துரைமுருகன் திமுக.வின் புதிய பொருளாளர் ஆகிறார். 10 ஆண்டுகளுக்கு முன்பு மு.க.ஸ்டாலினுக்காக பதவியிறக்கத்திற்கு சம்மதித்ததால் கிடைக்கும் பரிசு இது!
துரைமுருகன், மாணவர் காலத்தில் இருந்து திமுக.தான்! சட்டக்கல்லூரி மாணவராக போராட்டங்களில் குதித்தவர்! எம்.ஜி.ஆர். உதவி பெற்று கல்லூரிப் படிப்பை முடித்தவர் என்றாலும், அரசியலில் என் தலைவர் கருணாநிதிதான் என உறுதியாக இருந்தவர்! எம்.ஜி.ஆர். நேரடியாக அழைத்தும் அதிமுக.வுக்கு போகாதவர்!
தமிழ்நாட்டின் பூகோள, அரசியல் நிலவரங்களை மிகத் துல்லியமாக அறிந்த திமுக நிர்வாகியும் அவரே! திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, அவரது பதவியை நிரப்ப மு.க.ஸ்டாலின் தயாராக இருப்பது பெரிய ரகசியம் இல்லை. ஏற்கனவே செயல் தலைவர் என்ற முறையில் தலைவர் பதவிக்குரிய பொறுப்புகளை கவனித்து வருபவர்தான் மு.க.ஸ்டாலின்!
ஆனால் மு.க.ஸ்டாலினிடம் இருக்கும் பொருளாளர் பதவியை நிரப்ப இருப்பவர் யார்? என்பதுதான் உடன்பிறப்புகள் மத்தியில் நீடித்து வந்த விவாதம்! அதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. கட்சியில் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்தபடியான சீனியர் தலைமைக்கழக நிர்வாகியான துரைமுருகனே பொருளாளர் பதவியில் அமர்த்தப்பட இருக்கிறார்.
ஆகஸ்ட் 28-ம் தேதி கூடவிருக்கும் திமுக பொதுக்குழுவில் கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினும், புதிய பொருளாளராக துரைமுருகனும் தேர்வு செய்யப்படுவது உறுதி ஆகிவிட்டது. முன்னணி நிர்வாகிகளுக்கு இந்தத் தகவல் சொல்லப்பட்டுவிட்டது.
பலத்த போட்டிகளுக்கு மத்தியிலேயே இந்தப் பதவியை துரைமுருகன் எட்டிப் பிடிக்கிறார். இது தொடர்பாக திமுக மேல்மட்ட நிலைமைகளை அறிந்த சிலர் கூறுகையில், ‘திமுக.வில் தலைவர் பதவிக்கு அடுத்த படியான முக்கிய பதவி பொதுச்செயலாளர் பதவி! ஆனால் அதைவிட சென்ஸிட்டிவான பதவி, பொருளாளர் பதவி!
திமுக தொடர்பான அறக்கட்டளைகள், கட்சி நிதி ஆகியவற்றை கையாளுவதில் பொருளாளருக்கும் முக்கிய பங்கு இருக்கிறது. திமுக.வின் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர். கிளப்பிய ‘கட்சி வரவு-செலவு கணக்கு’ புயல்தான், இன்னொரு புதிய கட்சிக்கு வித்தானது! அந்த வித்தில் உருவான அதிமுக-தான் 46 ஆண்டுகளாக திமுக.வுக்கு ‘தண்ணி’ காட்டுகிறது.
எனவேதான் எம்.ஜி.ஆருக்கு பிறகு மிக கவனமாக பொருளாளர்களை நியமித்தார் கருணாநிதி. அந்த வரிசையில் சாதிக் பாட்ஷா, ஆற்காடு வீராசாமி ஆகியோர் கருணாநிதியின் விழியசைவைக் கூட புரிந்துகொண்டு அதற்கேற்ப காரியம் ஆற்றியவர்கள்!
தற்போது பொருளாளர் பதவியை திருவண்ணாமலை மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலுவுக்கு வழங்க மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் விரும்பியதாக கூறப்பட்டது. ஆனால் எ.வ.வேலு, அதிமுக.வில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக.வுக்கு வந்தவர்! அவருக்குக் கொடுத்தால் பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் அதிருப்திக்கு ஆளாவார்கள் என மு.க.ஸ்டாலினிடம் கூறப்பட்டது.
மு.க.ஸ்டாலினின் அடுத்த சாய்ஸாக ஆ.ராசா இருந்ததாக கூறுகிறார்கள். 2ஜி வழக்கில் பெரிய புயல்களை சந்தித்தபோதும், கட்சித் தலைமைக்கு எந்த இடத்திலும் பாதிப்பு நிகழாமல் நடந்து கொண்டவர்! எங்கேயும், ‘லூஸ் டாக்’ விடமாட்டார். பொருளாதார ரீதியாகவும் கட்சிக்கு பலம் சேர்க்கக்கூடியவர்! அவரை பொருளாளர் ஆக்கினால், ‘தாழ்த்தப்பட்டவருக்கு உயர் பதவி வழங்கியதாக கூறி’ மற்றவர்களை சமரசம் செய்யலாம் என்பது ஸ்டாலினின் எண்ணமாக இருந்தது.
ஆனால் இந்தக் கட்டத்தில் துரைமுருகன் கொந்தளித்துவிட்டார். திமுக.வில் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோருக்கு அடுத்தபடியாக 4-வது இடத்தில் அமர்ந்தவர் துரைமுருகன்! 2008-ல் ஸ்டாலின் பொருளாளர் பதவிக்கு வந்தபோது, அதுவரை பொருளாளர் பதவியை வகித்து வந்த ஆற்காட்டாருக்கு என்ன பதவியை கொடுப்பது? என்கிற கேள்வி எழுந்தது.
அப்போது முதன்மைச் செயலாளராக இருந்த துரைமுருகன், ‘தம்பியின் புரமோஷனுக்காக நான் எனது பதவியை ஆற்காட்டாருக்கு விட்டுக் கொடுக்கிறேன்’ என்றார். அதனால் ஆற்காட்டார் முதன்மை செயலாளராக பொறுப்பேற்றார். துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளராக ‘டீபுரமோட்’ ஆனார். பின்னர் கருணாநிதி தீவிர அரசியலில் இருந்து ஓய்வுக்கு சென்றதும் ஆற்காட்டார் ‘டம்மி’ ஆக்கப்பட்டு, பழைய முதன்மைச் செயலாளர் பதவியை துரைமுருகன் மீண்டும் பிடித்தார். பழையபடி கட்சியில் 4-வது இடத்தையும் (கருணாநிதி, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோருக்கு அடுத்தபடியாக) துரைமுருகன் உறுதி செய்தார்.
தற்போது பொருளாளராக ஆ.ராசா, எ.வ.வேலு என யார் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் துரைமுருகனைவிட ரொம்பவும் ஜூனியர்களே! எனவே ஜூனியர்களுக்கும் கீழாக 4-வது இடத்திலேயே தொடர்வதில் துரைமுருகனுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை.
பேராசிரியர் அன்பழகன் ஒதுங்கினால், அவர் வகிக்கும் பொதுச்செயலாளர் பதவியை பெறுவது துரைமுருகனுக்கு விருப்பமானதாக இருந்தது. ஆனால் எதற்குமே ‘நோ’ சொல்லாத அன்பழகனின் ஒத்துழைப்பை இழக்க ஸ்டாலின் தயாரில்லை. எனவேதான் துரைமுருகன் பொருளாளர் பதவியை பிடித்தே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மு.க.ஸ்டாலினை சுற்றியிருப்பவர்களில் பலருக்கு இதில் அவ்வளவு உடன்பாடில்லை. ஆனால் ஒருபக்கம் அழகிரியின் தர்மயுத்தம், இன்னொருபுறம் கனிமொழி தரப்பு எதிர்பார்ப்புகள் ஆகியவற்றுக்கு இடையே துரைமுருகனின் விருப்பத்தை நிறைவு செய்வதைத் தவிர ஸ்டாலினுக்கு வேறு வழி இல்லை. அதனால் அவரும் ‘ஓ.கே’ கூறிவிட்டார்’ என்கிறார்கள் அவர்கள்!
திமுக.வில் மாவட்ட துணைச் செயலாளர் பதவியில் எஸ்.சி. பிரிவைச் சேர்ந்த ஒருவரை கட்டாயம் தேர்வு செய்யும் வகையில் சட்ட விதி இருக்கிறது. அதேபோல துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரும் எஸ்.சி. வகுப்பைச் சேர்ந்தவராக இருப்பார்! சுந்தரம், பரிதி இளம் வழுதி ஆகியோர் இந்தப் பொறுப்புகளில் இருந்தனர்.
தற்போது வி.பி.துரைசாமி, துணைப் பொதுச்செயலாளராக இருக்கிறார். அவர் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்! தாழ்த்தப்பட்டோருக்கான உள் ஒதுக்கீட்டில் அருந்ததியர் சமூகம் வருவதால், எஞ்சிய 18 சதவிகித எஸ்.சி. மக்களுக்கான பிரதிநிதி யாரும் இல்லை என சிலர் குரல் எழுப்பி வருகிறார்கள். ஆ.ராசா அங்கீகாரம் பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்ததால் எழுகிற அதிருப்தியாகவும் இதை பார்க்கலாம்!
சற்குணபாண்டியன் வகித்த துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் இன்னும் யாரும் நியமிக்கப்படவில்லை. அந்த இடத்தில் தற்போதைய மகளிரணி செயலாளர் கனிமொழி நியமிக்கப்படலாம் என்கிற பேச்சும் இருக்கிறது. ஆனால் துணைப் பொதுச்செயலாளர் பதவி குறித்து பொதுக்குழுவில் விவாதிக்க அவசியம் இல்லை. எனவே பொதுக்குழுவுக்கு பிறகுகூட அந்த அறிவிப்பு வரலாம்!
பொன்முடி, கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் இந்த சீஸனில் தங்களுக்கு புரமோஷன் இல்லாததை அதிருப்தியுடன் பார்க்கிறார்கள். காரணம், 2001 சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்திலேயே, ‘இதுதான் நான் போட்டியிடும் கடைசி தேர்தல்’ என பிரசாரம் செய்தார் கருணாநிதி!
அப்போதே மு.க.ஸ்டாலினிடம் கட்சித் தலைவர் பதவியை கருணாநிதி கொடுத்துவிடுவார் என பேசப்பட்டது. அது நிகழ்ந்தால், சீனியர்கள் மொத்தமாக ஓய்வுக்கு அனுப்பப்பட்டு ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக பொன்முடி அல்லது கே.என்.நேரு பொதுச்செயலாளர் பதவியை வகிப்பார்கள் என கூறப்பட்டது.
ஆனால் கடந்த 18 ஆண்டுகளாக ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்து வரும் வி.ஐ.பி.க்களால் இன்னும் மாவட்டச் செயலாளர் என்கிற நிலையைத் தாண்டி வர முடியவில்லை. ஸ்டாலின் மட்டுமே படிப்படியாக இளைஞரணி மாநில செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், செயல் தலைவர், தலைவர் என வளர்ந்திருக்கிறார்.
முன்னணி நிர்வாகிகளின் மனதில் உறுத்தும் இந்த அதிருப்திகளை சமாளிப்பதும் ‘தலைவர்’ ஸ்டாலினுக்கு ஒரு சவால்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.