Advertisment

ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க வழக்கு : திமுக கொறடா சக்கரபாணி தொடர்ந்தார்

ஓபிஎஸ் உள்பட 12 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
dmk petition to disqualify ops, chennai high court, dmk whip r.chakrapani, deputy cm o.panneerselvam

ஓபிஎஸ் உள்பட 12 அதிமுக எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி திமுக கொறடா சக்கரபாணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Advertisment

அதிமுக ஆட்சியின் எதிர்காலம் மட்டுமல்ல, தமிழக அரசியல் எதிர்காலமும் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளின் மூலமாகவே நிர்ணயமாகும் சூழல் நிலவுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்த டிடிவி அணியின் எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 18 பேர் மீது கட்சித் தாவல் சட்டப்படி சபாநாயகர் தனபால் தகுதி நீக்க நடவடிக்கை எடுத்தார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துரைசாமி முன்னிலையில் நிலுவையில் இருக்கிறது. அக்டோபர் 4-ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெற இருக்கிறது. அதுவரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உயர்நீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.

கவர்னரிடம் மனு கொடுத்த குற்றத்திற்காக 18 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்த சபாநாயகர் தனபால், கடந்த பிப்ரவரியில் எடப்பாடி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது கொறடா தாமரை ராஜேந்திரனும் அது குறித்து கண்டுகொள்ள வில்லை.

அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்த 12 பேரில் ஓபிஎஸ்.ஸும், மாஃபாய் பாண்டியராஜனும் முறையே துணை முதல்வராகவும் அமைச்சராகவும் அதே ஆட்சியில் இடம் பிடித்திருக்கிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க நடவடிக்கையை எதிர்த்து டிடிவி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் ஆஜரான உச்சநீதிமன்ற வழக்கறிஞர் துஷ்யந்த் தவே இந்த முரண்பாடை சுட்டிக்காட்டி வாதாடினார்.

இதற்கிடையே அதே விவகாரத்தை திமுக கையில் எடுத்திருக்கிறது. திமுக கொறடா சக்கரபாணி இன்று (செப்.25) சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வெளிப்படையாக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்காதது சட்டவிரோதம் என குறிப்பிட்டிருக்கிறார்.

டிடிவி அணியின் 18 எம்.எல்.ஏ.க்களும் கொறடா உத்தரவு எதையும் மீறவில்லை. சட்டமன்றத்திற்கு வெளியே அரசியல் சாசன அதிகாரம் பெற்ற கவர்னரை சந்தித்ததை ஒரு குற்றமாக கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டமன்றத்தின் உள்ளே கொறடா உத்தரவை மீறி வாக்களித்த 12 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்காதது சட்டத்தை பாரபட்சமாக பயன்படுத்துவதாக இருக்கிறது என மனுவில் கூறியிருக்கிறார் சக்கரபாணி.

இந்த மனு மீதான விசாரணை நாளை (26-ம் தேதி) நடைபெறும் என தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆயுளை நிர்ணயிக்கும் வகையிலான வழக்குகள் அடுத்தடுத்து நீதிமன்றத்தில் பதிவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Chennai High Court Mk Stalin Ttv Dhinakaran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment