காவிரி பிரச்சனையில் திமுக வின் கடந்த கால துரோக வரலாறை மறக்கமுடியுமா? என பாஜக மாநில தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவை எதிர்த்து பாசன மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 11-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 20-ம் தேதி வரை நடந்தது. இதன் இறுதிநாள் விசாரணையில் மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ‘நடுவர் மன்ற உத்தரவில் மாற்றங்களை செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு’ என வாதிட்டார்.
அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான சேகர் நாப்டே, ‘காவிரி பிரச்னையில் மத்திய அரசு மீதும், கர்நாடக அரசு மீதும் நாங்கள் நம்பிக்கை இழந்துவிட்டோம். உச்சநீதிமன்றமே இதில் நீதியை நிலைநாட்டவேண்டும்’ என குறிப்பிட்டார். இந்த வழக்கில் மத்திய அரசு முன்வைத்த வாதம் குறித்து செப்டம்பர் 20-ம் தேதி அறிக்கை விட்ட தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், ‘கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தல் வருவதால், தமிழக நலன்களை புறக்கணிக்க மத்திய அரசு தயாராகிவிட்டது’ என கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதில் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை அளித்த பேட்டியில், “காவிரி பிரச்சனையில் மத்திய பாஜக அரசை குறைசொல்கிறார் ஸ்டாலின். மத்தியில் 18 ஆண்டுகள், தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக காவிரி பிரச்சனையை ஏன் தீர்க்கவில்லை?
சர்க்காரியா கமிசன், பூச்சி மருந்து ஊழல் வழக்கில் தப்பிக்க வேண்டி அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் கட்டளைக்கு பணிந்து காவிரி வழக்கை வாபஸ் வாங்கியது அன்றைய திமுக முதல்வர் கலைஞர். நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை அரசு இதழில் 7 ஆண்டு காலம் தாமதம் ஆனபோது அமைதியாக இருந்தது திமுக ஆட்சி.
இன்று நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்த ஆகும் தாமதத்தை குறைக்கூறுகிறது திமுக. இறுதி தீர்ப்பில் உள்ள 12 க்கும் அதிகமான சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள், விடைகாண முடியாத கேள்விகள் என பல தரப்பு விவாதங்களை கர்நாடக அரசு எழுப்பி உள்ள நிலையில் கூட்டாட்சி தத்துவத்தின் படி முறையான விவாதம் நடத்தி தீர்ப்பை சட்டமாக்கி செயல்படுத்துவது தானே ஜனநாயக நடைமுறை ஆக முடியும்?
இதை மறந்து மத்திய அரசை தினமும் குறைசொல்கிறார் திமுக செயல் தலைவர்! திமுக வின் கடந்த கால காவிரி துரோகமே இன்றைய நடைமுறை சிக்கலுக்கு காரணம் என்பதே உண்மை. இவ்வாறு தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.