மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சிகள் நீட் தேர்வுக்கு எதிராகவும், அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டம் நடந்தி வந்தனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்கக் கோரி ஜி.எஸ் மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை இன்று(வெள்ளிக்கிழமை)விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த தடை விதித்தது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக எந்தவித போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது. போராட்டம் நடத்துவது என்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகவே எடுத்துக்கொள்ளப்படும். கடையடைப்பு, சாலைமறியல் என எந்தவித போராட்டத்தையும் நடத்தக்கூடாது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது என்பது மாநில அரசின் கடமை என்பதால், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இதனை அரசு கையாள வேண்டும் என உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், திமுகவின் சார்பில், நீட் தேர்விற்கு எதிராக மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன பொதுக் கூட்டம் திருச்சியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்திற்கு தற்போது திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் தடை விதித்துள்ளார். மேலும், திருச்சியில் கண்டன் கூட்டம் நடத்த அனுமதி இல்லை என்று பொதுக்கூட்டம் நடத்தவிருந்த எதிர்க்கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை சரியாக ஐந்து மணிக்கு திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் இந்த கண்டன பொதுக் கூட்டம் நடைபெறவிருந்தது. இதற்காக மேடைகள் அமைக்கப்பட்டு, அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. 25,000 இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன. தொண்டர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர். திமுக தலைமையில் நடக்கவிருந்த இந்த கண்டன பொதுக் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சியும் பங்கேற்பதாக இருந்தன.
இந்தக் கூட்டத்தில் ஸ்டாலின், திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன் ஆகிய தலைவர்களும் கலந்து கொள்ள இருந்தனர். மாநகரம் முழுவதும் இந்த பொதுக் கூட்டம் தொடர்பான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. தொண்டர்கள், பல்வேறு பகுதிகளில் இருந்தும் பேருந்துகளில் வந்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பில் எதிரொலியாக, திருச்சியில் இந்த கண்டன பொதுக்கூட்டத்திற்கு மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது.
இதுகுறித்து திமுக சார்பில் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த கே.என். நேரு பேட்டியளித்த போது, "முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை இப்போது அனுமதி மறுத்துள்ளது. இது மிகவும் கண்டனத்திற்கு உரியது. திருச்சி மாநகர துணை ஆணையர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து இந்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் உங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது' என்றார். ஆனால், அந்த நோட்டீஸ் இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. ஸ்டாலின் அவர்கள் தற்போது திருச்சி வந்துக் கொண்டிருக்கிறார். அவர் வந்த பின் தான் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.
இந்த நிலையில், திருச்சிக்கு வந்த பின் வக்கீல்களுடனும், மற்ற கட்சித் தலைவர்களுடனும் ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், ஸ்டாலின் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த ஹோட்டலுக்கு நேரடியாக வந்த திருச்சி ஆணையர் அருண், "பொதுக்கூட்ட தடை உத்தரவு நோட்டீசை நேரடியாக கொடுக்க வந்துள்ளேன்" என்றார்.
இதன்பின் பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், "திட்டமிட்டப்படி நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெறும். அனைவரும் அங்கு வாருங்கள்" என்று சொல்லிவிட்டு பொதுக்கூட்டத்திற்கு கிளம்பிச் சென்றார்.
இரவு 7.30 : நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு தடை செய்ய வில்லை. சட்டம் ஒழுங்கிற்கு இடையூறாக போராட்டங்கள் இருக்கக்கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து டெல்லி தகவல்கள் தெளிவுபடுத்தின. இதைத் தொடர்ந்து கூட்டத்தில் நிலவிய பதற்றமும் பரபரப்பும் குறைந்தன.
7.15 மணி : இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், கொட்டும் மழைக்கு இடையே பேசினார்.
இரவு 7.10 : போலீஸ் தடையை மீறி நடந்த இந்தக் கூட்டத்தில் திடீரென மழை குறுக்கிட்டது. கூட்டத்தினர் தங்கள் இருக்கைகளை தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
6.45 மணி : விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பேசத் தொடங்கினார். அவர் கூறுகையில், பாஜக.வின் தூண்டுதல் அடிப்படையிலேயே இந்தக் கூட்டத்திற்கு திருச்சி போலீஸ் கமிஷனர் தடை விதித்ததாக குற்றம் சாட்டினார்.
6.35 மணி : மமக தலைவர் ஜவாஹிருல்லா முதல் நபராக பேசினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் ஒரு பகுதியை மேடையில் வாசித்த ஜவாஹிருல்லா, ‘சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் போராட்டம் நடத்தக்கூடாது என்றுதான் கூறியிருக்கிறது. பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கவில்லை.’ என குறிப்பிட்டவர், ‘பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே ஒரு நாள்தான் சிறைத் தண்டனை கிடைத்தது. இந்த நீட் எதிர்ப்பு போராட்டத்திற்காக எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையில் இருப்போம்’ என முடித்தார்.
மாலை 6.30 : மாணவி அனிதா மறைவுக்கு 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தும்படி அனைவருக்கும் திமுக திருச்சி மாவட்டச் செயலாளர் நேரு வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று கூட்டம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது.
மாலை 6.25 : கண்டனப் பொதுக்கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
மாலை 6.35 மணி : திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மேடைக்கு வந்தார். அவரை சுற்றிலும் நிர்வாகிகள் வந்தனர். கூட்டம் நடக்குமோ, நடக்காதோ? என கலக்கத்தில் இருந்த கூட்டத்தினர் ஆர்ப்பரித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.