நீட் தேர்வு: கூடுதல் மருத்துவ இடங்களுக்கான தமிழக அரசின் கோரிக்கைக்கு வரவேற்பு

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவ இடங்களை உருவாக்கி வழங்கிட வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக மருத்துவ இடங்களை உருவாக்கி வழங்கிட வேண்டும் என்ற தமிழக அரசு கோரிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம், கூடுதல் இடங்களை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து இச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெற மத்திய – மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஓராண்டுக்கு மட்டும் விலக்கு வழங்கும் முயற்சி, தமிழக உரிமையை நிரந்தரமாக விட்டுக் கொடுக்கும் நடவடிக்கையாகும். இது கண்டனத்திற்குரியது.

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றுத் தருவது குறித்து மத்திய அரசு உரியகாலத்தில் முடிவுகளை தெரிவிக்கவில்லை. மசோதாவை திருப்பி அனுப்பவும் இல்லை. இதனால், தமிழகத்தில் நீட் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை இருக்கும் என ஒரு பிரிவு மாணவர்கள் நம்பினர். மறுபுறம், நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுவிடுவோம் என தமிழக அரசும் தொடர்ந்து அறிவித்து வந்தது. இதனால்,மாணவர்களில் ஒரு பகுதியினர் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை இருக்கும் என நம்பினர்.

மத்திய – மாநில அரசுகளின் இத்தகைய செயல்பாட்டால், மாணவர்கள் குழப்பம் அடைந்தனர். ஒரு பிரிவு மாணவர்கள் நீட்டுக்கு தயார் செய்தனர். மற்றொரு பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயார் செய்தனர். நடைபெற்ற நீட் தேர்விலும், வினாத்தாளே மாற்றி வழங்கப்பட்டது. மத்திய அரசின் பாடத்திட்டத்தில் நீட் தேர்வு நடந்ததால் தமிழக பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் அதிக மதிப்பெண் வாங்கவில்லை. இது இரு தரப்பு மாணவர்களிடையே கசப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், பிளஸ் 2 மூலம் அதிக கட் ஆஃப் வாங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தினால், நீட் முலம் அதிக ரேங் வாங்கிய மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதற்கு மத்திய – மாநில அரசுகளே காரணம்.

இதனிடையே, உச்ச நீதிமன்றம் இருதரப்பு மாணவர்களும் பாதிக்காத வகையில் சமரசத்தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. எனவே, இந்தப் பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வரும் வகையில், நீட்டிலிருந்து நிரத்தர விலக்கு வழங்க மத்திய – மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீட் தேர்வு விலக்கால், இவ்வாண்டு நீட்டில் அதிக ரேங் வாங்கிய மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் பாதிக்காத வகையில், இரு தரப்பு மாணவர்களும் பயன் பெறும் வகையில், கூடுதல் மருத்துவ இடங்களை உருவாக்கி வழங்கிட வேண்டும். 2600 இடங்களை கூடுதலாக ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு, இந்திய மருத்துவக் கழகத்திடம் கோரி இருப்பது வரவேற்கத்தக்கது. இதை 3000 இடமாக உயர்த்த வேண்டும். ஒரு வேளை, இந்திய மருத்துவக் கழகம் இதற்கு அனுமதி கொடுக்காவிட்டால், மத்திய அரசே தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இடங்களை அதிகரிக்க வேண்டும். தனது பொறுப்பை மத்திய அரசு தட்டிக் கழிக்கக்கூடாது.

அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ இடங்களை அதிகரிக்க எம்.சி.ஐ.-யின் அனுமதி அவசியமல்ல என ஏற்கனவே, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றில் கூறியுள்ளது. இதை கருத்தில் கொண்டு, மத்திய மாநில அரசுகள் மருத்துவ இடங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இது குறித்து மத்திய – மாநில அரசுகள் தமிழக மாணவர்களின் நவன் காக்கும் வகையில் உறுதியான முடிவு எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் மத்திய – மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர்சேர்க்கை பல்வேறு பிரச்சனைகளை உருவாக்கிவருகிறது. மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேரும் விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. பிளஸ் 2 வில் கட் ஆஃப் மதிப்பெண் பல்வேறு காரணங்களால்,சிறிது குறைந்தால் கூட,மருத்துவம் பயில விரும்பும் மாணவர்களுக்கு அடுத்த ஒரு வாய்ப்பே இல்லாமல் போய்விடுகிறது. இதனால், மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இதனால், கூடுதல் வாய்ப்பை தருகின்ற வயது வரம்பும் இல்லாத நீட் தேர்வை ஒரு பிரிவு மாணவர்கள் வரவேற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்த முயற்சிகள் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேரமுடியும் என்ற நிலை, மாணவர்கள் மத்தியில் இத்தகைய மன நிலையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாணவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, தமிழக அரசே தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு தனியாக மாநில பாடத்திட்டத்தின் அடிப்படையில் நுழைவுத்தேர்வை அடுத்த ஆண்டுமுதல் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது. தமிழக மாணவர்களை போட்டித் தேர்வுக்கு பயிற்றுவிக்க, பாடத்திட்டத்தை, கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் எனவும் சமூக சமத்துதவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.

இதன் மூலம், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ மாணவர் சேர்க்கையால் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை தடுத்திட முடியும். நமது தமிழக மாணவர்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் அதிக இடங்களை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close