தமிழக சட்டசபையில் விதிமுறைக்களுக்கு எதிராக நடந்து கொண்ட திமுக உறுப்பினர்கள் 7 பேருக்கு தண்டனை கொடுப்பதில் இருந்து மன்னிப்பு வழங்கினார், சபாநாயகர் தனபால்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா இறந்ததும், எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து சட்டபேரவையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தை பிப்ரவரி 18ம் தேதி கொண்டு வந்தார்.
அப்போது திமுகவினர், சட்டமன்ற உறுப்பினர்கள் கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு சட்டசபைக்கு கொண்டு வந்துள்ளனர். அவர்களை சுயமாக சிந்தித்து வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். இன்று நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது. இன்னொரு நாளில் ரகசிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். சபாநாயகர் மறுத்ததால், திமுகவினர் அவரை முற்றுகையிட்டனர்.
அப்போது திமுகவைச் சேர்ந்த கு.க.செல்வம், சுரேஷ்ராஜன், ரங்கநாதன் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்கள் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டதாக அதிமுக உறுப்பினர் வெற்றிவேல் சபாநாகரிடம் புகார் கொடுத்தார். இதனை விசாரிக்குமாறு உரிமைக் குழுவுக்கு சபாநாயகர் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில் இன்று காலை பேரவையில், உரிமை குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் விசாரணை அறிக்கையை வாசித்தார். அப்போது கு.க.செல்வம், ரங்கநாதன், சுரேஷ்ராஜன் உள்பட 7 எம்.எல்.ஏ.க்களையும் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யலாம் என்று பரிந்துரைத்தார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் தனபால், ‘திமுக உறுப்பினர்கள் 7 பேரில் ஒருவரைத் தவிர மற்றவர்கள் புதிய உறுப்பினர்கள். அவர்களுக்கு விதிகள் முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏற்கனவே என்னிடம் அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள். எனவே இனிமேல் இது போன்று எம்.எல்.ஏ.க்கள் செயல்படக் கூடாது என்ற கண்டிப்புடன், அவர்களை மன்னித்து விடுவிக்கிறேன் என்று அறிவித்தார்.