Advertisment

நரேந்திர மோடி வருகிற நாளில் மு.க.ஸ்டாலின் போராட்டம் : இந்த உரசல் முதல் முறையல்ல!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அதே நாளில் மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்திருக்கிறார். திமுக இப்படி உரசுவது முதல் முறையல்ல!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
daily thanthi, pm narendra modi, mk stalin, dmk, tamilnadu government

நவம்பர் 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். அதே நாளில் மாநிலம் முழுவதும் மு.க.ஸ்டாலின் போராட்டம் அறிவித்திருக்கிறார். திமுக இப்படி உரசுவது முதல் முறையல்ல!

Advertisment

நவம்பர் 6-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தர இருக்கிறார். அன்று காலை 9.30 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் ‘தினத்தந்தி’ நாளிதழின் பவள விழாவில் மோடி கலந்து கொள்கிறார். இந்த விழாவுக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் தினத்தந்தி நிர்வாகம் சார்பில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார்கள். அண்மையில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தினத்தந்தி உரிமையாளர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் சந்தித்து அழைப்பு விடுத்தார். அவரும் அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார். தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றின் முக்கிய விழா என்ற அடிப்படையில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் அந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவிர, மறைந்த சிவந்தி ஆதித்தன் பெயரிலான பேரவை, விளையாட்டு அமைப்புகள், நாடார் அமைப்புகள் சார்பிலும் தமிழகம் முழுவதும் இருந்து திரளானோர் இந்த விழாவுக்கு வருகிறார்கள். பிரதமர் மோடியின் பாதுகாப்பு கருதி முன் அனுமதி அட்டை பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட இருக்கிறார்கள். எனவே வருகை தர விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது.

நவம்பர் 6-ம் தேதி பெரும்பாலான கட்சிகளின் தலைவர்கள் சென்னையில் கூடுகிற அதே நாளில்தான், தமிழகம் முழுவதும் ரேஷன் சர்க்கரை விலை உயர்வை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. கிட்டத்தெட்ட சென்னையில் இந்த விழா நடைபெறும் நேரத்தில்தான் மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் திமுக-வினர் திரண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்ப இருக்கிறார்கள்.

தினத்தந்தி பவழ விழாவில் பங்கேற்க ஸ்டாலினை அழைத்ததாகவும், ஆனால் அவர் வாழ்த்துச் செய்தி மட்டும் வழங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மேகதாது அணை பிரச்னைக்காக தமிழக விவசாயிகள் சங்கத்தினருடன் டெல்லியில் பிரதமரை சந்திக்க ‘அப்பாய்ன்மென்ட்’ கேட்டார் ஸ்டாலின். ஆனால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை.

அதன்பிறகே ஜூன் 3-ம் தேதி கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவில் பாஜக-வுக்கு எதிரான தேசியத் தலைவர்களை சங்கமிக்க வைத்தார் ஸ்டாலின். பாஜக-வுக்கு எதிராக ஸ்டாலின் கடுமையாக குரலை உயர்த்த ஆரம்பித்தது அதன் பிறகுதான். கடந்த ஜூலை 27-ம் தேதி அப்துல் கலாமின் இரண்டாவது ஆண்டு நினைவு நாளையொட்டி, ராமேஸ்வரத்தில் அவரது நினைவிடத்தை திறந்து வைக்க மோடி வருகை தந்தார். அதே நாளில் ‘நீட்’ பிரச்னைக்காக தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி நடத்தியது குறிப்பிடத்தக்கது.

அதே பாணியில்தான் வருகிற 6-ம் தேதி பிரதமர் வருகிற நாளில் ரேஷன் கடைகள் முன்பு திமுக போராட்டம் அறிவித்திருக்கிறது. ஆக, மோடி வருகிற நாளில் 2-வது முறையாக போராட்டக் களத்தில் இருக்கிறது திமுக! இது இயல்பாக நடந்ததா? அல்லது திட்டமிட்டு அமைக்கப்படுகிறதா? என்பதை ஸ்டாலின் தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஸ்டாலின் நவம்பர் 6-ம் தேதி போராட்டம் அறிவித்திருப்பதில் திமுக நிர்வாகிகள் சிலருக்கே வருத்தம்! காரணம், அவர்களில் பலர் ‘தினத்தந்தி’ விழாவில் பங்கேற்க விரும்பியவர்கள்!

 

Mk Stalin Dmk Daily Thanthi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment