முதல் முறையாக பொது நிகழ்ச்சி ஒன்றில் இடதுசாரிகளைவிட திருமாவளவன் முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறார். இதனால் சிறுத்தைகளுக்கு ஏக உற்சாகம்!
பொது நிகழ்ச்சிகளில் கிடைக்கும் முக்கியத்துவத்தை வைத்தே அரசியல் தலைவர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த கட்சிகளின் பலத்தை எடைபோடும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. அடிமட்ட நிர்வாகிகளில் ஆரம்பித்து அரசியலில் பொன்விழா கண்ட தலைவர்கள் வரை இந்த உணர்வுக்கு ஆட்பட்டவர்கள்தான்.
சாதாரண தெருமுனை பொதுக்கூட்டங்களிளுக்கான போஸ்டர்களில் பெயரை சின்னதாக போடுவதால் எழும் பிரச்னைகள் இந்த ரகம்தான்! அதேபோல வெவ்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் சீனியாரிட்டியை கடைபிடிக்காத காரணத்தால் சில தலைவர்கள் முறுக்கிக்கொண்டு, கூட்டணியை உடைத்த கதைகளும் தமிழக அரசியலில் நடந்திருக்கிறது.
அப்படி நடைமுறையில் இருக்கும் ஒரு அம்சம் என்னவென்றால், பொதுவான நிகழ்ச்சிகளில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மற்றும் இடதுசாரி தலைவர்களின் பெயர்களுக்கு அப்புறம்தான் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் பெயரை இடம்பெற வைப்பார்கள். தலைவர்களின் அரசியல் அனுபவம் அல்லது கட்சிகளின் செல்வாக்கு என்கிற அடிப்படையில் இந்த வரிசைப்படுத்தல் இருக்கலாம்.

ஆனால் முதல்முறையாக திராவிடர் கழகம் நடத்தும் ஒரு நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர் மற்றும் இடதுசாரித் தலைவர்களைவிட திருமாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. வருகிற 28-ம் தேதி மாலை 5 மணிக்கு தி.க. தலைமையகமான பெரியார் திடலில் மாணவி அனிதாவுக்கு நடைபெறும் நினைவேந்தல் நிகழ்ச்சிதான் அது!
திராவிடர் கழகம் மற்றும் அதன் மாணவர் அமைப்பு சார்பில் நடைபெறும் இந்த விழாவுக்கு தி.க. தலைவர் கி.வீரமணி தலைமை தாங்குகிறார். மாணவி அனிதாவின் உருவப்படத்தை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திருமாவளவனை முன்னிலை வகிப்பதாக விழா அறிவிப்பில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
திராவிடர் கழகம் நடத்தும் இந்த விழாவில் அந்தக் கட்சியின் துணைத்தலைவர் கலி பூங்குன்றனையோ, அல்லது அரசியலில் சீனியரான திருநாவுக்கரசரையோ முன்னிலை வகிப்பதாக குறிப்பிட்டிருக்க முடியும். ஆனால் திருநாவுக்கரசர், ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் வீரபாண்டியன், திராவிடர் தமிழர் பேரவை சுபவீ ஆகியோரின் பெயர்களை உரை நிகழ்த்துவோர் பட்டியலில் திருமாவின் பெயருக்கு பின்னால் இணைத்திருப்பது மட்டுமின்றி, திருமாவின் பெயரைவிட சின்னதாகவும் போட்டிருக்கிறார்கள்.
திருநாவுக்கரசரோ, இடதுசாரித் தலைவர்களோ இதை பிரச்னை ஆக்குகிறவர்கள் இல்லை என்பதுதான் திராவிடர் கழகத்திற்கு இதில் உள்ள செளகரியம்! எனினும் முதல் முறையாக இப்படி பல கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் வெளி நிகழ்ச்சி ஒன்றில் தங்கள் தலைவருக்கு முன்னுரிமை கிடைத்திருப்பதில் சிறுத்தைகள் உற்சாகம் ஆகியிருக்கிறார்கள்,
‘அரசியல் நீரோட்டத்தில் அப்படியே இணைந்து ஓடுகிற தலைவர்கள் பலர்! ஆனால் திருமா, அரசியலில் போக்கை மாற்றும் வல்லமை படைத்தவர். 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு கூட்டணி ஆட்சி முழக்கத்தை முன்வைத்து ஒரு அணியை கட்டமைத்தது அதற்கு ஒரு உதாரணம். இப்போதும் சில தினங்களுக்கு முன்பு கேரள, புதுவை முதல்வர்களையும் இங்குள்ள ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களையும் இணைத்து மாநில சுயாட்சி மாநாடு நடத்தியது அவருக்கான இடத்தை வலிமைப்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் பாஜக எதிர்ப்பணியில் இன்று திருமாவுக்குத்தான் முக்கிய இடம்’ என்கிறார்கள் சிறுத்தைகள்!
தேர்தல் அணி சேர்க்கையில்தான் சரியான விடை கிடைக்கும்.