரை தவிர்த்து, ஏனைய 23 பேருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளர் ரவிகுமார், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ், மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஆகியோரும் ரூ50 லட்சம் பெற்றவர்களின் பட்டியலில் வருகிறார்கள்.
இதில் சிக்கல் என்னவென்றால், திமுக தனது தேர்தல் செலவுக் கணக்கில் மொத்தத் தொகையையும் கணக்கு காட்டியிருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ10 கோடி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ15 கோடி, கொங்கு கட்சிக்கு ரூ15 கோடி ஆகியவற்றை ஆன்லைன் வங்கிப் பரிவர்த்தனை மூலமாக அனுப்பியதாக குறிப்பிட்டிருக்கிறது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது தேர்தல் செலவுக் கணக்கில் இதுவரை திமுக.விடம் பணம் பெற்றதாக தெரிவிக்கவில்லை.
தவிர, ஒரு மக்களவைத் தொகுதிக்கு தேர்தல் ஆணையம் நிர்ணயித்திருக்கும் வேட்பாளர் செலவு வரம்பு ரூ70 லட்சம் மட்டுமே! தமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டதே தலா 2 தொகுதிகள்தான். எனவே இவ்வளவு பெரிய தொகையை அந்தக் கட்சிகள் திமுக.விடம் இருந்து ஏன் பெற வேண்டும்? என்கிற கேள்விகள் எழுகின்றன.
திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையுமே ஊழல் கட்சிகளாக கடந்த காலங்களில் இடதுசாரிகள் விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்கு ஆதரவான கட்சிகள் அவை என்கிற விமர்சனத்தையும் இடதுசாரிகள் முன்வைத்தே வந்திருக்கிறார்கள். ‘மதவாதத்தை வீழ்த்த கூட்டணி’ என்கிற ரீதியிலேயே தங்கள் கூட்டணிக்கு நியாயம் கற்பித்து வந்தனர். தற்போது எந்தக் கட்சியை ஊழல் கட்சி, கார்ப்பரேட்களுக்கு ஆதரவான கட்சி என விமர்சனங்களை வைத்தார்களோ அதே கட்சியிடம் நிதி பெற்றிருப்பதும் பெரும் முரணாக முளைத்து நிற்கிறது.
அரசியல் ரீதியாக, தர்க்க ரீதியாக இந்த நிதி விவகாரம், இடதுசாரிகளுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதை தேர்தல் செலவுக் கணக்கில் திமுக காட்டியிருப்பதால், இடதுசாரிகளும் இதை தேர்தல் செலவுக் கணக்கில் காட்டவேண்டி வரலாம். ஆனால் அகில இந்திய அளவில் சுமார் 7 கோடி ரூபாய் மட்டுமே மார்க்சிஸ்ட் கட்சி இதுவரை தனது தேர்தல் செலவுக் கணக்கில் காட்டியிருக்கும் நிலையில், மேற்கொண்டு மேற்படி 10 கோடிக்கும் கணக்கு காட்டுமா? இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ரூ15 கோடி ரூபாய்க்கு தேர்தல் செலவுக் கணக்கை சமர்ப்பிக்குமா? அல்லது, கட்சிக்கான நன்கொடையாக காட்டுவார்களா? என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன.
தலா இரு தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்ட இடதுசாரிகள் இவ்வளவு பெரும் தொகையை தேர்தல் செலவுக்காக பெற்றிருப்பது சட்ட ரீதியாகவும் சிக்கல்களை உருவாக்கலாம் என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். பெரிய அரசியல் கட்சிகள் தங்களது சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு தேர்தல் நிதி கொடுப்பது புதிதில்லை என்றாலும், அதை அதிகாரபூர்வமாக, ஆவணப் பூர்வமாக கொடுத்திருப்பது இந்தியாவில் இதுதான் முதல் முறை. எனவே இது தொடர்பான விவாதங்களை தவிர்க்க முடியாது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.