மழையில் கரைந்த அ.தி.மு.க. இணைப்பு? நிமிடத்திற்கு நிமிடம் எகிறிய பரபரப்பு

சென்னையில் பெய்த மழைக்கு இடையே அதிமுக இணைப்பு முயற்சி கரைந்து போனதாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில் ஓ.பி.எஸ். அணியில் ஏக குழப்பம் நிலவுகிறது.

சென்னையில் பெய்த மழைக்கு இடையே அதிமுக இணைப்பு முயற்சி கரைந்து போனதாகவே தெரிகிறது. இந்த விஷயத்தில் ஓ.பி.எஸ். அணியில் ஏக குழப்பம் நிலவுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை, ஜெ.வின் போயஸ் கார்டன் இல்லத்தை அரசு சார்பில் நினைவு இல்லமாக்க நடவடிக்கை என இரு அறிவிப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 17-ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தம் நிறைவுக்கு வந்துவிட்டதாக பலரும் நம்ப ஆரம்பித்தார்கள்.

ஆனால் ஓ.பி.எஸ். அணி சீனியர்களில் ஒருவரான கே.பி.முனுசாமி, ‘நாங்கள் கேட்டபடி, ஜெ. மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணையும் அமைக்கவில்லை. சசிகலாவையும் இன்னும் கட்சியை விட்டு நீக்கவில்லை.’ என அதிருப்தியை வெளிப்படுத்தி பேட்டி கொடுத்தார். அப்போதே அணிகள் இணைப்பு அவ்வளவு சுலபமில்லை என தெரிந்தது. ஆனால் அதே அணியின் இன்னொரு பிரபலமான மாஃபாய் பாண்டியராஜன், ‘இணைப்புப் பேச்சுவார்த்தையை வெளிப்படையாக நடத்த வேண்டிய நேரம் இது. ஓ.பி.எஸ்.ஸின் தர்மயுத்தத்திற்கு வெற்றி’ என அறிவித்தார்.

அணிகள் இணைப்பை எதிர்பார்த்து ஓ.பி.எஸ். வீட்டில் குவிந்த தொண்டர்கள்

இதனால் மாஃபாய் வழியில் போவதா, முனுசாமி பாதையில் செல்வதா? என ஓ.பன்னீர்செல்வம் அணியில் குழப்பம் கூடு கட்டியது. இதில் ஒரு முடிவு எடுக்க ஆகஸ்ட் 18-ம் தேதி மாலையில் தனது கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தை கூட்டினார் ஓ.பி.எஸ். இதற்கிடையே ஆகஸ்ட் 18 மத்தியானம் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஓ.பி.எஸ்.ஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வலதும் இடதுமாக இயங்கி வரக்கூடிய அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் சந்தித்தனர்.

ஓ.பி.எஸ்.ஸின் தாயார் அங்கு அனுமதிக்கப்பட்டதாகவும், அவரை பார்க்க ஓ.பி.எஸ். சென்றதாகவும் மீடியாவிடம் சொல்லப்பட்டது. அங்கு ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க சென்ற அமைச்சர்கள் இருவரும் மீடியாவை சந்திக்காமல் எஸ்கேப் ஆனார்கள். அமைச்சர்கள் வட்டாரத்தில் இந்த சந்திப்பு பற்றி கேட்டபோது, ‘ஓ.பி.எஸ்.ஸின் தாயாரை நலம் விசாரிக்க வந்ததாக’ தெரிவிக்கப்பட்டது. ஆனால் நிஜம், ஓ.பி.எஸ்.ஸின் தாயார், மருத்துவமனையில் அனுமதிக்கப்படவே இல்லை என்கிறார்கள். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்காகவே அப்படி ஒரு சாக்குபோக்கு கூறப்பட்டதாம்.

தொண்டர்களை சந்தித்த ஓ.பி.எஸ்.

ஆனாலும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரிடம், ‘மாலையில் நிர்வாகிகளிடம் பேசிவிட்டு, நல்ல முடிவை கூறுகிறேன்.’ என கூறியிருக்கிறார் ஓ.பி.எஸ். அவரிடம் பேசிய தங்கமணி, வேலுமணி ஆகியோர், ‘உங்களுக்கு தேவையான அனைத்து மரியாதையும் கிடைக்கும். இன்று இரவே அம்மா நினைவிடத்தில் எடப்பாடியும், நீங்களும் கை கோர்க்க வேண்டும்’ என கூறினர். அதற்கு ஓ.பி.எஸ்.ஸும் சிரித்தபடி தலையசைத்தாராம்.

இந்தக் காட்சிகளின் அடுத்தகட்டமாக மாலை 5 மணியில் இருந்து ஓ.பி.எஸ்.ஸின் கிரீன்வேஸ் சாலை இல்லம், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இல்லம் ஆகிய இடங்களில் தொண்டர்கள் குவிய ஆரம்பித்தனர். சொந்த ஊர்களுக்கு செல்லவிருந்த அமைச்சர்கள் அனைவரையும் பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னையில் முகாமிடச் சொன்னார் எடப்பாடி பழனிசாமி.

நிர்வாகிகளுடன் ஓ.பி.எஸ். ஆலோசனை

மெரினாவின் ஜெயலலிதா நினைவிடத்தை மாலை 5 மணியில் இருந்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அலங்கரித்தனர். (அணிகள் இணைப்புக்கு அதிகாரிகளால் ஆன அணில் உதவி?) ஒரு கூடை நிறைய பூக்களையும், 8 மலர் வளையங்களையும் அங்கு கொண்டு வந்து வைத்தனர். அவற்றில் இரு மலர் வளையங்களை மட்டும் தனியாக ஒரு இருக்கையில் எடுத்து வைத்தனர். (அந்த இரண்டும் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோர் அம்மாவின் நினைவிடத்தில் அணிவிக்க வைக்கப்பட்டதாம். மற்றவை இரு அணிகளின் சீனியர் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு!)

இந்தக் காட்சிகள்தான் அணிகள் இணைப்பை உறுதிப்படுத்துவதுபோல அனைவரையும் நம்ப வைத்தது. ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலரும் முகாமிட்டனர். அதே நேரத்தில் எடப்பாடி வீட்டுக்கு சீனியர் அமைச்சர்கள் அனைவரும் வந்தனர் . ஓ.பி.எஸ். இல்லத்தில் அவரது சகாக்கள் கூடி விவாதித்தனர். மெரினாவில் இவர்களின் இணைந்த வரவேற்புக்காக தொண்டர்கள் காத்திருந்தனர்.

இதற்கிடையே டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான வெற்றிவேல் உள்ளிட்டோர் சென்னை மைலாப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் மாலை 5 மணிக்கு கூடி தங்கள் பங்குக்கும் விவாதிக்க ஆரம்பித்தனர். நல்ல வேளையாக அவர்கள் விரைவிலேயே ஆலோசனையை முடித்துக்கொண்டு, ‘அணிகள் இணைப்புக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. வருகிற 23-ம் தேதி வட சென்னையில் நடைபெற இருக்கும் டிடிவி.தினகரனின் பொதுக்கூட்டம் தொடர்பாக பேசினோம்’ என ரிசல்ட் அறிவித்துவிட்டு சென்றார் வெற்றிவேல்.

ஆனால் கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி, ஓ.பி.எஸ். ஆகியோரின் இல்லங்களில் நடைபெற்ற ஆலோசனைகள் அனுமார் வால்போல நீண்டன. ஓ.பி.எஸ்.ஸிடம் இருந்து வரவேண்டிய தகவலுக்காக எடப்பாடி வீட்டில் அமைச்சர்கள் காத்திருந்ததாக கூறப்பட்டது. ஓ.பி.எஸ். வீட்டில் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் உள்ளிட்ட நிர்வாகிகள் இணைப்புக்கு வைக்கவேண்டிய நிபந்தனைகள் குறித்து ஓ.பி.எஸ்.ஸுக்கு பாடம் எடுத்ததாக தெரிகிறது.

அதாவது, அம்மா உயிருடன் இருந்தபோது கட்சியும் ஆட்சியும் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலைப்பாட்டில் மீண்டும் அமையவேண்டும் என வலியுறுத்த அவர்கள் ஆலோசனை கூறியதாக கூறப்படுகிறது. இதன் அர்த்தம், ஆட்சியின் முதல்வராகவும், கட்சியின் பொருளாளராகவும் ஓ.பன்னீர்செல்வம் இருக்க வேண்டும் என்பதுதான். புதிய பொதுச்செயலாளரை தேர்வு செய்யும் வரை, வழிகாட்டும் குழு அமைத்து கட்சியை வழிநடத்தலாம்; அந்தக் குழுவுக்கும் ஓ.பி.எஸ். தலைவராக இருக்க வேண்டும் என பேசப்பட்டதாகவும் தெரிகிறது.

இந்தக் கோரிக்கையை எடப்பாடி தரப்பு ஏற்கும் வரை, ‘சி.பி.ஐ. விசாரணை, சசிகலா நீக்கம்’ என பேசிக்கொண்டிருப்பது என்றும் ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்த ஆலோசனையில் பேசப்பட்டதாம். ஆனால் முதல்வர் எடப்பாடியோ முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என உறுதியாக நிற்கிறார்.

தவிர, ஓ.பி.எஸ். அணி தரப்பில் நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, பி.ஹெச்.பாண்டியன் என ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து அவர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கேட்கப்படுவதாகவும், மாஃபாய், செம்மலை ஆகியோருக்கு அமைச்சர் பதவி கேட்பதாகவும் கூறப்படுகிறது. துணை முதல்வர் பதவியை ஏற்பது குறித்து ஓ.பி.எஸ். பரிசீலிக்கத் தயார் என்பதாகவும், ஆனால் போலீஸ் துறையை அவரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் இன்னொரு தருணத்தில் எடப்பாடிக்கு தகவல் வந்து சேர்ந்திருக்கிறது.

இதனால் இணைப்புப் பேச்சுவார்த்தை இழுபறியானது. மெரினாவில் இவர்களின் வருகைக்காக காத்திருந்த தொண்டர்களும், மலர் வளையங்களும்கூட நேரம் செல்லச் செல்ல வாடத் தொடங்கின. இரவு 8 மணிக்கு மேல் பலத்த மழையும் பெய்யத் தொடங்கியது. அதன்பிறகும் தலைவர்கள் யாரும் வராததால், தொண்டர்களின் நம்பிக்கை அந்த மழையுடன் கரைய ஆரம்பித்தது.

இரவு 9 மணியளவில் ஓ.பி.எஸ். இல்லத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம் எந்த முடிவையும் எட்டாமல் முடிந்தது. அங்கிருந்து எடப்பாடியின் இல்லத்திற்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே எடப்பாடி வீட்டில் குழுமியிருந்த தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலைய ஆரம்பித்தனர். ஓ.பி.எஸ். இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும், மீடியாவிடம் யாராவது தகவல் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் மீடியாவிடம் பேசவில்லை. இதனால் அங்கு கூடியிருந்த மீடியாக்காரர்களும், தொண்டர்களும் ஏமாற்றம் அடைந்தனர்,

ஆகஸ்ட் 17, 18 ஆகிய இரு நாட்களாக நீடித்து வந்த இணைப்பு நாடகம், எந்த முடிவும் எட்டப்படாமல் இரவு 9.30 மணிக்கு முடிவுக்கு வந்தது. நம்பிக்கையுடன் தலைவர்களின் இல்லங்களிலும், கட்சி அலுவலகத்திலும், மெரினாவிலும் காத்திருந்த தொண்டர்கள் மழையில் நனைந்தபடி கலைந்தனர்.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close