தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சமூக வலைத்தளங்களில் தரமற்று விமர்சிக்கும் சூர்யா ரசிகர்களுக்கு, சூர்யா நற்பணி மன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக, நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக பத்திரிக்கை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். இதற்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “கோடிகளுக்காக நடிக்கும் நடிகர் சூர்யாவுக்கு நீட் தேர்வு குறித்து என்ன தெரியும்?”, என விமர்சித்தார்.
இதையடுத்து, நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் தமிழிசை சௌந்தரராஜனை சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜனை தரமற்று விமர்சிப்பவர்களுக்கு சூர்யா நற்பணி மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்தது.
இதுதொடர்பாக சூர்யா நற்பனி மன்றம் வெளியிட்ட அறிக்கையில், “சூர்யா நீட் தேர்வு குறித்து பத்திரிக்கை ஒன்றில் கடிதம் எழுதியிருந்தார். அதற்கு சமூகத்தின் பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆக்கப்பூர்வமான வரவேற்புகள் கிடைத்தன. ஆனால், எதிர்பாராத விதமாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டும் சூர்யாவை மேலோட்டமாக விமர்சித்திருந்தார்.
அது அவருடைய தனிப்பட்ட கருத்து. ஆனால், அதற்கு எதிர்மறையாக ரசிகர்கள் சிலர் சமூக வலைத்தளங்களில் தமிழிசை சௌந்தரராஜனை தரமற்று விமர்சித்து வருவதை காண்கிறோம். இதனை சூர்யா ஒருபோதும் விரும்பமாட்டார். கருத்து தளத்தில் வரும் விமர்சனங்களை நேர்மறையாக எதிர்கொள்வதே சூர்யா நமக்கு கற்றுக்கொடுத்த பண்பு. அதைவிடுத்து இதைபோன்று தரமற்ற முறையில் செயல்படும் மன்ற உறுப்பினர்களையும், சமூக வலைத்தளங்களில் இயங்கும் ரசிகர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
மற்றபடி, அந்த கட்டுரையிலுள்ள கருத்துகளுக்கும், செயல் வடிவத்துக்கும் சூர்யா எப்போதும் உறுதுணையாக இருப்பார். ஒருவர் நம்மை கேள்வி கேட்பதாலேயே நம்முடைய உண்மை தன்மையை அவரிடம் விவரிக்க வேண்டியதில்லை. நம் செயல்கள் யாரையும் காயப்படுத்தாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளித்தால் போதும். எம் தம்பிமார்களின் செயல்கள் எந்த விதத்திலாவது தமிழிசை சௌந்தரராஜனை காயப்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.”, என குறிப்பிடப்பட்டிருந்தது.