குட்கா விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டத்தை கண்டித்து திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழகத்தில் பான்மசாலா, குட்கா உள்ளிட்டவைகள் தடை செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன. எனினும், தடையை மீறி குட்கா விற்பனை நடந்து கொண்டு தான் உள்ளது. இதனிடையே, கடந்த ஆண்டு சென்னை அருகே உள்ள குட்கா கோடவுன் ஒன்றில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், சில ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக, அப்போதே சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், நேற்று வெளிவந்த ஆங்கில பத்திரிகை ஒன்றில் குட்கா விவகாரம் மீண்டும் வெளிக் கொண்டு வரப்பட்டது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளிவந்த அந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை சட்டப்பேரவையில் எழுப்பவிருப்பதகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று கூடிய சட்டப்பேரவை நிகழ்வின் போது, தடையை மீறி குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் லஞ்சம் பெற்றதாக செய்தி வெளியானது குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், செய்தித்தாள்களில் வரும் விஷயங்கள் தொடர்பாக பேரவையில் விவாதிக்க முடியாது என கூறி சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
இதனையடுத்து, அனுமதி மறுக்கப்பட்டதைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அவர்களை தொடர்ந்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த ஸ்டாலின், குட்கா விவகாரத்தில் அவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பறிமுதல் செய்யப்பட்ட டைரியில் சுகாதாரத்துறை அமைச்சரின் பெயர், காவல்துறை உயர் அதிகாரிகள் பெயரும் இடம் பெற்றுள்ளது. வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த அந்த டைரியில் லஞ்சம் கொடுத்தது தொடர்பான விவரங்கள் உள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றார்.