ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகள் காரணமாக வாக்குப் பதிவுக்கு 2 நாள்கள் முன்பாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 21-ம் தேதி ஆர்.கே.நகரில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தமுள்ள 2 லட்சத்து 28,234 வாக்காளர்களில் 33,994 ஆண்கள், 92,867 பெண்கள், இதர பாலினத்தவர் 24 பேர் என 1 லட்சத்து 76,885 பேர் வாக்களித்துள்ளனர். இதன்படி, இறுதியாக 77.5 சதவீதம் வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
ஆர்.கே.நகர் வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றிலிருந்தே தினகரன் தொடர்ந்து முன்னிலை வகித்தார். மொத்தமுள்ள 19 சுற்றுகள் முடிவில் சுயேட்சை வேட்பாளர் டிடிவி தினகரன், 89,013 வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளார். மதுசூதனன் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 48,306. திமுக வேட்பாளர் மருது கணேஷ் 24,581 வாக்குகள் பெற்று டெபாசிட்டை இழந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகளும், பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் 1,368 வாக்குகளையும் பெற்றுள்ளனர். பாஜக பெற்றிருக்கும் இந்த வாக்கு எண்ணிக்கை, நோட்டாவின் வாக்குகளை விட குறைவானதாகும். நோட்டாவுக்கு கிடைத்த வாக்குகள் எண்ணிக்கை 2,348 ஆகும்.
மொத்தம் 29,480 வாக்குகள் பெற்றால் மட்டுமே டெபாசிட் பெற முடியும். ஆனால், திமுக 24,581 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பதால் டெபாசிட்டை இழந்துள்ளது.