சென்னை மயிலாப்பூரில் கார் மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 5 பேரை கைது செய்துள்ள போலீஸார் 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில், நேற்றிரவு ஆட்டோக்களை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியே வந்த கார் ஒன்று அங்கு நின்றுகொண்டிருந்த ஆட்டோக்கள் மீது அதிவேகமாக வந்து மோதி விபத்துக்குள்ளாது. இதில், அங்கிருந்த ஆட்டோக்கள் சேதமடைந்ததுடன், ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் உடல் நசுங்கி உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்த 5 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக அடையாறு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காரை ஓட்டி வந்தது சென்னை லயலோ கல்லூரியைச் சேர்ந்த நவீத் அகமது என்பதும், காரில் வந்த 5 பேரும் கல்லூரி மாணவர்கள் என்பதும் தெரியவந்தது. காரில் வந்தவர்களில் நவீத் அகமது மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்த போலீஸார், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், விபத்து ஏற்படும் என தெரிந்தே அஜாக்கிரதையாக கார் ஓட்டுதல், கொடுங்காயம் விளைவித்தல், அதிவேகமாக வானத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்துதல், அதிவேகமான காரை இயக்க தூண்டுதல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டுள்ள காரில் இருந்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பாஸ் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.