திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த ஆறிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவெடுக்கப்பட்டதாக மதிமுக நிறுவனர் வைகோ தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, உள்ளிட்ட கட்சிகள் தங்களது அணியில் இடம்பெறவுள்ள கூட்டணி கட்சிகள் மற்றும் இடஒதுக்கீடு குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இன்று 2ம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தின. இழுபறியில் நீடிக்கும் மற்றொரு கட்சியான காங்கிரஸ் தொகுதி பங்கீடு குறித்து நாளை மறுநாள் பேச இருப்பதாக அறிவித்தது.
திமுக கூட்டணியில் இரட்டை இலக்கு சட்டமன்றத் தொகுதிகள், தனிச்சின்னம் போன்ற கோரிக்கையை மதுமுக வலியுறுத்தி வந்தது. இருப்பினும், தனிச் சின்னம் என்றால் 4 தொகுதிகள், உதயசூரியன் சின்னம் என்றால் 6 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற திமுக தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை மதிமுக தலைமை அலுவலகத்தில் மதிமுக உயர்நிலை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தனிச்சின்னம், தொகுதிப் பங்கீடு குறித்தும் ஆலோச்சிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இன்று மாலை திமுக- மதிமுக கூட்டணி உறுதியானது.
இந்த பேச்சுவார்த்தையின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சி.இ.சத்யா, ஏ.கே.மணி, அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் புலவர் செவந்தியப்பன், ஆட்சிமன்றக்குழு செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் அரியலூர் கு.சின்னப்பா, தேர்தல் பணிச் செயலாளர் வழக்கறிஞர் ஆவடி இரா.அந்திரிதாஸ் – கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் இ.பெரியசாமி, எம்.எல்.ஏ., க.பொன்முடி, எம்.எல்.ஏ., திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் எ.வ.வேலு, எம்.எல்.ஏ., ஆகியோர் உடனிருந்தனர்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 12 தொகுதிகளுக்கு குறைவாக போட்டியிட்டால் ஒவ்வொரு தொகுதிக்கும் வேறுவேறு சின்னங்களில் போட்டியிட நிலைமை ஏற்படலாம். இதுபோன்ற, நெருக்கடியான சூழலை தவிர்க்கவே உதய சூரியன் சின்னத்தில் மதிமுக போட்டியிடுகிறது” என்று தெரிவித்தார்.
முன்னதாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியின் 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil