மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கும் பயன்படாது. சம்பா சாகுபடிக்கும் பயன்படாது என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு போல, காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் அது வீணாக கடலில்தான் சென்று கலக்கும் என்று கூறப்படுகிறது.
காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதலமைச்சர் பழனிசாமி இன்று மலர் தூவி தண்ணீர் திறந்து வைத்துள்ளார். கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், அம்மாநில அணைகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் 2.53 லட்சம் கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வருகிறது. அணையிலிருந்து 1000 முதல் 10,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 120 அடியில், தற்போது 101.220 அடி உயரம் நீர் தேக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 93.4 டி.எம்.சியில் தற்போது 66.43 டி.எம்,சி தண்ணீர் அணையில் உள்ளது.
கர்நாடகாவில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மேட்டூர் அணை வேகமாக நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியான சூழலில், அணையில் இருந்து மேலும் கூடுதலாக உபரி நீர் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக திருச்சியில் உள்ள முக்கொம்பு அணை மதகுகள் உடைந்தன. முக்கொம்பு அணையின் மதகுகள் உடைந்ததால் தண்ணீர் வீணாக கடலுக்கு சென்று கலந்தது. இதையடுத்து, அணையை பார்வையிட்ட முதலமைச்சர் பழனிசாமி, முக்கொம்புவில் ரூ.387.60 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு ரூ.38.85 கோடி மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மேட்டூர் அணை நிரம்பினால், காவிரியில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும்போது உபரி நீர் கடலுக்குச் சென்று வீணாகும் என்று கூறப்படுகிறது. கர்நாடகாவில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்துவிட்டது. அதனால், தற்போது வருகிற தண்ணீர் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவுக்கே சரியாக இருக்கும் என்றும் அணையிலிருந்து 3000 கன அடி தண்ணீர்தான் திறக்கப்படுகிறது என்பதால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், கர்நாடகாவில் தொடர்ந்து கன மழை பெய்தால் அங்குள்ள அணைகளிலிருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டு, மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும். அப்போது, அந்த தண்ணீர் விணாக கடலுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த அயிலை சிவசூரியன் கூறுகையில் “இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரலாறு காணாத மழை பெய்தது என்று கூறினோம். அடுத்த ஆறு மாதத்தில் தண்ணீர் இல்லை வறட்சி என்று கூறுகிறோம். இப்படியான சூழலில், காவிரியில் தண்ணீர் வரும்போது அதை வறட்சி மாவட்டங்களுக்கு பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு திட்டங்களை வகுக்க வேண்டும்.
மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீணாக கடலுக்கு செல்லாமல் தடுக்க, காவிரிக் கரையோரம் இருக்கிற ஏரி, குளங்களில் தண்ணீரை நிரப்ப வேண்டும். தமிழக முதலமைச்சர் சட்டப் பேரவையில் பேசுகிறபோது, 10,000 தடுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார். 10,000 தடுப்பணைகள் வேண்டாம் சரியான இடங்களில் 1000 தடுப்பணைகள் கட்டினாலே போதும்.
கடந்த ஆண்டு போல, இந்த ஆண்டும் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டால் முக்கொம்புவில் கட்டப்பட்டிருக்கிற தடுப்புச்சுவர் தாங்குமா என்பது தெரியவில்லை. அதிக அளவு தண்ணீர் திறந்துவிடும்போது உடைப்பு ஏற்பட்டால், தண்ணீர் கடலில்தான் சென்று கலக்கும். அது போல, நடக்க கூடாது என்றால் காவிரிக் கரையோரம் இருக்கிற அனைத்து ஏரி குளங்களையும் நிரப்ப வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். கடை மடைவரை தண்ணீர் செல்வதற்கு கால்வாய்கள் தூர்வார வேண்டும்” என்று கூறினார்.
காவிரி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கருத்தாளர் சேதுராமன் கூறுகையில், “இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை முன்னறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதனால், மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் குறுவை சாகுபடிக்கும் பயன்படாது; சம்பா சாகுபடிக்கும் பயன்படாது. ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட்டால் மட்டும்தான் குறுவை சாகுபடிக்கு பயன்படும். ஏனென்றால், இனிமேல் ஒரு விவசாயி நாற்று விட்டு அது வளர்ந்து அக்டோபர் மாத்தில் நடவு செய்தால் அது வடகிழக்கு பருவ மழையில் அடிபட்டுப்போகும். இந்த ஆண்டு, தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் சிலர் ஆழ்குழாய் தண்ணீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி செய்துவருகிறார்கள்.
தற்போது முக்கொம்புவில் கட்டியிருக்கிற தடுப்புச்சுவர் 50,000 கன அடி தண்ணீர் வரை தாக்குப்பிடிக்கும் அதற்கு மேலே தண்ணீர் வந்தால், கொள்ளிடத்தில்தான் தண்ணீர் திறக்கப்படும்.
மேட்டூர் அணை நிரம்பிய பிறகு, ஒரே நேரத்தில் அதிக அளவு தண்ணீர் திறந்துவிட்டால் முக்கொம்பு பகுதியில் சிக்கல் ஏற்படும் என்பதால்தான் அணை நிரம்புவதற்கு முன்னதாகவே படிப்படியாக தண்ணீர் திறக்கப்படுகிறது.
அதே போல, கல்லணைக் கால்வாய், வென்னாறு, காவிரிக் கால்வாய்களில் அதிகபட்சம் 35 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசனத்துக்காக கையாள முடியும். அதற்குமேலே வருகிற தண்ணீர் கொள்ளிடத்தில்தான் திறந்துவிடப்படும். அந்த தண்ணீர் கடலில் சென்று கலக்கும். அதனால், தமிழக அரசு தஞ்சாவூர், திருவாரூர் பகுதிகளில் உள்ள புதிய ஆயக்கட்டு கால்வாய்களை தூர்வாரி ஏரி,குளங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். காவிரியை ஒட்டியுள்ள ஏரி குளங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும். பல இடங்களில் கால்வாய்களில் கதவனைகளை சரி செய்ய வேண்டி உள்ளது. அரசு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதே நேரத்தில், இப்போது திறந்துவிட்டிருக்கிற இந்த தண்ணீர் குறுவை சாகுபடிக்கு பயன்படாது என்றாலும், இந்த தண்ணீரைக்கொண்டு ஏரி, குளங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அது நிலத்தடி நீர் உயர்வதற்கு வழி செய்யும். இப்படி சேமிக்கப்படும் தண்ணீர் அடுத்து வரும் சம்பா சாகுபடிக்கு பயன்படும்” என்று கூறினார்.
இதனிடையே, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பாஸ்கரன் கூறுகையில், முக்கொம்பு அணை உடைப்பு ஏற்பட்ட பகுதியில் ரூ.38.85 கோடி ரூபாய் மதிப்பில் 110 மீட்டர் நீளத்திற்கு தற்காலிக அரைவட்ட தடுப்பு அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 3 நாட்களில் நிறைவு பெறும் என்றும், காவிரியில் 1,00,000 கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டாலும் தற்காலிக தடுப்பிற்கு பாதிப்பின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் கடந்த ஆண்டு போல, இந்த ஆண்டும் வீணாக கடலுக்குச் சென்று கலக்காமல் இருக்க வேண்டும் என்பதோடு, காவிரிக்கரையோரம் இருக்கிற ஏரி குளங்களை நிரப்பி தண்ணீரை சேமிக்க வேண்டும் என்பதே காவிரி டெல்டா விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்துமா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.