/tamil-ie/media/media_files/uploads/2017/09/mks-1.jpg)
அதிமுக.வின் 1.5 கோடி உறுப்பினர் எண்ணிக்கையை திமுக விஞ்சுமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக மா.செ.க்களுக்கு ஸ்டாலின் அஸைன்மென்ட் வழங்கியிருக்கிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலம் தொட்டு அதிமுக தலைவர்கள் பெருமிதப்படும் விஷயம், அந்தக் கட்சியின் ஒன்றரை கோடி உறுப்பினர்கள்! இந்த எண்ணிக்கையை வைத்தே தமிழகத்தில் பெரிய கட்சியாக தன்னை கூறி வருகிறது அதிமுக!
அறிவாலய ஆவணங்களின் அடிப்படையில் திமுக.வின் உறுப்பினர் எண்ணிக்கை 1.10 கோடி! தற்போது அதிமுக கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்ற போராடி வரும் நிலையில் திமுக தனது மாவட்டச் செயலாளர்களை உறுப்பினர் சேர்க்கையில் களம் இறக்கி விட்டிருக்கிறது. இது தொடர்பாக, ‘உங்களில் ஒருவன்’ என தலைப்பிட்டு முரசொலியில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது.
‘கழகத்தின் 15வது தேர்தலை முறைப்படி நடத்திட வேண்டியிருப்பதை முன்னிட்டு அதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து கழக பொதுச்செயலாளர் பேராசிரியர் விடுத்துள்ள அறிக்கையில், இந்திய வரலாற்றில் ஜனநாயக முறைப்படி உறுப்பினர் சேர்த்தலும் - புதுப்பித்தலுமான பணிகள் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து வார்டு கிளைகள், ஊராட்சி, பேரூர், ஒன்றிய, நகர, பகுதி, மாவட்ட, மாநகர் மாவட்ட, மாநில அமைப்புகள், தலைமைக் கழகம் ஆகியவற்றுக்கு என ஆறு கட்டங்களாக தேர்தல் நடத்தி, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுத்து அமைப்புக்களைச் செயற்படுத்தும் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை நாடறியும்.
ஒரு இலட்சத்து 11 ஆயிரத்து 140 வார்டு கழகங்களையும் 1 கோடியே 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உறுப்பினர்களையும் கொண்ட தி.மு.கழகம் தொடக்க காலம் முதல் பாதுகாத்து வரும் ஜனநாயக மரபின் தொடர்ச்சியாக, 15வது தேர்தலுக்குத் தயாராகும் நிலையில், புதிய உறுப்பினர்களைச் சேர்த்தல் - புதுப்பித்தல் ஆகிய அடிப்படைப் பணிகளைத் தொடங்குகிறது.
கழகத்தின் முப்பெரும் விழா, கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதியன்று திண்டுக்கல்லில் நடைபெற்றபோது, மாநில மாநாடு போல திரண்டிருந்த கழகத்தினரிடமும் புதிய உறுப்பினர் சேர்ப்பு கோரிக்கையை முன்வைத்து நான் உரையாற்றினேன். முப்பெரும் விழாவில் நேரில் பெருங்கடலாகப் பங்கேற்ற கழக உடன்பிறப்புகளும், நேரலை ஒளிபரப்பில் அதனைக் கண்ட உடன்பிறப்புகளும் இந்நேரம், கழகத்திற்கு வலுவூட்டும் வகையில் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் - பழைய உறுப்பினர்களைப் புதுப்பித்தல் எனக் களப்பணியில் இறங்கியிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
தி.மு.க.வில் உறுப்பினராவது என்பது பெயரளவுக்கு நடைபெறும் சடங்கல்ல. ஜனநாயக முறைப்படியான நிகழ்வு. உறுப்பினர் கட்டணம் ரூ.20/- செலுத்துவதுடன், எந்தக் கிளையில் ஒருவர் உறுப்பினராகிறாரோ அந்தக் கிளையில், அவரது குடியிருப்பு முகவரியுடன், உறுப்பினர் படிவத்தில் தனது வாக்காளர் அடையாள அட்டையின் எண்ணைக் குறிப்பிடுவதுடன், அதன் நகலையும் இணைத்திடவேண்டும் என்பது கழக சட்டத்திட்டத்தின் திருத்தப்பட்ட விதி.
பெயரளவுக்கு உறுப்பினர்களை சேர்த்து எண்ணிக்கையைப் பெருக்கினோம் என்றில்லாமல், கழகத்திற்கு உண்மையிலேயே புது ரத்தம் பாய்ச்சும் வகையில் உறுப்பினர் சேர்ப்பு அமையவேண்டும் என்பதற்காகத்தான் இத்தகையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கழகத்தின் கட்டுப்பாடுகளை கண்ணியமாகக் கடைப்பிடித்துக் கடமையாற்ற வேண்டியது நமது பொறுப்பு. அதனால்தான் இந்த இயக்கம் வெற்றிகளையும் தோல்விகளையும், பாராட்டுகளையும் தூற்றுதல்களையும், நெருக்கடிகளையும் சோதனைகளையும் எதிர்கொண்ட போதும் எவராலும் வீழ்த்திட முடியாத பேரியக்கமாக உயர்ந்து நிற்கிறது.
இதனை ஏற்க முடியாதவர்களும் எரிச்சல்காரர்களும், “தி.மு.க.வில் குடும்ப ஆதிக்கம் இருக்கிறது. குடும்பத்தினர்தான் அங்கே பதவிகளைப் பெறுகிறார்கள்”, என்றுப் பேசி வருகிறார்கள். அவர்களுக்கெல்லாம் பணிவோடு நாம் சொல்லக்கூடிய பதில், “ஆம்.. இது குடும்பக் கட்சிதான். என் தாத்தாவும் தி.மு.க., என் அப்பாவும் தி.மு.க, நானும் தி.மு.க., என் மகனும் தி.மு.க., நாளை என் பேரனும் தி.மு.க.தான்”, என்று கூறி குடும்பம் குடும்பமாக இந்த இயக்கத்தில் தொடர்ந்து செயலாற்றி வருகிறார்கள்.
அந்தவகையில், இது குடும்பக் கட்சிதான். எந்த ரத்த உறவுமுறையும் இல்லாதவர்களும் புதிய உறுப்பினராக சேர்ந்தால், அவர்களும் கழகத்தின் ரத்த நாளமாகி, கழக குடும்பத்தின் அங்கமாகி விடுகிறார்கள். அந்தவகையிலும் இது குடும்பக் கட்சிதான். நம் மீது அவதூறுச் சேற்றை அள்ளி வீசுவோருக்கு நாம் அளிக்க வேண்டிய பதில் இதுதான்.
கழக உறுப்பினர் சேர்த்தலும், புதுப்பித்தலும் செப்டம்பர் 16 ஆம் தேதியில் தொடங்கி, நவம்பர் 15 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு, கழக அமைப்புகளுக்கான 15வது தேர்தல் உள்கட்சி ஜனநாயகப்படி நடைபெறும். பலதுறைகளையும் சார்ந்த இளைஞர்கள், பெண்கள், பொதுநலனில் அக்கறையுள்ளோர் அனைவரிடமும் கழகத்தின் கொள்கைகளையும், தமிழினத்தின் மேன்மைக்காக ஆற்றியுள்ள செயல்களையும் எடுத்துக்கூறி அவர்களின் முழு ஒப்புதலுடன் உறுப்பினராக்குங்கள்.
நமது உயிருக்கு நிகரானது இந்த இயக்கம். அந்த இயக்கத்தின் உதிரமாக இருப்பவர்கள் உறுப்பினர்கள். எனவே, இந்த இயக்கத்திற்குப் புதுரத்தம் பாயும் வகையில் உறுப்பினர் சேர்ப்பினை வெற்றிகரமாக அமைந்திட உழைத்திடுங்கள்.’ இவ்வாறு கூறியிருக்கிறார்.
திமுக.வின் 65 மாவட்டச் செயலாளர்களிடமும் பல்லாயிரக்கணக்கில் உறுப்பினர் படிவங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அந்தந்த பகுதியில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பவர்களே உள்கட்சித் தேர்தலில் கிளை, பேரூர், ஒன்றிய பொறுப்புகளுக்கு தேர்வாக முடியும். இந்த அடிப்படையில் கீழ்மட்ட நிர்வாகிகளும் இந்தப் பணியில் வேகம் காட்டுகிறார்கள்.
சிறிய மாவட்டங்களில் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் புதிய உறுப்பினர்களையும், பெரிய மாவட்டங்களில் அதிகபட்சமாக 2 லட்சம் புதிய உறுப்பினர்களையும் சேர்க்க மா.செ.க்களுக்கு ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். மொத்தம் ஒன்றே முக்கால் கோடி உறுப்பினர் எண்ணிக்கையை தொடுவது திமுக.வின் லட்சியம்! ஒன்றரை கோடியை தாண்டுவோம் என்பது நிச்சயம் என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.