திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைந்ததைத் தொடர்ந்து திமுகவில் பொதுச்செயலாளர் பதவி காலியானது. இதனால், பொதுச் செயலாளர் பதவிக்கு திமுகவின் மூத்த தலைவர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. அந்த வரிசையில் ஆ.ராசாவின் பெயரும் திமுகவினரால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.
பேராசிரியர் அன்பழகன் முதுமை காரணமாக உடல்நிலை சரியில்லாமல் ஓய்வில் இருந்தபோதே அவருக்கு அடுத்து அந்தப் பதவிக்கு யார் வருவார்கள் என்று பேசப்பட்டது. இப்போது அவரது மறைவுக்குப் பிறகு திமுகவிலும் அரசியல் வட்டாரத்திலும் வெளிப்படையாகப் பேசப்படுகிறது.
திமுகவின் மூத்த தலைவரும் திமுக பொருளாளருமான துரைமுருகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் எனவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு பொருளாளர் பதவி வழங்கப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் பலரின் யூகமாக இருந்தது. ஆனால், அரசியலில் எந்த யூகமும் அப்படியே நடக்கும் என்று சொல்ல முடியாது. அப்படித்தான் திமுக பொதுச்செயலாளர் பதவி விஷயத்திலும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக காற்றின் திசை மாறிக்கொண்டிருக்கிறது.
திமுக பொதுச்செயலாளர் பதவி யாருக்கு என்று பேசத் தொடங்கியபோதே, துரைமுருகன், எ.வ.வேலு வரிசையில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் பெயரும் அடிபட்டது. ஒரு தரப்பினர் கட்சியில் மூத்த தலைவர்கள் இருக்கும்போது அவருக்கு வாய்ப்புகள் குறைவு என்று கருதினர். ஆனால், திமுகவிலேயே கனிசமானோர் ஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி அளிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். திமுகவுக்குள் மிகவும் அமைதியாக ஒலிக்கத் தொடங்கிய அந்த குரல் இப்போது வலிமையாக ஒலிக்கிறது.
இன்று பாஜக தேசியத் தலைமை தமிழக பாஜக தலைவராக தலித் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை அறிவித்திருப்பது திமுகவுக்கு மேலும் அழுத்தத்தை அளித்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திமுகவில் மூத்த தலைவர்கள் இருந்தாலும் ஆ.ராசாவுக்கு பொதுச் செயலாளர் பதவி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் திமுகவினரிடம் பேசினோம்.
“திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆ.ராசா எல்லா வகைகளிலும் தகுதியானவர். பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுபவர். அண்ணாவின் வழியில் நாடாளுமன்றத்தில் அறிவுப்பூர்வமாக பேசுபவர். கலைஞரை போற்றுபவர். தலைவர் ஸ்டாலின் மனம் வருந்தும்படி எதையும் பேசாதவர். திமுகவை எல்லா வகையிலும் தாங்குபவர். இது மட்டுமில்லாமல் ஆ.ராசா தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திமுக உயர் மட்டத் தலைவர்கள் முதல் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், அடிமட்டத் தொண்டர்கள் வரை அனைவரையும் மரியாதையாக அரவனைத்துச் செல்பவர்.
சென்னையில் ஏதாவது திமுக பொதுக்கூட்டம், கட்சி நிர்வாகக்குழு கூட்டம் என்ன நடந்தாலும் சென்னை வரும் திமுக காரர்கள் பலரும் சென்னையில் உள்ள ஆ.ராசா வீட்டுக்கு செல்வார்கள். வீட்டுக்கு வரும் கட்சிக்காரர்கள் அனைவரையும் ஆ.ராசா நலம் விசாரித்து அவர்களுக்கு சாப்பாடு போட்டு அனுப்புவார். இதனால், ஆ.ராசாவுக்கு திமுகவினரிடையே நல்ல பெயர் உள்ளது.
ஆ.ராசா 2ஜி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டபோது, தனக்காக வாதிட வழக்கறிஞர் யாரையும் வைக்காமல் அந்த வழக்கின் உண்மைத் தன்மையை அறிந்து சட்ட நுணுக்கங்களை அறிந்து தானே வாதிட்டு வெற்றி பெற்றார். அப்போதே அவருடைய செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அந்தளவுக்கு அவர் ஒரு வழக்கறிஞராகவும் வாதத் திறன் கொண்டவர்.
கலைஞர் இருக்கும்போது ஏதேனும் பொதுக்கூட்டம், விழா நிகழ்வு என்றால் கலைஞர் பங்கேற்கும்போது, அந்த நிகழ்ச்சியில் ஆ.ராசா இருந்தால் பலரையும் விட்டுவிட்டு ஆ.ராசாவின் தோளில் கைகளைப் போட்டுக்கொண்டு நடக்க அழைப்பார். கலைஞர் ஆ.ராசா தோளில் கைபோட்டு நடக்க விரும்பிய அளவுக்கு கலைஞரின் இதயத்தில் இடம் பெற்றவர்.
அதே நேரத்தில், திமுகவின் பொதுச் செயலாளர் பதவியில் இருப்பவர் அறிவுப்பூர்வமானவராகவும் நிதானமானவராகவும் கட்சித் தலைமையை புரிந்துகொண்டவராகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் ஆ.ராசா அறிவுப்பூர்வமாகவும் வாதத்திறமையோடும் பேசக் கூடியவர்.
அதோடு, சமூக நீதி பேசும் திமுக, கட்சியில் தலித்துகளுக்கு போதிய பிரதிநிதித்துவம் தருவதில்லை என்று தலித் அறிவுஜீவிகளும் தலித் அரசியல் ஆர்வலர்களும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அவர்களின் குற்றச்சாட்டை பொய் என்று நிரூபிக்க திமுக ஆ.ராசாவுக்கு பொதுச்செயலாளர் பதவி அளித்து தனது சமூக நீதி பாரம்பரியத்தை நிலை நாட்டலாம்.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்த எல்.முருகனை நியமித்திருக்கும்போது திமுக ஏன் ஆ.ராசாவை பொதுச் செயலாளராக நியமிக்க கூடாது என்று அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது. இந்த கேள்விக்கும் ஆ.ராசாவை பொதுச்செயலாளராக நியமிப்பது சரியான பதிலடியாக இருக்கும்.
ஆ.ராசா இதுவரை தலைவர் ஸ்டாலின் மனம் வருந்தும்படி எதையும் பேசியதில்லை. கலைஞருக்கு பேராசிரியர் அன்பழகனைப் போல, தலைவர் ஸ்டாலினுக்கு ஆ.ராசா உறுதுணையாக இருப்பார். தலைவர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்” என்று திமுகவில் ஆ.ராசாவை பரிந்துரைப்பவர்கள் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.