மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து ஏதாவது தகவல் இருந்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் அதுகுறித்த விவரத்தை பிரமாண பத்திரமாகவோ அல்லது புகார் மனுவாகவோ ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்று ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவரும், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான டாக்டர் சரவணன், அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆனூர் ஜெகதீசன், ஜெ.தீபாவின் கணவர் மாதவன் உள்பட 70 பேர் நேரடியாகவும், தபால் மூலமாகவும் பிரமாண பத்திரத்தை ஆணையத்துக்கு அளித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
பிரமாண பத்திரம், புகார் மனுக்கள் அளித்தவர்களிடம் இன்று முதல் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்துவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று விசாரணை தொடங்கியது.
தி.மு.க. மருத்துவர் அணி துணை தலைவர் சரவணன் இன்று ஆணையத்தில் நேரில் ஆஜரானார். அப்போது அவர் கூடுதல் ஆவணங்களை கொண்டு வந்திருந்தார்.
அப்போது அவர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பாக பல சந்தேகங்களை எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "தேர்தல் நடந்த நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர் போஸை அங்கீகரித்து வேட்புமனுவின் படிவம் ஏ, பி ஆகியவற்றில் இடதுகை பெருவிரல் ரேகையை பதிவுசெய்ததாக கூறுகிறார்கள்.
ஆனால், நீங்கள் இந்த ஃபார்ம் ஏ படத்தைப் பார்த்தால், நான்கு கைரேகைகளை பார்க்கலாம். விரல்கள் சரியாக, அதாவது அழுத்தமாக இதில் பதிவு செய்யப்படவில்லை.
ஜெயலலிதாவின் கைரேகை வைக்கப்பட்ட 'Form A'
அதே போன்று, இந்த ஃபார்ம் 'பி'-யிலும் ஜெயலலிதாவின் கைரேகை சரியாக வைக்கப்படவில்லை.
Form B
அதேசமயம், இந்த கைரேகையைப் பாருங்கள். இதுதான் சுயநினைவுடன் ஒரு நபர் வைக்கும் கைரேகை ஆகும்.
சுயநினைவுடன் இருக்கும் நபர் வைக்கும் கைரேகை
ஃபார்ம் ஏ, பியில் உள்ள கைரேகைக்கும், இதற்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தாலே, ஜெயலலிதா சுயநினைவின்றி இருந்த போது கைரேகை வாங்கப்பட்டிருப்பது தெரிகிறது. இது சட்டப்படி குற்றமாகும். சுயநினைவுடன் இருப்பவர் வைக்கும் கைரேகை தெளிவாக, அனைத்து வளைவுகளும் தெரியும் வகையில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதாவின் கையெழுத்தில் அப்படி இல்லை. மேலும், ஜெயலலிதாவின் கைரேகை பெற்றது தொடர்பாக வீடியோ ஆதாரங்களும் இல்லை" என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக இரண்டு அரசு மருத்துவர்களுக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அந்த இரு மருத்துவர்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. இருவரும் நாளை விசாரணைக்கு ஆஜராவார்கள் என தெரிகிறது.