நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி.யை கைப்பற்றுவோம் என எடப்பாடி - ஓ.பி.எஸ். தலைமையில் கூடிய அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையிலான அதிமுக அணிகள் இணைந்த பிறகு, அதிகாரபூர்வமான முதல் நிர்வாகிகள் கூட்டம் ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெற்றது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தின் முதல் தீர்மானம்
டிடிவி.தினகரன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் திரண்டு ஆட்சிக்கு நெருக்கடியை உருவாக்கும் சூழலில், இந்தக் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு ..
முதல் தீர்மானத்தின் தொடர்ச்சி...
தீர்மானம் 1: அதிமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் கட்சி விதி 30 (5)-க்கு விரோதமாக டிடிவி.தினகரன் நியமிக்கப்பட்டதாலும், கடந்த மார்ச் 3-ம் தேதி டிடிவி.தினகரனை கட்சி நிர்வாகிகளில் ஒருவராக ஏற்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டதாலும் ஆகஸ்ட் 10-ம் தேதி அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
அதிமுக பொதுச்செயலாளராக ஒரு இடைக்கால ஏற்பாடாக நியமனம் செய்யப்பட்ட சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்காத நிலையில், அவரால் நியமனம் செய்யப்பட்ட டிடிவி.தினகரன் கழகத்தில் செயல்படுவது சட்டதிட்ட விதிகளுக்கு புறம்பானது. புதிதாக நிர்வாகிகளை நியமிக்கவும், நீக்கவும் அவருக்கு அதிகாரம் கிடையாது. எனவே ஜெயலலிதாவால் நியமனம் செய்யப்பட்ட தலைமைக்கழக நிர்வாகிகளும், கட்சியின் விதிப்படி தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளும் தொடர்ந்து செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
2-வது தீர்மானம்
தீர்மானம் 2 : ஜெயலலிதா முயற்சியாலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் பங்களிப்பாலும் தொடங்கப்பட்ட நமது எம்.ஜி.ஆர். நாளேடும், ஜெயா டி.வியும் கழகத்தின் சொத்துகள். அவற்றை ஜெயலலிதாவின் புகழ்பாடும் அமைப்புகளாக செயல்படுவதை உறுதி செய்ய தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது.
3-வது தீர்மானம்
தீர்மானம் 3 : அதிமுக.வின் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டவேண்டும் என நிர்வாகிகளும் தொண்டர்களும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதன்படி விரைவில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டுவது என முடிவு செய்யப்படுகிறது.
4-வது தீர்மானம்
தீர்மானம் 4 : கழகமும், கழக அரசும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழக மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என ஜெயலலிதா சூளுரைத்தார். அந்த சூளுரையை தொண்டர்கள் இதயத்தில் பதித்துள்ளார்கள். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் அனைவரும் கட்டுக்கோப்புடன் செயல்பட்டு கழகத்தையும், கழக அரசையும் காப்பாற்ற இயன்ற அனைத்தையும் செய்வது என தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.