மக்களவைத் தேர்தல் 2024-ல் தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் தி.மு.க வெற்றி பெற்ற நிலையில், தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி-யுமான கனிமொழி தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்து மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ளார். பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் மற்ற எல்லா மாநிலங்களிலும் தங்கள் கணக்கைத் தொடங்கி இருந்தாலும், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலு தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில், தி.மு.க தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களை நியமனம் செய்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், தி.மு.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் வெற்றிபெற்ற கனிமொழி, மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து, தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தி.மு.க-வில் கனிமொழிக்கு பெரிய புரொமோஷனாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத்தில், தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு இருந்தார். தற்போதைய 2024 நாடாளுமன்றத்தில் தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதே போல, நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற டி.ஆர். பாலு, தி.மு.க-வின் மக்களவைக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
மக்களவை - மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து, தி.மு.க-வின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக தி.மு.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தி.மு.க-வின் மக்களவைக் குழுத் தலைவராக தி.மு.க பொருளாளர் டி.ஆர். பாலு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைக் குழுத் துணைத் தலைவராக தி.மு.க-வின் விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைக் கொறடாவாக தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைக் குழுத் தலைவராக தி.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தி.மு.க-வின் தொ.மு.ச பேரவைப் பொதுச் செயலாளர் மு. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநிலங்களவை கொறடாவாக தி.மு.க-வின் தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி. வில்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு அவைகளின் பொருளாளராக தி.மு.க-வின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எஸ். ஜெகத்ரட்சகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“