குட்கா ஊழல் விசாரணை அதிகாரியை மாற்றியது குறித்து பேச எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் இன்றும் வெளிநடப்பு செய்தனர்
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடரில் இன்று, எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதாவை பேரவையில் துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அதன்படி எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 55 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா நிறைவேறினால் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரையிலான மூன்று லட்சம் ரூபாய் நிலுவைத்தொகை கிடைக்கும்.
மேலும், தமிழகத்தில் குட்கா விற்பனை தொடர்பான வழக்கை ஐஏஎஸ் அதிகாரி ஜெயக்கொடி விசாரித்து வந்தார். இவர், குட்கா ஊழலை நேர்மையாக விசாரித்து வருகிறார் என்று ஐகோர்ட் மதுரை கிளையால் பாராட்டு பெற்ற நிலையில், நேற்று (ஜன.9) அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மோகன் பியாரே என்பவரை குட்கா ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதுகுறித்து ஸ்டாலின் சட்டசபையில் பேசுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டதால், திமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர். இதன்பின் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், குட்கா விவகாரம் குறித்து விசாரித்துவந்த கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடியை மாற்றியது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
அதோடு போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் எம்.எல்.ஏ.க்களின் சம்பள உயர்வை அமல்படுத்தக்கூடாது எனவும் அவர் கூறினார்.