உள்ளாட்சி தேர்தலை தாமதமின்றி நடத்த வேண்டும், டெங்கு பாதிப்பை சுகாதார பேரிடராக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 தீர்மானங்கள், திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியபோது, கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.
அதன் விவரங்கள் பின்வருமாறு,
1. டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் கட்சி தொண்டர்களுக்கு திமுக சார்பில் நன்றி தெரிவித்து தீர்மானம்
2. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம்
3. மாநில உரிமைகளை மத்திய அரசுக்கு தாரை வார்த்துவிட்டதாக தமிழக அரசுக்கு கண்டனம்
4. அதிமுக அரசில் நடைபெறும் ஊழல்கள், குற்ற நடவடிக்கைகளிலிருந்து அமைச்சர்கள் தப்பிக்க முடியாது என தீர்மானம்
5. வாக்காளர் பட்டியலை சீரமைக்கும் பணியில் திமுகவினர் ஈடுபட வேண்டும் என தீர்மானம்
6. உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தி, மக்களின் சுகாதார சீர்கேடுகளை கவனிக்க வேண்டும் என தீர்மானம்
மேலும், மு.க.ஸ்டாலின் பேசியதாவது, “’நமக்கு நாமே’ பயணத்தைபோன்று, நவம்பர் முதல் வாரத்தில் ’எழுச்சி பயணம்’ துவங்க உள்ளேன். அந்த பயணம், டிசம்பர் முதல் வாரத்தில் முடிவடையும்.”, என கூறினார். தேர்தலுக்காக மட்டுமின்றி, கட்சியை வலுப்படுத்தவும், அரசின் குறைகளை சுட்டிக்காட்டவும் இந்த பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக, பயணத்தின் விவரங்கள் குறித்து விரைவில் தெரியவரும் என கூறினார்.
காவல் துறைக்கு ‘வாக்கி டாக்கி’ வாங்கியதில் ஊழல் புகார் குறித்து வழக்கு தொடுக்க உள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். பொறையார் பனிமனை பழுதடைந்துள்ளதாக திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே, விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்ததாக அவர் கண்டனம் தெரிவித்தார்.