திமுக தலைவர் கருணாநிதி, ஒரு வருடத்திற்குப் பின் வீட்டைவிட்டு வெளியே வந்தது அரசியல் வட்டாரத்தில் ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.
உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி, கடந்த ஒரு வருடமாக கோபாலபுரம் வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். அவரால் கட்சிப் பணிகளைக் கவனிக்க முடியாததால், அவருடைய மகன் மு.க.ஸ்டாலின் செயல் தலைவராக இருந்து பணிகளைக் கவனித்து வருகிறார்.
முரசொலி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிடும் கருணாநிதி
கடந்த வருடத்தில் சில முறை அளவுக்கு அதிகமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார். அவ்வப்போது சில அரசியல் தலைவர்களும் அவரைச் சந்தித்து வந்தனர்.
வீட்டாரின் கவனிப்பில் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறிவந்த கருணாநிதி, கடந்த வாரம் கொள்ளுப்பேரனுடன் கொஞ்சி விளையாடிய வீடியோ வெளியானது. தன் மகன் மு.க.தமிழரசுவின் பேரனுடன் அவர் கொஞ்சி விளையாடிய அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் டிரெண்டானது.
இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு திடீர் வருகை தந்த கருணாநிதி, முரசொலி பவளவிழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன், பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் உடனிருந்தனர்.
முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதி
முரசொலி பத்திரிகை தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன. முரசொலிக்கு இது பவள விழா என்பதால், அதன் புகைப்படக் கண்காட்சி ஆகஸ்ட் 10ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை நடைபெற்றது. ஏராளமானோர் வந்து பார்த்துச் சென்ற இந்தக் கண்காட்சியை, முரசொலியைத் தன் மூத்த பிள்ளை என்று குறிப்பிடும் கருணாநிதி பார்க்காதது திமுகவினரிடையே மனக்குறையாக இருந்தது. அந்த மனக்குறையைத் தீர்த்து, மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளார் கருணாநிதி.
கடந்த ஒரு வருடமாக மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர வேறு எதற்காகவும் வீட்டைவிட்டு வெளியே செல்லாத கருணாநிதியின் முரசொலி அலுவலக விஜயம், ‘நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு...’ எனச் சொல்லாமல் சொல்கிறது.
கருணாநிதி முரசொலி அலுவலகம் செல்லும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம். அவருடைய மகளும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்குக் கூட சொல்லப்படவில்லையாம். அதையெல்லாம் விட அவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ள கருப்பு பூனைப்படைக்கும் இந்த தகவலை சொல்லவில்லையாம். அவர்களுக்குச் சொல்லாமல் அழைத்துப் போனதற்காக, லோக்கல் போலீசாருடன் அவர்கள் சண்டையிட்டு வருகிறார்கள். தலைவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் நாங்கள் அல்லவா பதில் சொல்ல வேண்டும் என்று கோபத்தில் இருக்கிறார்களாம்.கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்திக்க நேரம் கேட்ட போது, இன்பக்ஷன் ஏற்படும் என்று மறுத்தார்கள். தீபாவளிக்கு வெடி வெடித்ததால், சென்னை நகர மாசுபட்டு இருக்கும் போது ஏன் அழைத்துச் சென்றீர்கள் என்று கருப்புபூனை படையினர் கேட்கிறார்களாம்.