அன்புமணி குடும்பத்தின் உரையாடல்? கலாய்க்கும் தி.மு.க.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, அன்புமணியின் மனைவி ஆகியோர் தங்களது வீட்டில் உரையாடுவதாக அமைந்த காட்சி அது.

ஜூலை 20-ம் தேதி தி.மு.க.வின் அதிகாரபூர்வ ஏடான ‘முரசொலி’யை புரட்டிய பலருக்கும் ஆச்சர்யம் கலந்த ஷாக்! பா.ம.க. இளைஞரணித் தலைவரான அன்புமணியை படு மோசமாக சித்தரித்து அதில் வெளியிடப்பட்டிருந்த உரையாடல்தான் அதற்கு காரணம்.

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் அதற்கு முன்தினம்தான் முடிந்திருந்தது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த சட்டமன்றக் கூட்டத்தொடரில், மருத்துவக் கனவுகளோடு தவித்துக்கொண்டிருக்கும் மாணவர்களை ‘நீட்’டில் இருந்து விடுவிக்க வழி பிறக்கவில்லை. டெல்லி வரை சென்று போராடும் விவசாயிகளுக்கு விடியல் இல்லை. கதிராமங்கலத்தில் அமைதி திரும்ப, ஆக்கபூர்வ நடவடிக்கை இல்லை. மெழுகுவர்த்தி ஏந்தியதற்கும், இயற்கையை பாதுகாக்க துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததற்கும் குண்டர் சட்டம் ஏவியதற்கு சரியான பதில் இல்லை.

இதற்கு மத்தியில் ஊழலை பொதுவிவாதமாக மாற்றி, பற்றியெறிய வைத்திருக்கிறார் கமல்ஹாசன்.

தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. தனது அத்தனை பலத்தையும் ஆளும்கட்சி மீது செலுத்தி, நிர்ப்பந்தங்களை உருவாக்க வேண்டிய தருணம் இது. இந்தச் சூழலில், சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாத ஒரு கட்சியின் தலைவரான அன்புமணிக்கு முரசொலியில் தனிக் காலம் ஒதுக்கி தாக்கித் தள்ளியிருந்ததை தி.மு.க.வில் சிலர் அதிர்ச்சியுடனும் கவனித்தனர்.

முரசொலியின் 9-வது பக்கத்தில், ‘இவர்கள் சந்திப்பில்! (கற்பனை உரையாடல்)’ என தலைப்பிட்டு ‘சிலந்தி’ என்ற பெயரில் சுமார் அரை பக்கத்திற்கு அந்த உரையாடல் இருந்தது. அதாவது, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி, அன்புமணியின் மனைவி ஆகியோர் தங்களது வீட்டில் உரையாடுவதாக அமைந்த காட்சி அது.

அன்புமணி ‘வாட்ஸ் அப்’பில் சில வீடியோக்களை பார்த்துக் கொண்டிருப்பதாக காட்சி ஆரம்பமாகிறது. அப்போது அன்புமணியின் மனைவியை அழைக்கும் ராமதாஸ், ‘உன் வீட்டுக்காரர் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்?’ என கேட்கிறார். அதற்கு அன்புமணியின் மனைவி, ‘பாகுபலி படத்தில், மகேந்திர பாகுபலியாகிய நான் என வருகிற காட்சியை அடிக்கடி ரிவைண்ட் பண்ணி பார்த்துக் கொண்டிருக்கிறார் மாமா! அவரே கைத்தட்டி சிரித்துக் கொள்கிறார். கடந்த பொதுத்தேர்தலுக்கு முன்பு வண்டலூர் பொதுக்கூட்டத்தில், அன்புமணியாகிய நான் என இவர் சொன்னதை நான் நினைவுபடுத்தினேன். அதன்பிறகே இப்படி செய்கிறார்’ என ஆதங்கமாத்துடன் கூறுவதாக கிண்டல் செய்திருக்கிறார்கள்.

அதற்கு ராமதாஸ், ‘ஏதோ குழப்பத்தில் இருப்பார்போல!’ என்கிறார்.

உடனே அன்புமணியின் மனைவி, ‘சும்மா இருந்தவருக்கு முதலைமைச்சர் ஆசையை காட்டிட்டீங்க! தேர்தல் முடிவு அவருக்கு பேரிடி ஆகிவிட்டது. இப்போ அவரது நடவடிக்கை எதுவுமே சரியில்லை’ என வருத்தப்படுவதாக உள்ளது.

தொடர்ந்து, ‘திடீர்னு தண்ணீர் கேட்கிறாரு. கொடுத்தா, அதை கீழே ஊத்தி அது ஓடுற திசையில் விரலால் கோடு போட்டு வழிமாத்திட்டு, நீர் மேலாண்மை என்கிறார். நான் முதலமைச்சர் ஆகியிருந்தா, நீர் மேலாண்மை இலாகாவை எடுத்திருப்பேன் என்கிறார்.’ என அன்புமணியைப் பற்றி அவரது மனைவியே சொல்வதாக காட்சிகள் இருக்கின்றன. பா.ம.க.வில் இணையும் மாற்று சமூகத்தினரின் பெயர்களுக்கு முன்னால் அவரவர் ஜாதிப்பெயரை எழுத அன்புமணி ஊக்குவிப்பதாகவும், பா.ம.க.வினரை சொந்த சாதியினரே நம்பவில்லை என்பதாகவும் அடுத்தடுத்து உரையாடல் நீள்கிறது.

கடைசியாக, ‘எனது முதல்வர் கனவு நிறைவேறாத ஆசையா?’ என அன்புமணி கேட்கிறார்.

அதற்கு ராமதாஸ், ‘கவலைப்படாதே! வருடம்தோறும் மாதிரி பட்ஜெட்டை நாம் போடுவதுபோல, மாதிரி மந்திரிசபை அமைப்போம். அதற்கு உன்னை முதலமைச்சர் ஆக்கிடலாம்’ என ராமதாஸே கலாய்க்கிறார். அதோடு, ‘கொஞ்சம் பத்திரமா கணவரை பார்த்துக்கமா!’ என அன்புமணியின் மனைவியிடம் ராமதாஸ் சொல்வதாக காட்சியை முடித்திருக்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பு வரை அடிக்கடி, ‘என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த ஸ்டாலின் தயாரா?’ என அன்புமணி சவால்விட்டபடி இருந்தார். அப்போதுகூட தி.மு.க. தரப்பு இந்த அளவுக்கு தனிப்பட்ட தாக்குதலை கையில் எடுக்கவில்லை. பொதுவாக தி.மு.க. தலைவர் கருணாநிதி குடும்பத்தினர் மீது அ.தி.மு.க. தரப்பு இந்த மாதிரி தனிப்பட்ட தாக்குதல் தொடுத்தால், அதற்கு பதிலடியாக தி.மு.க.வும் இதே பாணியை தொடுப்பது வழக்கம். அன்புமணி அப்படி எங்கேயும் பேசினாரா? என்று தெரியவில்லை.

ராமதாஸ் மீது இந்த உரையாடலில் சிறு விமர்சனம் கூட இல்லாததும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. இத்தனைக்கும் ராமதாஸ் இன்று வரை தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளையும் விமர்சித்து அறிக்கைகள் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார். நேரடி அரசியலில் இல்லாத அன்புமணியின் மனைவியையும் இந்த திரைக்கதையில் இழுத்து, அவர் மூலமாகவே அன்புமணியை கேலி செய்வதாக அமைந்துள்ள வசனங்கள் பா.ம.க.வினரை சூடேற்றியிருக்கிறது.

இது குறித்து தி.மு.க. தரப்பில் கேட்டபோது, ‘அண்மையில் ராமதாஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘தனிப்பட்ட முறையில் ஸ்டாலின் மீது மிகுந்த மரியாதையும் பாசமும் வைத்திருக்கிறேன். அவரை துணை முதல்வர் ஆக்கும்படி கலைஞரிடம் சிபாரிசு செய்ததே நான்தான்’ என உயர்வாகவே பேசினார். ஆனால் அன்புமணி தனது ஒவ்வொரு பேட்டியிலும் ஸ்டாலின் தொடர்பான கேள்விகளுக்கு நக்கலும் நையாண்டியுமாக பதில் சொல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். அதற்குத்தான் இந்த சூடு!” என்கிறார்கள்.

பா.ம.க. தரப்பிலோ, “விவசாயிகள் பிரச்னையில் ஸ்டாலின் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து தி.மு.க. நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர். அதை புறக்கணித்ததில் இருந்து ஸ்டாலினுக்கு எங்கள் மீது கோபம்!

காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ‘நீட்’ பிரச்னையிலும், ஸ்டாலின் வலுவாக எதையும் செய்யவில்லை. ஆனால் காவிரி பிரச்னைக்காக அன்புமணி, ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தார். ‘நீட்’டுக்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆகியோரை தனி நபராக சந்தித்து அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஜூலை 21-ல் சென்னை சேப்பாக்கத்தில் உண்ணாவிரதமும் இருக்கிறார். இதன்பிறகே ஸ்டாலின் அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து, ஜூலை 27 அன்று மனித சங்கிலி நடத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறார். கமல்ஹாசனையோ, ரஜினியையோ நம்பாமல் அன்புமணி செய்யும் அரசியலில், ஸ்டாலினுக்கு நெருக்கடி அதிகமாகிறது. அதனால்தான் இந்தப் பாய்ச்சல்!” என்கிறார்கள். இது இன்னொரு அறிக்கைப் போராக நீளும் வாய்ப்பு இருக்கிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close