‘நமது எம்.ஜி.ஆரில் எடப்பாடியின் பெயர், படம் போடவேண்டாம்!’ : டி.டி.வி.தினகரன் அதிரடி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை முதல்முறையாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களின் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை முதல்முறையாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழ் தவிர்க்க ஆரம்பித்திருக்கிறது. சில தினங்களுக்கு முன்புதான் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழ் என இதற்கு எடப்பாடி பழனிச்சாமி ‘சர்டிபிகேட்’ கொடுத்தது குறிப்பிடத்தக்கது. பெங்களூரு விவகாரத்தில் முதல்வரும் அமைச்சர்களும் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்காததால் டி.டி.வி.தினகரன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 1988-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி ‘நமது எம்.ஜி.ஆர். நாளிதழை ஜெயலலிதா தொடங்கினார். அன்று முதல் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளிதழாக ‘நமது எம்.ஜி.ஆர்’ செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பல அறிக்கைகள், தொண்டர்களுக்கு அவர் எழுதும் கடிதங்கள், கட்சி நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட விவரங்களை நமது எம்.ஜி.ஆரை பார்த்துதான் அ.தி.மு.க.வினர் மட்டுமல்ல, பிற ஊடகத்தினரே தெரிந்து கொள்ளவேண்டியிருந்தது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு கட்சிக்குள் பிளவுகள் வெடித்த நிலையில், ‘நமது எம்.ஜி.ஆர்’ தொடர்ந்து சசிகலா ஆதரவு நிலையிலேயே இயங்குகிறது. குறிப்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து பிரிந்தபோது அவரை மிகக் கடுமையாக விமர்சனம் செய்தது ‘நமது எம்.ஜி.ஆர்.’
அதேபோல ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நிறுத்தம், சசிகலாவுக்கு தண்டனை, இரட்டை இலை முடக்கம், டி.டி.வி.தினகரன் கைது ஆகிய பிரச்னைகளில் மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியோ, இதர அமைச்சர்களோ மூச்சு விடவில்லை. ஆனால் அப்போதும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ மட்டுமே மத்திய அரசை சாடியது. மே 31-ம் தேதி மத்திய மோடி அரசின் மூன்றாண்டு சாதனைகளை பா.ஜ.க. கொண்டாடியது. அதையொட்டி தமிழக அரசு சார்பில் மாவட்டம் தோறும் மத்திய அரசின் திட்டங்களை தொகுத்து வழங்கும் பணியையும் அதிகாரபூர்வமாகவே செய்தார்கள். ஆனால் அதே நாளில் வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழில் ‘மூச்சு முட்ட பேச்சு! மூன்றாண்டு போச்சு!’ என்ற தலைப்பில் மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சித்து முழுப்பக்க கவிதை வெளியானது.
‘இதெல்லாம், நிஜமாகவே அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ கருத்தா?’ என்கிற விவாதம் அப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் காரசாரமாக பேசப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் அதற்கு விளக்கம் கொடுத்தவர்கள், ‘ஒரு பத்திரிகை என்ற அடிப்படையில் சுதந்திரமாக கருத்து வெளியிட நமது எம்.ஜி.ஆருக்கு உரிமை உண்டு’ என குறிப்பிட்டனர்.
நிஜமாகவே அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக ‘நமது எம்.ஜி.ஆர்.’ தொடர்கிறதா? என்கிற சந்தேகத்திற்கு, கடந்த 11-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முற்றுப்புள்ளி வைத்தார். அன்றுதான் ‘நமது எம்.ஜி.ஆர்.’ 29 ஆண்டுகளைக் கடந்து 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி அ.தி.மு.க. (அம்மா அணி) துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் டி.டி.வி.தினகரனும், ஆட்சியின் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிச்சாமியும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர். இரு கடிதங்களுமே அந்த இதழின் முதல் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டன. எடப்பாடி அனுப்பியிருந்த கடிதத்தில், ‘அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு’ என்றே நமது எம்.ஜி.ஆரை குறிப்பிட்டிருந்தார். ‘அம்மாவின் ஆட்சிக்கும், அம்மா ஆட்சியின் நலத்திட்டங்களை நிறைவேற்றவும் நமது எம்.ஜி.ஆர். உறுதுணையாக இருப்பதாக’ அந்த வாழ்த்துக் கடிதத்தில் பாராட்டியிருந்தார் எடப்பாடி! நிஜமாகவே அதுவரை மத்திய அரசை சாடியிருந்தாலும்கூட, தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை பிரதானமாகவே ‘நமது எம்.ஜி.ஆரில்’ வெளியிட்டு வந்தார்கள்.
ஆனால் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடு என எடப்பாடி ‘சர்டிபிகேட்’ கொடுத்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில், கடந்த 16-ம் தேதி முதல் ‘நமது எம்.ஜி.ஆர்’ அடியோடு மாறியிருக்கிறது.
கடந்த 16-ம் தேதி வெளியான ‘நமது எம்.ஜி.ஆர்.’ இதழில், ‘சசிகலா மீது அவதூறு பரப்பிய பெங்களூரு டி.ஐ.ஜி. மீது நடவடிக்கை’ என்பதுதான் பிரதான செய்தி! முன்தினம் காமராஜர் உருவப்படத்திற்கு முதல்வரும் அமைச்சர்களும் மாலை அணிவித்த படத்தையும் செய்தியையும் முதல் பக்கத்தில் சின்னதாக வெளியிட்டிருந்தார்கள். அந்தச் செய்தியில் அமைச்சர்கள் யார் பெயரும் இல்லை. அதே நாள் இதழின் கடைசி பக்கத்தில், ‘மாவட்டம்தோறும் அம்மா கிராமம் அமைக்க 110 விதியின்கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு’ வெளியிடப்பட்டதாக செய்தி இருந்தது. அந்தச் செய்தியில் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் இல்லை.
ஜூலை 17-ம் தேதி வெளியான நமது எம்.ஜி.ஆரில் ஒரு இடத்தில்கூட முதல்வர் எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் பெயரோ, படமோ இல்லை. மாறாக, ‘சசிகலா ஆணைப்படி அ.தி.மு.க. எம்.பி.க்களும் எம்.எல்.ஏ.க்களும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு வாக்களிக்க இருப்பதாக’ செய்தி இருந்தது. சசிகலா விவகாரத்தில் பெங்களூரு சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் புகழேந்தி கொடுத்த பேட்டியும் அதே நாளில் முதல் பக்கத்தில் வந்தது.
ஆனால் முன்தினம் சென்னை கொடுங்கையூரில் பேக்கரி தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து ஆறுதல் சொன்னதோ, உயிரிழந்த தீயணைப்புப் படை வீரர் ஏசுராஜ் குடும்பத்திற்கு அரசு சார்பில் 13 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக எடப்பாடி அறிவித்ததோ படமாகவோ செய்தியாகவோ இல்லை. இன்னும் சொல்லப்போனால் 17-ம் தேதி இதழில் ஒரு இடத்தில்கூட முதல்வர் மற்றும் அமைச்சர்களின் பெயரோ படமோ இல்லை. இதிலிருந்து எடப்பாடிக்கும் அவரது அமைச்சரவை சகாக்களுக்கும் ‘நமது எம்.ஜி.ஆர்.’ கல்தா கொடுத்துவிட்டதாகவே தெரிகிறது.
இந்தப் பின்னணி குறித்து அ.தி.மு.க. சீனியர் ஒருவரிடம் கருத்து கேட்டோம். “ஜூன் 30-ம் தேதி மதுரையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடக்க பொதுக்கூட்ட மேடையில் நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் வினியோகம் செய்யப்பட்டபோது எடப்பாடிக்கு வலதுகரமாக இயங்கும் கொங்கு அமைச்சர்கள் இருவர் நமது எம்.ஜி.ஆர். குறித்து அவதூறாக பேசினார்கள். இது குறித்து எடப்பாடி கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களை அவர் கண்டிக்கவில்லை.
சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் அனுசரிக்காமல் கட்சியை கொண்டு செல்ல முடியாது என்பதை பெரும்பாலான நிர்வாகிகள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால் சீனியர் அமைச்சர்கள் சிலர் மட்டும் தொடர்ந்து சீண்டுவதை வாடிக்கையாக செய்கிறார்கள். கடந்த 15-ம் தேதி அமைச்சர் ஜெயகுமார் சம்பந்தமே இல்லாமல், ‘சசிகலாவை நீக்கியது நீக்கியதுதான்’ என பேட்டி கொடுத்தார். பிறகு ஏன் தேர்தல் ஆணைய அபிடவிட்களில் இன்னமும் சசிகலா பெயரைப் போட்டு கையெழுத்து வாங்குகிறீர்கள்? எனக் கேட்டால், இந்த அமைச்சரால் பதில் சொல்ல முடியுமா?
இந்த ஆட்சியை காப்பாற்றி, இவர்களை அமைச்சர்களாக தொடரச் செய்த சசிகலா இப்போது பெங்களூருவில் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார். இந்த தருணத்தில் அவருக்கு உதவாவிட்டாலும் இவர்கள் உபத்திரவம் செய்யாமல் இருக்கலாம் அல்லவா? இதை எடப்பாடியும் கண்டு கொள்வதே இல்லை. எனவேதான் துணைப் பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரன் உத்தரவுப்படி நமது எம்.ஜி.ஆர். தனது நிலைப்பாட்டை மாற்றி அமைத்திருக்கிறது!’ என்றார் அவர்.
அமைச்சர்கள் தரப்பிலோ, ‘சசிகலாவுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்தால், கட்சியும் ஆட்சியும் என்னாகும் என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே நமது எம்.ஜி.ஆர். நிலைப்பாடு குறித்து எங்களுக்கு கவலை இல்லை’ என்கிறார்கள்.
சமீப நாட்களாக அரசை பாதுகாக்கும் வகையில் தி.மு.க. மீதான ‘அட்டாக்’கும் நமது எம்.ஜி.ஆரில் இல்லை.
இதை வெறும், ‘நமது எம்.ஜி.ஆர்.’ பிரச்னையாக பார்க்கத் தேவையில்லை. டி.டி.வி.யின் டென்ஷனை வெளிப்படுத்தும் நடவடிக்கையாகவே இதைக் குறிப்பிடுகிறார்கள். ஆகஸ்ட் 5 என எடப்பாடி தரப்புக்கு கெடு வைத்திருக்கும் டி.டி.வி. அடுத்து என்ன செய்யப்போகிறாரோ?

×Close
×Close