மதவாத சக்திகளை முறியடிக்க உறுதியேற்போம் என திருநாவுக்கரசர் பொன்விழாவில் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் பேசினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரின் பொதுவாழ்வு பொன்விழா மற்றும் 40 ஆண்டுகால சட்டமன்ற-நாடாளுமன்ற பணிகள் பாராட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு தலைமை தாங்கினார்.
தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் சு.திருநாவுக்கரசர் பொன்விழா மலரை வெளியிட, அதனை புதுச்சேரி முதல்-அமைச்சர் வி.நாராயணசாமி பெற்றுக்கொண்டார். ‘
இந்த விழாவில் நல்லக்கண்ணு பேசும்போது: தமிழகம் சீரழிந்த நிலையில் உள்ளது. தமிழக அரசுக்கு என என்ன கொள்கை இருக்கிறது. தமிழக அரசின் நிர்வாகம் சீர்குலைந்துள்ளதோடு, குடிக்க தண்ணீர் கூட இல்லாத நிலையில் தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் மதசார்பற்ற நிலை உருவாக வேண்டும் என்று கூறினார்.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது: மதவாத சக்கிதிகள் நாட்டை உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதசார்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும். கருணாநிதி வைரவிழாவில் அனைத்து தலைவர்களையும் மு.க ஸ்டாலின் ஒன்றிணைத்தார். பாஜக சாரல் புதுச்சேரியில் வீசத் தொடங்கியிருக்கிறது. ஆனால், மக்களின் ஆதரவு எங்களுக்கு இருப்பதால், தவிடு பொடியாக்கி விடுவோம். தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டிய கால கட்டம் தற்போது ஏற்பட்டிருக்கிறது. இதனை மு.க ஸ்டாலின் பொறுப்புடன் செய்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் கூறும்போது: திருநாவுக்கரசர் திராவிட அரசியலை பார்த்திருக்கிறார். தற்போது தேசிய அரசியலை பார்த்துக் கொண்டிருக்கிறார். யாரிடமும் அன்போடு பழகக்கூடியவர் திருநாவுக்கரசர். அவருடன் உள்ள இந்த நட்வு எந்த காலத்திலும் தடைபடாது.
தமிழகத்தில் சட்டமன்றம் உள்ளது. ஆனால், அங்கு ஜனநாயகம் ஒன்று உள்ளதாக என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தற்போது எதிர்கட்சியாக இருக்கும் நாங்கள், என்ன பாடுபடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான். கருணாநதி முதலமைச்சராக இருந்தபோது, எதிர்க்கட்சி என்றாலும் கூட அதற்கான உரிய மரியாதையையும், உரிமையும் அளித்து வந்தார்.
திருநாவுக்கரசரின் 40 ஆண்டுகால வரலாறு திராவிட இயக்கத்திற்கு பயனளித்தது. தற்போது தேசிய பேரியகத்திற்கு பயன்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் மதவாத சக்திகளுக்கு எதிராக முறியடிக்க இந்த விழாவின் மூலம் உறுதியேற்போம் என்று கூறினார்.
இந்த விழாவில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.