புதுவைக்குத் தேவை, தனி மாநில அந்தஸ்தே! காவிக்கு இடம் தராதீர்! கி. வீரமணி

முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சிகள் (காங்கிரஸ்) கலைக்கப்பட்டன! இதனை உச்சநீதிமன்றம் வன்மையாக கண்டித்தது.

மாநில ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு தானே இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இது தலைகீழாக உள்ளது என திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கி வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: துணை ஆளுநரைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குத் தொல்லைகள் கொடுப்பதா? புதுவைக்குத் தேவை, தனி மாநில அந்தஸ்தே! புரட்சிக் கவிஞர் பிறந்த மண்ணில் காவிக்கு இடம் தராதீர்!

பிரதமர் மோடி தலைமையில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஆட்சியில், மாநில ஆளுநர்களே – வேலியே பயிரை மேய்வதுபோல, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கடமைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு வருகின்றது.

எடுத்துக்காட்டாக, முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திரகாண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கே நடைபெற்ற ஆட்சிகள் (காங்கிரஸ்) கலைக்கப்பட்டன! இச்செயலை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது நாடறிந்த செய்தியாகும்.

எதிர்க்கட்சி வசம் (ஆம் ஆத்மி கட்சி வசம்) இருக்கிறது என்பதால், டில்லியில் அவ்வாட்சியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப்படுகிறது – அங்குள்ள துணை நிலை ஆளுநர் மூலமாக! கோவா, மணிப்பூர் – மாநிலங்களில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை நடைபெற்ற தேர்தல்களில்.

எவை எண்ணிக்கையில் பெரிய கட்சிகளோ அவைகளை அழைத்து ஆட்சி அமைக்கக் கேட்டுக் கொள்வதே, ஆளுநர்கள் கடைப்பிடித்த முறை; ஆனால் இவ்விரண்டு மாநிலங்களில் (துணை நிலை) ஆளுநர்களின் துணை கொண்டு, அதிக எண்ணிக்கை கொண்ட காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், பா.ஜ.க.வையே (அதன் உறுப்பினர்கள் குறைவாக இருந்த போதிலும்) ஆட்சி அமைக்க அழைத்து, கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவித்து, ஆட்சியை பா.ஜ.க. பறித்துக் கொண்டு விட்டது.

கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அரசுகளுக்கு எவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்து வர முடியுமோ அதை லாவகமாகவே செய்து வருகின்றனர். மம்தாவின் மேற்கு வங்க மாநிலத்திலும் ஆளுநர் தன்னை மிரட்டியதாக அவர் அறிக்கை விடவில்லையா?

மாநில ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு தானே இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இது தலைகீழாக அல்லவா உள்ளது. இது எவ்வளவு வேதனை, வெட்கக் கேடு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

×Close
×Close