பெட்ரோ கெமிக்கல் மண்டல அனுமதிக்கு தி.மு.க.வே காரணம் என காவிரி பாதுகாப்பு பிரசார தொடக்க விழாவில் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
பா.ம.க. இளைஞரணி தலைவரும் தருமபுரி எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் அண்மையில் தாமிரபரணியை பாதுகாக்க வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரப் பயணம் மேற்கொண்டார். அடுத்தகட்டமாக காவிரியை பாதுகாக்க வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் 3 நாள் பிரசாரப் பயணம் நடத்துகிறார்.
இந்தப் பிரசாரப் பயணம் இன்று (ஜூலை 28) ஒக்கேனக்கலில் தொடங்கியது. பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, விவசாயிகள் சங்க கூட்டமைப்பு தலைவரான தெய்வசிகாமணி ஆகியோர் கலந்துகொண்டு பிரசாரப் பயணத்தை தொடங்கி வைத்தனர். குறிப்பிட்ட பகுதிகளில் டூ வீலரில் பயணித்தபடி, காவிரி பிரச்னையை விவரிக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் அன்புமணி வழங்கினார்.
ஒக்கேனக்கலில் தொடங்கிய அவரது பயணம், பெண்ணாகரம் , மேச்சேரி, மேட்டூர், கொடுமுடி வழியாக ஈரோட்டில் முதல் நாள் நிறைவு பெறுகிறது. இரவு அங்கு விழிப்புணர்வு பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
2-ம் நாள் (29-ம் தேதி) கரூர் மாவட்டம் நொய்யலில் தொடங்கி வேலாயுதம்பாளையம், வாங்கல், புலியூர், கிருட்டிராயபுரம், குளித்தலை, முசிறி வழியாக சமயபுரத்தில் நிறைவு செய்கிறார். அன்று இரவு திருச்சி மாநகரத்தில் நடைபெரும் பொதுக்கூட்டத்தில் அன்புமணி உரையாற்றுகிறார்.
3-வது நாள் (30-ம் தேதி) கல்லணையில் தொடங்கி திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு, கும்பகோணம், கதிராமங்கலம், மயிலாடுதுறை வழியாக பூம்புகாரில் நிறைவு செய்கிறார். அன்று இரவு அங்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
முன்னதாக இன்று தொடக்க நிகழ்ச்சியில் அன்புமணி பேசியதாவது.. ‘1924-ம் ஆண்டு ஒப்பந்தப்படி காவிரியில் நமக்கு ஆண்டுக்கு 575 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டது. 50 ஆண்டுகால அந்த ஒப்பந்தத்தை 1974-ல் தி.மு.க. அரசு புதுப்பிக்க தவறியது. இதுதான் பிரச்னையே! அதன்பிறகு 1970 முதல் 1974-க்குள் 5 புதிய அணைகளை கர்நாடகம் கட்டியது. இதனால் தமிழக உரிமை பறிபோனது. இதுதான் 50 ஆண்டுகள் தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் செய்த சாதனை.
விவசாயிகள் சங்கம் தொடர்ந்த வழக்கு காரணமாக நடுவர் மன்றம் அமைந்தது. அதன் உத்தரவை அரசிதழில் சேர்க்கக்கூட 6 ஆண்டுகள் ஆனது. பிறகு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசிதழில் சேர்த்தனர். நடுவர் மன்ற உத்தரவுப்படி அரசிதழில் சேர்த்த 6 மாதங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 4 ஆண்டுகளாகியும் அது நடக்கவில்லை. காரணம், பா.ஜ.க.வுக்கு கர்நாடகாவில் தேர்தல் வெற்றி முக்கியம். இங்கு ஆட்சியில் இருக்கும் அடிமைகளும் அதை தட்டிக் கேட்க தயாராக இல்லை.
நாடாளுமன்றத்தில் காவிரி பிரச்னையை நான் எழுப்பியபோது மொத்த கர்நாடக எம்.பி.க்களும் எழுந்து என்னை பேசவிடாமல் தடுத்தார்கள். ஆனால் தமிழகத்தில் இருந்து வந்த அ.தி.மு.க.வின் 37 எம்.பி.க்களும் அப்போது அமைதியாகவே இருந்தார்கள். எனவே மக்கள்தான் விழிப்புணர்வு பெறவேண்டும்.
ஜல்லிக்கட்டுக்காக போராடினீர்கள். அது தமிழர்களின் அடையாளம். காவிரி, நமது உரிமை. இதற்காகவும் போராடவேண்டாமா? 8 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் இது. சுமார் 5 கோடி தமிழ் மக்களின் குடிநீர் ஆதாரம் இது. இதை பாதுகாக்க நாம் துடித்து எழவேண்டும்.
ஆனால் நம் மக்கள் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜெயிக்குமா? அதைக் காப்பாத்தலாமா? யாருக்கு ஓட்டுப் போடுறது?ன்னு விவாதிக்கிறாங்க. உங்களை தட்டியெழுப்பவே இந்த பிரசார பயணத்தை நடத்துகிறேன்.
இது மட்டும் பிரச்னை இல்லை. கர்நாடகாவில் மங்களூரில் இருந்து இங்கே மேட்டூர் வரை காவிரியில் கழிவுகள் கலக்கின்றன. அதற்கு தீர்வு தேவை. மீத்தேன் திட்டங்கள், பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் என அறிவித்து காவிரி படுகையை நாசமாக்க பார்க்கிறார்கள். பெட்ரோ கெமிக்கல் மண்டலத்திற்கு அனுமதி கொடுத்ததே, அழகிரி அந்தத் துறையின் மத்திய அமைச்சராக இருந்தபோதுதான். அப்போது தி.மு.க. கொடுத்த அனுமதிக்கு இப்போது அ.தி.மு.க. அரசும் ஒப்புதல் கொடுக்கிறது.
பெட்ரோ கெமிக்கல் மண்டலம் அமைந்தால், 55,000 ஏக்கர் நிலம் பாளாகும். 44 கிராமங்கள் பாதிக்கப்படும். எனவே இதையெல்லாம் நீங்கள் புரிந்துகொண்டு பா.ம.க.வின் போராட்டங்களுக்கு துணை நிற்க வேண்டும்.’ என கூறினார் அன்புமணி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.