பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் விச்த்யாசாகர் ராவை எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார்.
தமிழக அரசியலில் நாள்தோறும் பல்வேறு பரபரப்புகள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் பழனிச்சாமிக்கு உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு கடிதம் மூலம் கடந்த மாதம் ஸ்டாலின் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் தலைமையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த திமுக எம்எல்ஏ-க்கள், திமுக எம்.பி.,கனிமொழி, காங்கிரஸ் கட்சியின் பேரவைக் கொறடா விஜயதாரணி ஆகியோர், சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தினர். அதேபோல், திமுக சார்பில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.
இதனிடையே, டிடிவி தினகரன், தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள், எம்பி-க்களுடன் இணைந்து தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை கடந்த 7-ம் தேதி சந்தித்தார்.
இத்தகைய சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அனுமதி கோரியிருந்தார். அதையேற்ற ஆளுநர் அவரை சந்திப்பதற்கு இன்று மாலை நேரம் ஒதுக்கியுள்ளார்.
அதன்படி, இன்று மாலை 5 மணியளவில் ஆளுநர் வித்யாசாகர் ராவை ஸ்டாலின் சந்திக்கவுள்ளார். திமுக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் அவருடன் செல்லவுள்ளனர். ஆளுனருடனான இந்த சந்திப்பின் போது, சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்துவார் என தெரிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.