சட்டப்பேரவையில் சர்வாதிகாரம் நடைபெறுகிறது என பேரவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரை முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் 14-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. பல்வேறு துறைகள் மீதான மானியக் கோரிக்கைகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, இன்றைய நிகழ்வுக்காக சட்டப்பேரவை கூடியது. பேரவையை துணை சபாநாயகர் நடத்தினார்.
சட்டபேரவை சபாநாயகர் தனபால் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அவையை ஏற்று நடத்தினார். பேரவை கூடியதும், உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் உள்ள சபாநாயகரின் உடல்நிலை குறித்து அறிய எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரை முருகன் விருப்பம் தெரிவித்தார். "சபாநாயகர் தனபால் நலமுடன் உள்ளார், இன்று வீடு திரும்பி நாளை அவையை நடத்துவார்" என துரைமுருகனுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் பதிலளித்தார்.
தொடர்ந்து, அவை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அவைக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி திமுக உறுப்பினர் ஜெ.அன்பழகனை அவையில் இருந்து வெளியேற்றி துணை சபாநாயகர் நடவடிக்கை எடுத்தார். அவையில் இருந்து திமுக உறுப்பினர் வெளியேற்றப்பட்டதை கண்டித்து திமுக-வினரும் வெளிநடப்பு செய்தனர்.
பேரவையில் இருந்து வெளியேறிய எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சட்டப்பேரவையில் சர்வாதிகாரம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்ய தூண்டும் வகையில் ஆளுங்கட்சியினர் செயல்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை திமுக மீது ஆளுங்கட்சி வைக்கிறது. ஆனால், அந்த புகார்களுக்கு பதில் கூற அனுமதி அளிக்கவில்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக வெளியான செய்தியையடுத்து, அது குறித்து பேரவையில் விவாதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என திமுக-வினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினமும் குட்கா விவகாரம் தொடர்பாக பேரவையில் இருந்து துரைமுருகன் தலைமையில் திமுக-வினர் வெளிநடப்பு செய்தனர். அதேபோல், குட்கா விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக-வினர் வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.