டெங்கு சிகிச்சைக்கு நிலவேம்பு பயன்படுத்துவது குறித்து வதந்தியை பரப்புகிறவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
தமிழகத்தில் டெங்குவின் தாக்கம் முன்னெப்போதையும்விட உக்கிரமாக இருக்கிறது. 40 பேர் டெங்குவுக்கு பலியாகி இருப்பதாக தமிழக அரசு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. ஆனால் பலியானவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வருகின்றன.
டெங்குவுக்கு அலோபதியில் சரியான மருந்துகளை இதுவரை மருத்துவ துறையினர் குறிப்பிடவில்லை. அதேசமயம் சித்த வைத்தியத்தில் நிலவேம்பு குடிநீரை பரிந்துரை செய்கிறார்கள். அரசு தரப்பிலும் இதை விளம்பரப்படுத்துகிறார்கள். இந்தச் சூழலில் திடீரென, ‘நிலவேம்பு குடிநீர் மலட்டுத் தன்மையை அதிகரிக்கும்’ என ஒரு தகவல் பரவியிருக்கிறது.
இந்தச் சூழலில் தமிழக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று (அக்டோபர் 18) திருச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். அங்கு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகிறவர்களிடம் குறைகளை நேரில் கேட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
‘தமிழகத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அடுத்த 15 நாட்களில் டெங்கு இல்லாத நிலை உருவாக்கப்படும். சரியான பரிசோதனை செய்யாமல் டெங்கு என்று கூறி தனியார் மருத்துவமனைகள் பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலவேம்புக் குடிநீர் குறித்து தவறான தகவல்களைப் பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நிலவேம்பு நீர் ரத்த தட்டணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. அதனால் மலட்டுத் தன்மை ஏற்படாது. இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.