திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 20-ம் தேதி கூடுகிறது. தீபாவளி முடிந்ததும் போராட்டம் நடத்த மு.க.ஸ்டாலின் முடிவு செய்திருக்கிறார்.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் இன்று (அக்டோபர் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : ‘கழகச் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-10-2017 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
அதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு பேராசிரியர் அன்பழகன் கூறியிருக்கிறார்.
இந்த திடீர் கூட்டம் குறித்து திமுக வட்டாரத்தில் கூறப்படுவதாவது : ‘தமிழ்நாடு முழுவதும் முன்பு எப்போதையும் விட டெங்கு பாதிப்பு உச்சத்தில் இருக்கிறது. முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோ, இதர அமைச்சர்களோ இதற்காக மாவட்டங்களில் முகாமிட்டு எந்த நிவாரண நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. இதனால் ஆளும்கட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.
மக்களின் உணர்வுகளை திமுக இப்போதே பயன்படுத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அடுத்தகட்டமாக அரசின் செயலற்ற தன்மையை உணர்த்தும் விதமாக மாவட்டம் தோறும் போராட்டம் நடத்த எங்கள் கட்சி தயாராகிறது. அதையொட்டித்தான் தீபாவளி முடிந்ததும் அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடக்கிறது’ என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!
டிடிவி தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியதால், ஆட்சி கவிழும் என்கிற எதிர்பார்ப்பு திமுக-வுக்கு இருந்தது. அதனாலேயே சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த விவகாரம் அடுத்தடுத்த வழக்குகளால், இப்போது இடியாப்ப சிக்கலாகி இருக்கிறது.
ஓபிஎஸ் அணியின் 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கக் கோரி திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஓபிஎஸ் அணியின் செம்மலை எம்.எல்.ஏ உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருக்கிறார். இது வழக்கை இழுத்தடிப்பதற்கான ஓபிஎஸ் தரப்பின் முயற்சி என்றே திமுக கருதுகிறது.
எனவே முழுக்க சட்டப் போராட்டத்தை நம்பியிராமல், களத்தில் ஆளும்கட்சி மீதான எதிர்ப்புகளை அதிகப்படுத்தும் விதமாக மீண்டும் தீவிர போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடுகிறது திமுக! என்ன வகையான போராட்டம் என்பது மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரியவரும் என்கிறார்கள், அறிவாலய வட்டாரத்தில்!