ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்எல்ஏ-க்கள் இன்று காலை சந்திக்கவுள்ளனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நீக்கப்பட்டார், இதையடுத்து, பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோர் கை கோர்த்தனர். மேலும், விரைவில் கூடவுள்ள அதிமுக பொதுக் குழுக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இந்த கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் மூலம் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இத்தகைய பரபரப்பான சூழலில், கடந்த 22-ந் தேதி மும்பை சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று மாலை மீண்டும் சென்னை வந்தார். அவரை சந்திப்பதற்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அனுமதி கோரியிருந்தார். இதையடுத்து, இன்று காலை அவர்களை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி, ஆளுநர் வித்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் தலைமையிலான திமுக எம்எல்ஏ-க்கள் இன்று காலை சந்திக்கவுள்ளனர். அப்போது, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநரை அவர்கள் வலியுறுத்துவார்கள் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.