திமுக தொடர்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றதில் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி டிடிவி தினகரனை ஓரங்கட்டி விட்டு எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.
இதையடுத்து, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது தாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரிடம் கடிதம் அளித்தனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பொருட்டு, ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். எதிர்க்கட்சியினர் ஆளுநரை நேரில் சந்தித்து இது தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். திமுக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
அதன்பின்னர், திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடந்த 10-ம் தேதியன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றார். ஆனால், ஆளுநர் மும்பை கிளம்பிச் சென்று விட்டார். ஆளுநரின் இந்த செயலைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரிய ஸ்டாலின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் விசாரனை
அதில், மொத்தம் உள்ள 234 உறுப்பினர்களில் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து விட்டார். சட்டப்பேரவைத் தலைவர் தவிர்த்து எஞ்சிய 232 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால் தற்போது தமிழக முதல்வருக்கு ஆதரவாக 113 உறுப்பினர்களே உள்ளனர். எனவே தமிழக முதல்வர் தனதுபெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை கடந்த 14-ம் தேதி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மு.க.ஸ்டாலின் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகி, பெரும்பான்மை இல்லாதபோது, இருக்கின்ற உறுப்பினர்களை வைத்து குறுக்கு வழியில் செயற்கையாக பெரும்பான்மையை நிரூபிக்க இந்த ஆட்சி முயற்சித்து வருகிறது. இது சட்டவிரோதம். உச்ச நீதிமன்ற உத்தரவை மதித்து உடனடியாக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த ஆளுநருக்குஉத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அப்போது டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-வான வெற்றிவேல் தரப்பில்ஆஜரான மூத்த வழக்கறிஞர்பி.எஸ்.ராமன், "டிடிவி.தினகரனுக்குஆதரவு அளித்து வரும் அதிருப்திஎம்எல்ஏ-க் கள் 19 பேரையும் தகுதி நீக்கம்செய்ய இந்த ஆட்சி முயற்சித்து வருகிறது. மனுதாரர் உள்ளிட்ட எம்எல்ஏ-க்கள் யாரையும் தகுதி நீக்கம் செய்யக் கூடாது" என மனு தாக்கல்செய்யவுள்ளோம். இதனையும் இந்தவழக்கோடு சேர்த்து விசாரிக்கவேண்டுமென முறையீடு செய்தார். இந்த வழக்கும் ஸ்டாலின் வழக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் வழக்கு விசாரணையின் முடிவில், "வருகிற செப்டம்பர் 20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தக் கூடாது" என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், செப்.,20-ம் தேதிக்கு (நாளை) வழக்கு விசாரணையை தள்ளி வைத்த நீதிபதி, மு.க.ஸ்டாலின் மற்றும் டிடிவி.ஆதரவு எம்எல்ஏ-க்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் செயலாளர், தலைமைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார்.
சட்டபேரவையில் செப்.,20-ம் தேதி வரை நம்பிக்கை வாக்குப்பதிவு நடத்த தடை: ஐகோர்ட் உத்தரவு
இந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறவுள்ளது. அந்த வழக்கு விசாரணையில், வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித், துஷ்யந்த் தவே ஆகியோர் டிடிவி தரப்புக்கு ஆதரவாகவும், மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் திமுக தரப்புக்கு ஆதரவாகவும், முதல்வர் தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கியும் ஆஜராகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து தரப்பிலும் டெல்லி வழக்கறிஞர்கள் ஆஜராக கூடியதும், தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த வழக்கு விசாரணை பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுதியுள்ளது.
இதனிடையே, ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினர் வியூகம் வகுத்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி ஆதரவு எம்எல்எல்-க்களை சபாநாயகர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து 18 எம்எல்ஏ-க்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கும் அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.