ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது, ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கினார். இதில் முறைகேடு நடந்ததாக சி.பி.ஐ. வழக்குப் பதிவு செய்தது. அந்நிய முதலீடுக்கு அனுமதி கொடுத்தது தொடர்பாக சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்பட 7 பேர் மீது 120(பி) கூட்டுச்சதி, 420 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இன்று காலை முதல், சுமார் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் ரெய்டு நடத்திய பின், மதியம் அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று அங்கும் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்களையும், கணினி ஹார்ட் டிஸ்குகளையும் சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாக தெரிகிறது. அதன் பின்னர் அவரை சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து, ‘எங்களுக்கு கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் கார்த்தியிடம் விசாரணை நடத்தி வருகிறோம். அவர் கூறும் தகவல்களைப் பொறுத்து, அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்’ என்று சிபிஐ அதிகாரி ஒருவர் கூறினார்.
ரெய்டு பின்னர் குற்றம்சாட்டப்பட்டவரை சிபிஐ விசாரணைக்காக அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வது வழக்கம் இல்லை. ஆனால் கார்த்தியை சிபிஐ அதிகாரிகள் சிபிஐ அலுவலகம் அழைத்துச் சென்றிருப்பதால், அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.