scorecardresearch

பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் கேலிக்குரியது: துரைமுருகன் சாடல்

அதிமுக அரசில் இருந்த பன்னீர்செல்வம் குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

பன்னீர்செல்வம் ஆர்ப்பாட்டம் கேலிக்குரியது: துரைமுருகன் சாடல்
Tamil Nadu News Today Live, Tamil Nadu News in Tamil Live

அதிமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: அதிமுகவிலிருந்து பிரிந்து வந்து ஒரு சிறு குழுவை வைத்துக் கொண்டு, ”அதிமுக கட்சியும் எனதே! அடுத்த முதல்வர் பதவியும் எனதே!” என்று அரசியல் உலகில் ஜீவித்துக் கொண்டிருக்கும் மூன்று முறை முதல்வர் நாற்காலியை அலங்கரித்த பன்னீர்செல்வமும், அவருடைய அண்ட் கோ-க்களும், சென்னை குடிநீர் பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பத்திரிகைகளில் படித்தபோது, அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை.

சென்னை என்பது ஒரு நகரம். அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்கு உயிர்வாழ குடிக்க தண்ணீர் அவசியம். அதைத் தரவேண்டியது அரசின் கடமை என்ற ஞானோதயம் பன்னீர்செல்வத்திற்கு இப்பொழுதுதானா வந்தது. ஐயோ, பாவம்! சென்னை மக்கள்..!

சென்னைக்கு குடிநீர் எங்கெல்லாமிருந்து வருகிறது, அதை யார் கொண்டு வந்தார்கள் என்று பார்ப்போம். சென்னை நகரின் குடிநீர் ஆதாரங்கள், பூண்டி – சோழவரம் – புழல் – செம்பரம்பாக்கம் போன்ற ஏரிகளும் மற்றும் நிலத்தடி நீரும் ஆகும். சென்னை மாநகரத்தில், ஆண்டுக்காண்டு மக்கள் தொகை, அதிகரித்துக் கொண்டே போவதாலும் – பருவமழையும் அடிக்கடி பொய்த்து விடுவதாலும், இந்த ஏரிகளில் உள்ள தண்ணீர், விநியோகத்திற்கு போதவில்லை.

எனவே, வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வரும் நிலை அரசுக்கு ஏற்பட்டுவிட்டது. கிருஷ்ணா நீரை சென்னைக்கு கொண்டு வரும் திட்டம், கடல்நீரை குடிநீராக்கி சென்னை மக்களுக்கு வழங்கும் திட்டம், மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், புதிய வீராணம் திட்டம் ஆகியவை கொண்டு வரப்பட்டன. இதில் அதிமுக அரசின் பங்கு பூஜ்யம்.

அத்திபூத்தது போல், அதிமுக ஆட்சியிலும் ஒரு திட்டம் வந்தது. அதுதான் புதிய வீராணம் திட்டம். வீராணம் ஏரி, காவிரியை நம்பி இருக்கும் ஏரி. காவிரியில் தண்ணீர் வராதபோது, வீராணத்தில் தண்ணீர் இருக்காது. எனவே, இத்திட்டம் பெயர் அளவிற்குத்தான் உள்ளது.

அதிமுக ஆட்சியில் குறிப்பாக, ஜெயலலிதாவின் ஆட்சியில், பன்னீர்செல்வத்தின் பரிபாலனத்தில், சென்னை மாநகரத்துக்கு குடிநீர் பிரச்சினையை தீர்க்க, ஏதாவது ஒரு திட்டம் தீட்டி நிறைவேற்றியது உண்டா? ஆனால், வெற்று அறிவிப்புகள் – பொய்யான உறுதிமொழிகள் வழங்கியதில் மட்டும் குறைச்சல் இல்லை.

தலைவர் கருணாநிதியின் ஆணையை ஏற்று, அன்றைய உள்ளாட்சித் துறையை வைத்திருந்த ஸ்டாலின் முயற்சியால் முடித்து வைக்கப்பட்ட நெம்மேலி திட்டத்தை 22-2-2013 அன்று திறந்து வைத்து முதல்வரான ஜெயலலிதா என்ன பேசினார்? நெம்மேலியில் நாள் 1க்கு 100 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ஒன்று புதியதாக துவங்கப்படும் என்று பேசினாரா? இல்லையா?ஜெ. பேசியது 2013ஆம் ஆண்டில். இப்போது 2017, இதுவரை அந்த திட்டம் துவக்கப்பட்டதா?

2013-2014-ம் ஆண்டு மானியக் கோரிக்கையில், அதே உறுதிமொழி, “நெம்மேலி அருகே நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் ஒன்றினை நிறுவி, நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளன” என்று படிக்கப்பட்டதே?, செயல்படுத்தப்பட்டதா?. ஒரு சொட்டு கடல் நீரையாவது தொட்டுப் பார்த்தது உண்டா?.

2012-2013-ம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் “400 மில்லியன் லிட்டர் கடல்நீர் குடிநீராக்கப்படும்” என்ற உறுதிமொழியை திருப்பி திருப்பி சொல்ல, வெட்கப்பட்டிருக்க வேண்டாமா பன்னீர்செல்வம்.

ஒரு திட்டத்தை 2013-ம் ஆண்டு சொல்லத் தொடங்கி, அதையே 2017-ம் ஆண்டு வரை, மானியக் கோரிக்கையில் திருப்பி திருப்பி படித்துக் கொண்டேயிருக்கின்ற நிலைக்கு கொஞ்சம்கூட வெட்கப்படாத அரசு, அ.தி.மு.க. அரசு. அந்த அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று கூறப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Durai murugan attacks ops protest