நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் அரசியல் வருகை குறித்து எப்போதும் தன்னிடம் ஊடகங்கள் கேள்விகேட்பது பிடிக்கவில்லை எனவும், அவர்களிடம் சென்றுதான் என்னை குறித்து கேள்விகேட்க வேண்டும் எனவும், தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், புதிய ஆளுநர் ராம்லால் புரோஹித்தை சனிக்கிழமை காலையில் ராஜ்பவனுக்கு சென்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு விஜயகாந்த் மனு அளித்தார்.
அதன்பின், அவர் ஊடகங்களை சந்தித்தார். அப்போது, பத்திரிக்கையாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
ஆளுநருக்கு தமிழ்நாட்டு பிரச்சனைகள் குறித்து மனு அளித்துள்ளீர்களா? புதிய ஆளுநர் எப்படி செயல்படுவார் என நினைக்கிறீர்கள்?
கெயில் திட்டம், விவசாயிகள் பிரச்சனை, உள்ளாட்சி தேர்தல், சட்டம் - ஒழுங்கு, டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் குறித்து உடனடி தீர்வு காணுமாறு மனு அளித்துள்ளோம். தமிழக பிரச்சனைகளுக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளார். புதிய ஆளுநர் இப்போதுதானே வந்துள்ளார். அவரது நடவடிக்கைகளை பொறுத்திருந்து பார்ப்போம்.
காவல் துறையில் வாக்கிடாக்கி வாங்கியல் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே...
வாக்கி டாக்கி ஊழல் குறித்து நாம் எதுவும் பார்க்கவில்லை. நாம் பார்த்தால்தானே ஊழல் நடைபெற்றதா? இல்லையா? என்பதை சொல்ல முடியும்.
சசிகலா கணவர் நடராஜனுக்கு உறுப்பு மாற்ற அறுவை சிகிச்சைக்காக உறுப்பு தானம் வழங்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக புகார் உள்ளதே...
நடராஜன் விஷயம் குறித்து எனக்கு தெரியாது. தெரியாததை பற்றி நாம் பேசக்கூடாது.
வடகிழக்கு பருவமழைக்கு தமிழகம் தயாராக இருக்கிறது என நினைக்கிறீர்களா?
பருவமழைக்கு தமிழக மக்கள் தயாராக இருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மக்கள் தயாராக இருக்கின்றனர். ஆனால், தமிழக அரசுதான் தயாராக இல்லை.
வரப்போகும் தேர்தல்களில் யாருடனாவது கூட்டணி அமைப்பீர்களா?
இனிமேல் யாருடனும் கூட்டணி இல்லை. உங்கள் கூட்டணிக்கெல்லாம் ஒரு பெரிய கும்பிடு. (ஊடகங்களை பார்த்து தலைக்கு மேல் கையை தூக்கி விஜயகாந்த் கும்பிட்டார்.) நாங்கள் தனியாகத்தான் தேர்தலில் போட்டியிடுவோம்.
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவுக்கு ஏன் செல்லவில்லை?
எனக்கு அழைப்பு இல்லாததால் செல்லவில்லை.
விஷால் நடிகர் சங்கத்தினருக்கு ஊடகங்களில் அழைப்பு விடுத்தாரே...
அன்றைக்கு ஒருநாள் மட்டும் நான் செய்தித்தாள், தொலைக்காட்சி எதையுமே பார்க்காமல் இருந்திருப்பேன். அதனால், விஷால் அழைப்பு விடுத்தது எனக்கு தெரியாது.
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் அரசியலுக்கு வருவது குறித்து...
அவர்கள் அரசியலுக்கு வந்தால் வரட்டுமே. அவர்களை பற்றி ஊடகங்கள் எப்போதும் என்னிடமே கேள்வி கேட்பது பிடிக்கவில்லை. என்னைப்பற்றிதான் அவர்களிடம் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.
முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் செயல்பாடுகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
திரையில் எப்படி சிவாஜி கணேசனும், கமல்ஹாசனும் நடிக்கிறார்களோ, அதுபோலத்தான் ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். நடிக்கின்றனர்.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை நீங்கள் சென்று பார்க்கவில்லை. அதில் உங்கள் செயல்பாடு என்ன?
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை சென்று மற்றவர்கள் பார்த்தவுடனேயே எல்லோருக்கும் குணமடைந்துவிட்டதா? எல்லோரையும் அவர்கள் காப்பாற்றிவிட்டார்களா? நான் உங்களிடம் சொல்லிவிட்டுதான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
தேமுதிக சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படுமா?
எனக்கு மிகவும் பிடித்தவர் எம்.ஜி.ஆர் என்பதை ஏற்கனவே நான் சொல்லியிருக்கிறேன். ஆனால், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தேமுதிக சார்பில் கொண்டாடப்பட மாட்டாது.
இவ்வாறு ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு விஜயகாந்த் பதிலளித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.