சேலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கோவை, தருமபுரி, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய 9 மாவட்டங்கள் மேற்கு மாவட்டங்கள் அல்லது கொங்கு மண்டலம் என அழைக்கப்படுகிறது.
இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக சேலம் வடக்கு தொகுதி 1ல் மட்டும்தான் வெற்றி பெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக திருப்பூர் தெற்கு, தாராபுரம், காங்கயம் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஈரோடு மேற்கு, அந்தியூர், ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதே போல, நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் குன்னூரில் திமுக வெற்றி பெற்றது. உதகமண்டலத்தில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் வெற்றி பெற்றது.
கரூர் மாவட்டத்தில் உள்ள மொத்தம் 4 தொகுதிகளில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய 4 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது.
கோவை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 10 சட்டம்னறத் தொகுதிகளில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறமுடியவில்லை. தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொத்தம் 5 தொகுதிகளில் திமுக போட்டியிட்ட 4 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. அரூர் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தோல்வியடைந்தது.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல் ஆகிய 3 தொகுதிகளிலும் திருச்செங்கோடு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கொ.ம.தே.க.வைச் சேர்ந்த ஈஸ்வரனும் வெற்றி பெற்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மொத்த 6 தொகுதிகளில் பர்கூர், ஒசூர் ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தளி தொகுதியில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.
தமிழ்நாட்டில் உள்ள மேற்கு மண்டலத்தில் உள்ள 9 மாவட்டங்களில் உள்ள மொத்தம் 61 தொகுதிகளில் 18 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 2 இடத்திலும் கொ.ம.தே.க 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், கொங்கு மண்டலத்தில் உள்ள மேற்கு மாவட்டங்களில் 3ல் ஒரு பங்குக்கும் குறைவான இடங்களையே திமுக வென்றுள்ளது தெரியவருகிறது. இதனால், மேற்கு மாவட்டங்களில் திமுக மிக பலவீனமாக இருப்பதை திமுக தலைமையை உணர்ந்துள்ளது.
அதனால், கொங்கு மண்டலத்தில் திமுகவை வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை முடக்கி விட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, கொங்கு மண்டலத்தில் அதிமுக, அமமுக, மநீம கட்சிகளில் அதிருப்தியுடன் முக்கிய நிர்வாகிகளை திமுகவில் சேர்த்து அவர்களை கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுத்துவது என்று திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தலுக்கு பிறகு, மநீம கட்சியில் இருந்து விலகிய கோவையைச் சேர்ந்த டாக்டர் மகேந்திரன் திமுகவில் இணைந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அமமுகவின் முக்கிய அதிமுக அரசில் இருந்த முன்னாள் உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் ஆகியோர் திமுகவில் இணைந்தனர். அதே போல, சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக விவசாயிகள் பிரிவு மாவட்ட நிர்வாகியும் எடப்பாடி பழனிசாமியின் தூரத்து உறவினரான செல்லதுரை என பலர் திமுகவில் இணைந்தனர். இன்னும் அதிருப்தியில் உள்ள மற்ற நிர்வாகிகளையும் திமுகவில் இணைத்த பிறகு, வருகிற உள்ளாட்சி தேர்தலில் திமுக எல்லா இடங்களையும் கைப்பற்ற வேண்டும். அதே போல, லோக் சபா தேர்தல் 2024க்குள் கொங்கு மண்டலத்தில் திமுகவை பலப்படுத்தி அனைத்து தொகுதிகளையும் மீண்டும் கைப்பற்ற திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, பாஜகவினர் கொங்குநாடு என்று தனி மாநிலமாக பிரிக்க திட்டமிட்டுள்ளதாக ஒரு விவாதத்தை உருவாக்கி கொங்கு மண்டலம் திமுகவின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதனால், கொங்கு மண்டலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற திட்டம் திமுகவுக்கு சவாலாகவே இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.