அலுவலகத்தில் வைத்து தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூரை அடுத்த, பிள்ளைப்பாக்கம், பள்ளத் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். பிள்ளைப்பாக்கம் ஊராட்சியின் தி.மு.க செயலாளராக இருந்து வந்தார். தவிர, ரியல் எஸ்டேட், தனியார் கம்பெனிகளில் ஸ்கிராப் எடுப்பது மற்றும் கட்டுமானம், கட்டுமான பொருட்கள் சப்ளை செய்தல் ஆகியவற்றை தொழிலாக செய்து வந்தார்.
இவருக்கு மாரி என்ற மனைவியும், ராஜ்குமார் என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் இருக்கிறார்கள்.
நேற்று காலை திமுக சார்பில் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில், ரமேஷ் தலைமையில் ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூரில் மதியம் ஊராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த இரு கூட்டங்களையும் முடித்துவிட்டு, அலுவலகத்துக்குக் கிளம்பினார் ரமேஷ்.
அப்போது 10 பேர் கொண்ட கும்பல் அலுவலகத்தில் புகுந்து ரமேஷை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு, தப்பிச் சென்றனர். அங்கிருந்த பெண் ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு, கொலைக்குக் காரணம், தொழில் போட்டியா அல்லது அரசியல் பின்னணியா என்ற கோணத்தில், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பட்டப்பகலில் தி.மு.க பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.