Advertisment

திராவிட நாட்டு அதிபரை, இந்திய பிரதமர் சந்தித்தாராம்! சர்ச்சையில் திமுக செய்தி தொடர்பாளர்

திராவிட நாட்டு அதிபரை இந்திய பிரதமர் சந்தித்ததாக கருணாநிதி-மோடி சந்திப்பை உருவகப்படுத்தி திமுக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டது சர்ச்சை ஆகியிருக்கிறது.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk, bjp, pm narendra modi, m.karunanidhi, tamilan prasanna, national security act, hindu makkal katchi

திராவிட நாட்டு அதிபரை இந்திய பிரதமர் சந்தித்ததாக கருணாநிதி-மோடி சந்திப்பை உருவகப்படுத்தி திமுக செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டது சர்ச்சை ஆகியிருக்கிறது.

Advertisment

பிரதமர் நரேந்திர மோடி- கலைஞர் கருணாநிதி சந்திப்பு, அரசியல் வட்டாரங்களில் உருவாக்கிய அதிர்வுகள் அதிகம்! திமுக.வில் இந்த சந்திப்பு கலவையான ரீயாக்‌ஷன்களை ஏற்படுத்தியிருக்கிறது. ‘பாஜக.வுடன் இணக்கமானால்தான் அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப முடியும்’ என கூறுபவர்கள் ஒரு ரகம்! இன்னொரு ரகத்தினனோ, ‘பிரதமர் மோடி தமிழகத்தில் வேறு வழியில்லாமல் திமுக.விடம் சரண் அடைவதாக’ விமர்சனங்களை வைத்து உள்ளூர் பாஜக.வினரை டென்ஷன் படுத்தியபடி இருக்கிறார்கள்.

dmk, bjp, pm narendra modi, m.karunanidhi, tamilan prasanna, national security act, hindu makkal katchi தமிழன் பிரசன்னா

திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளரும், அந்தக் கட்சியின் அதிகாரபூர்வ மீடியா தொடர்பாளர்களில் ஒருவருமான வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா இதில் இரண்டாவது ரகம்! திமுக தலைவர் கருணாநிதியை, பிரதமர் மோடி கோபாலபுரத்தில் சந்தித்த நவம்பர் 6-ம் தேதி காலையில் தமிழன் பிரசன்னா தனது முகநூல் பக்கத்திலும், ட்விட்டரிலும் வெளியிட்ட ஒரு பதிவுதான் இப்போது சர்ச்சை ஆகியிருக்கிறது.

அந்தப் பதிவில், ‘திராவிட நாட்டின் அதிபர் தலைவர் கலைஞரை இந்தியாவின் பிரதமர் இன்று பகல் 12.30 மணிக்கு சந்தித்து வாழ்த்து பெறுகின்றார்’ என குறிப்பிட்டிருக்கிறார் தமிழன் பிரசன்னா. என்றோ திமுக.வே கைவிட்ட திராவிட நாட்டை குறிப்பிட்டு, அதற்கு அதிபராக கருணாநிதியை உருவகப்படுத்தியதை தேச விரோத செயலாக இந்துத்வ அமைப்புகள் வர்ணிக்கின்றன.

தமிழன் பிரசன்னா ட்வீட்

தவிர, கருணாநிதியின் உடல்நலம் விசாரிக்க வந்த மோடியை, கருணாநிதியிடம் வாழ்த்து பெற வருவதாக பிரசன்னா குறிப்பிட்டது உள்ளூர் பாஜக.வினரை கடுப்பேற்றியிருக்கிறது. வழக்கம்போல மற்றவர்களை முந்திக்கொண்டு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு பதில் கொடுத்திருக்கிறார்.

அதில், ‘இதுபோன்ற அநாகரீக கருத்துகளும் பேச்சுகளும் திமுக.வை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என குறிப்பிட்டிருக்கிறார் ஹெச்.ராஜா. மோடி-கருணாநிதி சந்திப்பைத் தொடர்ந்து தமிழகத்தில் பாஜக-திமுக கூட்டணி உருவாகலாம் என கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அதனாலோ என்னவோ, ஹெச்.ராஜா சற்றே தனது விமர்சனத்தை இதில் காரம் குறைத்து வைத்திருக்கிறார்.

ஹெச்.ராஜா பதில் ட்வீட்

ஆனால் இதற்கு தனது முகநூல் பக்கத்திலேயே பதில் கொடுத்த தமிழன் பிரசன்னா, ‘நீங்கள் வன்மையாக கண்டித்தால், நான் மிக சரியாகவே பயணிக்கின்றேன்.

நன்றி திரு. ஹரி ஹர ராஜா சர்மா அவர்களே’ என ராஜாவை மேலும் சீண்டியிருக்கிறார்.

இதற்கிடையே அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை தலைவர் வி.சீனிவாசன் சென்னை போலீஸ் கமிஷனருக்கு அனுப்பியுள்ள மனுவில், ‘பாரத நாட்டில் இருந்து திராவிட நாடு தனியாக பிரிந்துவிட்டதைப் போல சித்தரித்துள்ள தமிழன் பிரசன்னா, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார். அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஹெச்.ராஜாவின் இன்னொரு ட்வீட்..

இதற்கும் தனது முகநூல் பக்கத்தில் பதில் கொடுத்துள்ள தமிழன் பிரசன்னா, ‘உங்களின் துரு பிடித்த வாள்கள், வெறிபிடித்த துப்பாக்கி தோட்டாகள் மற்றும் உங்கள் மதவாத பாசிச வெறி என எவை வந்ததாலும் எதிர்த்து நிற்பேன், உங்கள் மிரட்டல்களுக்கு அஞ்சுவதும், அடிபணிவதும் நான் அல்ல. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், அண்ணன் தளபதி படையின் கடைமட்ட தொண்டன்’ என குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த விவகாரத்தை போலீஸ் எப்படி கையாளப் போகிறதோ?

 

Bjp Dmk M Karunanidhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment