துணை ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்காத அன்புமணி!

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு எதிரான பிரசார பயணத்தில் இருந்தார் அன்புமணி.

ஜனாதிபதி தேர்தலைப் போலவே துணை ஜனாதிபதி தேர்தலிலும் அன்புமணி வாக்களிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் இரு அவை எம்.பி.க்களும் வாக்களித்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்கிறார்கள். இரு அவைகளின் மொத்த எம்.பி.க்கள் 790. இதில் 4 காலியிடங்கள், வாக்களிக்க தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒரு எம்.பி. ஆகியோரை தவிர்த்து 785 எம்.பி.க்கள் வாக்களிக்கும் தகுதி பெற்றார்கள். ஆனால் ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெற்ற துணை ஜனாதிபதி தேர்தலில் 775 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்தனர். 14 பேர் வெவ்வேறு காரணங்களுக்காக வாக்களிக்க வரவில்லை.

ஆனாலும் இந்திய துணை ஜனாதிபதி தேர்தல் சரித்திரத்தில் இதுதான் அதிகபட்ச வாக்குப்பதிவு! இதற்கு முன்பு 2002-ம் ஆண்டு நடந்த துணை ஜனாதிபதி தேர்தலில் 759 பேர் வாக்களித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்தத் தேர்தலில் ஜெயித்தவரும் பா.ஜ.க.வின் பைரோன்சிங் ஷெகாவத் தான்!

இந்த முறை வாக்களிக்காத 14 எம்.பி.க்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்த 4 பேர், பா.ஜ.க., காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர், தேசியவாத காங்கிரஸ், பா.ம.க. ஆகிய கட்சிகளை சேர்ந்த தலா ஒருவர், சுயேட்சை மற்றும் நியமன எம்.பி.க்களில் தலா ஒருவர் அடங்குவர்!

பா.ம.க.வின் ஒரே எம்.பி.யான அன்புமணி ராமதாஸ், ஜனாதிபதி தேர்தலிலும் வாக்களிக்க வில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எந்த அணி வாக்குறுதி கொடுக்கிறதோ, அந்த அணிக்கே ஆதரவு என அவர் அறிவித்திருந்தார். ஒரு ஓட்டுக்காக அப்படியொரு வாக்குறுதியை கொடுக்க இரு அணிகளும் தயாரில்லை. எனவே அன்புமணி இரு தேர்தல்களிலும் வாக்களிக்க வில்லை.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற ஆகஸ்ட் 5-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு எதிரான பிரசார பயணத்தில் இருந்தார் அன்புமணி. ஆனாலும் இந்தத் தேர்தலை புறக்கணித்தது குறித்து பா.ம.க. தரப்பிலிருந்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வரவில்லை.

×Close
×Close