முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடக் கோரிய எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் இன்று விசாரணை நடத்தவுள்ளது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம்" என முறையிட்டதை தொடர்ந்து, அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு ஆளுநர் உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதன் பொருட்டு, ஆளுநருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதே கோரிக்கையை வலியுறுத்தி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையில் எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்தித்தனர். அதேபோல், திமுக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தலைமையில் திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கடந்த 10-ம் தேதியன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்களை சேர்த்து ஆளுங்கட்சிக்கு எம்எல்ஏ-க்கள் 119 பேரின் எதிர்ப்பு உள்ளது. பெரும்பான்மையை அரசு இழந்துவிட்டது. இதனை ஆளுநரிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். எங்களது இந்த கோரிக்கையை ஏற்று சட்டமன்றத்தைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் ஒரு வாரகாலத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி, உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக நீதிமன்றத்தையும், மக்கள் மன்றத்தையும் நாடுவோம் என்றார்.
ஸ்டாலின் தலைமையிலான எதிர்க்கட்சியினர் ஆளுநரை சந்தித்ததையடுத்து, அவர் மும்பை கிளம்பிச் சென்று விட்டார். ஆளுநரின் இந்த செயலைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்டாலின் தொடர்ந்த இந்த வழக்கின் மீதான விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. விசாரணை முடிவில், பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிடுமா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில், ஆட்சி கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.