காவிரி விவகாரம்: திமுக சார்பில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம்

தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வரும் 23ம் தேதி திமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி நதிநீர் வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் “ஸ்கீம்” என்ற வார்த்தைக்கு விளக்கம் கோரி மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் மனு தாக்கல் செய்தது. மேலும் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கைப் பதிவு செய்தது. தமிழக அரசின் வழக்கு தள்ளுபடியான நிலையில், மத்திய அரசின் மனு விசாரிக்கப்பட்டது. அப்போது தீர்ப்பை பின்பற்றாத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் இவ்வழக்கில், வரும் மே 3ம் தேதி காவிரி குழு அமைப்பில் வரைவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மற்றுமொரு கெடு அளித்துள்ளது.

இவ்வாறு இழுபறியாகி வரும் காவிரி விவகாரத்தால், தமிழகம் பாதிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை பல்வேறு கட்சிகள் முன்வைத்துள்ளது. இதனையடுத்து, மக்களின் ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மனித சங்கிலி போராட்டத்தை திமுக நடத்த உள்ளது.

திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில், வரும் 23ம் தேதி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், திமுக சார்பாக மாலை 4 மணி முதல் 5 மணி வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

“தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் திரளாகப் பங்கேற்கும் மனித சங்கிலி அறப்போராட்டம் ஏப்ரல் 23-ந்தேதி மாலையில், நமது பொதுநோக்க உணர்வின் வெளிப்பாடாக உரிமைப்போரின் ஒப்பற்ற அடையாளமாக நடைபெறவுள்ளது. காவிரியில் தமிழ்நாட்டிற்குள்ள அசைக்கமுடியாத உரிமையை சட்டப்பூர்வமாக நிலைநாட்டவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைத்திடவும் வலியுறுத்தித் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்கள் ஒவ்வொன்றும், எப்படி பொதுமக்களின் பேராதரவுடனும், பெருந்திரள் பங்கேற்புடனும் நடைபெறுகிறதோ, அதுபோலவே மனித சங்கிலிப் போராட்டமும் மறக்க முடியாத வெற்றிபெறும் வகையில் மாவட்ட தி.மு.க. செயலாளர்களும், ஒன்றிய – நகர செயலாளர்கள், துணை அமைப்புகளின் நிர்வாகிகளும், அந்தந்தப் பகுதியில் உள்ள கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளையும் அரவணைத்து மனித சங்கிலி அறப்போராட்டத்தை நடத்திடவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.” என்று வெளியிட்டுள்ளார்.

மேலும், தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் மத்திய ஆட்சியாளர்கள், இனியும் தமிழர்களை ஏமாற்ற முடியாது என கதிகலங்கும் வகையில் தமிழகத்தின் ஒற்றுமையை மனித சங்கிலி அறப்போராட்டம் வாயிலாக உணர்த்துவோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close